முக்கியக் கருத்து
- தேவனுடைய வீட்டில் வாசமாயிருப்பது பாக்கியமானது.
- தேவனுக்கு துதியும், பொருத்தனையும் சேர்ந்து செலுத்தப்படவேண்டும்.
- தேவன் சர்வ பூமியையும் ஜீவராசிகளையும் பராமரிக்கிறார்.
வச.1 - சீயோன் என்பது எழுத்தின்படியும், ஆவியின்படியும் தேவன் வாசம்செய்யும் இடம். தேவனுடைய வீட்டில் தேவனுக்கு துதியும் பொருத்தனைகளும் உள்ளன. அதாவது, தேவன் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ,இருதயத்தில் வாசம் செய்ய வேண்டுமானால் உதட்டளவில் அவரை துதிப்பது மட்டும் போதாது. தேவனுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிற பொருத்தனைகளையும் செய்ய வேண்டியது மிக அவசியம்.
"... பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது'
என்று ஏசாயா 6:3 வசனத்தில் தேவ தூதர்கள் கூறுவதை வாசிக்கிறோம்.
வச.2 - நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பவர். ஆகவே, மாம்சமான யாவரும் அவரிடம் வந்து தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். ஆனாலும், தேவன் தமது திருவுள சித்தப்படியே பதில் கொடுக்கிறார் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
"நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்' (யோவான் 14:13,14) என்று வாசிக்கிறோம்.
நம்முடைய அனேக ஜெபங்கள் பதிலளிக்கப்படாமலும், அனேக ஜெபங்களுக்கு உடனே கர்த்தர் பதிலளித்து ஆதரவளிப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். மாம்சமானயாவரும் தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கர்த்தரை கட்டாயமாக தொழுதுகொள்ளும் நாள் வரும்.
"இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் ... முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் ... இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், ...' என்று பிலிப்பியர் 2:10,11 வசனங்களில் வாசிக்கிறோம்.
வச.3 - ஆனால், கர்த்தரிடம் நம் விருப்பப்படி வருவதை பிசாசு நம் மாம்ச இச்சை, சிந்தை தவறான அறிவு இவற்றின் மூலம் கெடுக்கிறான். "அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது;...' என்று தாவீது இந்த வசனத்தில் தனது சொந்த அனுபவத்தை விவரிக்கிறான். ஆனால், தேவன், இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த பாவ சுபாவத்தை மேற்கொண்டு தம்மை அண்டிக்கொள்ள பெலன் தருகிறார் என்பதையும் அறிக்கையிடுகிறான் தாவீது. இந்த அனுபவத்தை அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 7,8 ஆம் அதிகாரங்களில் மிக தெளிவாக விளக்கியிருக்கிறான்.
வச.4 - இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் மேற்கொண்டு, தேவபெலனால் கர்த்தருடைய பிரகாரத்தில் வருகிறவர்கள் மிகவும் பாக்கியவான்கள். அது எப்படி முடியும்? எபிரேயர் 10:10-22 வசனங்களில் வாசிப்பதுபோல இயேசுகிறிஸ்துவின் தியாக பலியினால் மாத்திரமே முடியும். அவர் தமது இரத்தத்தை ஒரே தரம் சிந்தி, பாவ மனிதனை, மன்னித்து, மீட்டுக்கோண்டு,பரிசுத்தமாக்கி,தம்மிடம் சேர்த்துக்கொள்கிறார் என்ற சத்தியம் இதை வாசிக்கும் அன்பர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியவேண்டும்.
வச.5 - பூமியின் எல்லையெங்குமுள்ள சகல ஜீவ ராசிகளும் நம்பும் தேவன், நீதியாக கிரியைகளை நடப்பிப்பார். எவ்வளவேனும் அவரிடம் அநீதியோ, பாரபட்சமோ காணப்படமாட்டாது. பலர் பல நோக்கங்களோடு அவரை அணுகினாலும், ஜெபித்தாலும் அவர் தமது நீதியின்படியே அனைவருக்கும் பதிலளிப்பார்.
உண்மையாய் தேவ நீதியை விரும்பி, நாடி அவரிடம் வருகிறவர்கள் திருப்தியடைவார்கள்.
வச.6-13 - தேவன் தாம் படைத்த இந்த பூமியை பராமரிக்க வல்லவராயிருக்கிறார். பிசாசு இந்த பூமியைக் கெடுத்து கறைபடுத்தியிருந்தாலும்கூட தேவன் இந்த பூமியை வெறுக்காமல் பகல் இரவு எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும், வரப்புகள், படைச்சால்கள், வனாந்திரங்கள், மேடுகள், பள்ளத்தாக்குகள் அனைத்து இடங்களிலும் மழையையும் சூரிய வெளிச்சத்தையும் ,குளிர்ச்சியையும், வெப்பத்தையும் கொடுத்து செழிப்பாக்கி, ஜீவ ராசிகளுக்கு வேண்டிய தானியம் தண்ணீர் இவற்றால் நிறைக்கிறார். மனிதன் இவற்றை தேவ பயத்தோடு உபயோகித்தால் பலன் பெருவான். இல்லையேல் இவற்றை அனுபவிக்க முடியாமல் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் இழந்துபோவான்.
Author: Rev. Dr. R. Samuel