முக்கியக் கருத்து
- தேவ மனிதனின் அழிவை ஏற்படுத்த வருபவர்கள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
- தாழ்மை மனப்பான்மையுள்ள தேவ மனிதனுக்கு தேவ உதவி தீவிரமாய்க் கிடைக்கும்.
முன்னுரை
இந்த சங்கீதம் 40 வது சங்கீதத்தின் கடைசி 13 முதல் 17 வரையான 5 வசனங்களைத் தனியாகப் பிரித்து மீண்டும் ஒரு தனி அதிகாரமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த சங்கீதம் முந்தின சங்கீதமாகிய 69 ஆம் சங்கீதத்தின் கருத்தின் ஒரு பகுதியையும் ஒத்திருக்கிறது. இந்தப் பகுதியைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதில் உள்ள பலனை நினைத்து நினைப்பூட்டும் பாடலாக எழுதப்பட்டுள்ளது.
1. (வச.1-3) தேவனுடைய அவசரமான உதவியை நாடும் விண்ணப்பமாக இந்தப் பாடல் ஏறெடுக்கப்படுகிறது. தேவ மனிதனின் உயிரை மாய்க்க வருபவர்களுக்கு எதிராக தேவன் அவசர உதவியை அனுப்பி சத்துருக்கள் வெட்கப்பட்டுப் பின்னிட்டுப் போக வேண்டுமென்ற தாவீதின் வேண்டுதலை தேவன் அநேகமுறை கேட்டு பதிலளித்திருக்கிறார்.
விசுவாசிகளாகிய நாம் நமது ஆபத்து நேரத்தில் இந்த விண்ணப்ப ஜெபத்தை பயன்படுத்தவே, நமக்கு நினைப்பூட்டும் விதத்தில், இந்த பகுதி தனியாக எழுதப்பட்டுள்ளது.
2. (வச.4-5) சிறுமையும் எளிமையுமானவன் என்று சொல்லும்போது, தாழ்மை மனப்பான்மையைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு தேவ உதவி, தயவு தீவிரமாக வரும். தண்ணீர் உயர் மட்டத்திலிருந்து தாழ் மட்டத்திற்கு வேகமாக
பாய்வதுபோல தேவ கிருபையும் எளிமையுமான மனநிலையுள்ளவர்களுக்கு மிக வேகமாக கிரியை செய்யும் (வச.4). ஆகவேதான், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில்,
"ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது' என்று மத்தேயு 5:3 ஆம் வசனத்தில் சொன்னார். எளிமை என்பது படிப்பறிவற்றவர்களையோ, ஏழையானவர்களையோ குறிப்பதல்ல என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அது மனத்தாழ்மையையும் சாந்த குணத்தையும் குறிக்கிறது.
ஆகவே, கர்த்தரைத் தனது எல்லா தேவைகளுக்கும் தேடும் தேவ மக்கள் தேவன் அருளும் இரட்சிப்பில் திருப்தியடைந்து மன நிறைவுடன் சந்தோஷப்பட்டு தேவனுக்கு மகிமை செலுத்துவார்கள் (வச.5).
Author: Rev. Dr. R. Samuel