முக்கியக் கருத்து
- தேவ ஜனத்திற்கு விரோதமான துன்மார்க்கரின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்பட ஜெபம்.
- துன்மார்க்கன் உபயோகப்படுத்தும் ஆயுதம் பொல்லாத கசப்பான நாவின் வார்த்தைகள்.
- துன்மார்க்கரின் தந்திரத்திலிருந்து தேவன் நீதிமானை காப்பார் என்ற நிச்சயம்.
1. (வச.1-6) ஒரு தேவமனிதன், தனது சத்துருக்களின் சூழ்ச்சி, தனக்கு எதிராக அவர்கள் செய்யும் மறைவான ஆலோசனை, அவர்களுடைய நியாயக்கேடுகள் இவற்றால் தன் உயிருக்கு வரும் ஆபத்தைப்பற்றிய பயத்திலிருந்து விடுவிக்குமாறு செய்யும் ஜெபமாக இந்த வசனங்கள் இருக்கிறது. தேவ மனிதனாகிய தாவீது தனது சத்துருக்கள் உபயோகப்படுத்தும் பட்டயம் அவர்களுடைய கசப்பான, கூர்மையான வார்த்தைகளே என்று கூறுகிறான்.
"அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல கூர்மையாக்கி' (வச.3) என்று கூறுகிறான்.
ஒவ்வொரு விசுவாசியும் கூட தாங்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
மற்றவர்கள் இருதயத்தை மனமடியச் செய்து, மற்றவர்களுக்கு தீங்கு விழைவிக்கக்கூடிய கொடிய சொற்களை உபயோகப்படுத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர்ந்து, தங்கள் வஞ்சகமான வார்த்தைகளே தங்களை துன்மார்க்கரின் பட்டியலில் சேர்த்துவிடும் என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.
"நாவும் நெருப்புத்தான், ... நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!' என்று யாக்கோபு 3:6 ஆம் வசனத்தில் நாம் எச்சரிக்கப்படுகிறோம்.
2. (வச.7-10) தேவ மனிதன், தன் பாதுகாப்பிற்காக தேவனிடம் ஜெபிக்கும்போது அவர் அவனை சாத்தானுடைய எல்லா தந்திரங்களினின்றும், சாத்தான் பயன்படுத்தும் துன்மார்க்க ஜனங்களின் ஆலோசனைகளினின்றும் வெகு எளிதாக காக்க வல்லவர் என்ற நம்பிக்கையான வார்த்தைகளை இந்த வசனங்களில் வாசிக்கிறோம்.
"ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், ...' (வச.7) என்று தேவ மனிதனுக்காக தேவனே போராடுவார் என்று தாவீது கூறி தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். இது தாவீதின் வாழ்க்கையில் மாத்திரம் அல்லாமல், இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கையிலும்கூட தேவன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
எனவே, தேவ மனிதன் இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் சமாதான இருதயத்துடன் சந்தோஷமாக கர்த்தருக்குள் மேன்மை
பாராட்டுவான் என்று (வச.10) இல் தாவீது கூறுகிறான். நீதிமான்களாகிய தேவ ஜனத்திற்கு தேவன் எப்போதும் அடைக்கலமாயிருக்கிறார் "அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; ...' (உபாகமம் 33:27).
Author: Rev. Dr. R. Samuel