முக்கியக் கருத்து
- தேவனுடைய ஆலயத்தில் அவருடைய வல்லமை மகிமை இவற்றை காண்பதே மிக அவசியமானது.
- அதிகாலையில் தேவனைத் தேடும்போது தேவன் நமக்குக் காணப்பட்டு நம் வாஞ்சைகளைத் தீர்ப்பார்.
- சரீரம் நல்ல உணவினால் திருப்தியாவதுபோல ஆத்துமா தேவ பிரசன்னத்தால் திருப்தியாகிறது.
'இவை தாவீதின் அனுபவம்'
1. வச.1-5 : தாவீது தேவனுடைய ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசரிக்கமுடியாமல் யூதாவின் வனாந்திரங்களில் துரத்துண்டது தேவன்மேல் தாவீதுக்குள்ள வாஞ்சையை இன்னமும் அதிகரித்ததை நாம் காணமுடிகிறது (2 சாமு.15-17).
"... என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, ...' (வச1) என்று தாவீது கதறுவது தண்ணீரற்று தாகமாய்க் கிடப்பவனுடைய அலறுதலைத் தெரிவிக்கிறது. ஆனாலும், அதிகாலை நேரத்தில் மிகுந்த வாஞ்சையுடன் தாவீது தேவனை
தேடினபடியால் அவர் தாவீதுக்கு எப்படி அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் வல்லமையுடனும் மகிமையுடனும் காணப்
பட்டாரோ அதே விதத்தில் காணப்பட்டு தாவீதின் பசி, தாகத்தைத் தீர்த்துவைத்தார் என்று தாவீது கூறுவதை
வாசிக்கிலாம்.
"... உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்' (வச.2).
"நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; ...' (வச.5). மிகுந்த சஞ்சலத்தோடு ஆரம்பித்த தாவீதின் வார்த்தைகள் இங்கு மிகுந்த திருப்தியுடன் அறிக்கை செய்து முடிப்பதைப் பார்க்கிறோம்.
2. (வச.6-8) நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலையில் நாம் இந்த உலக உல்லாச இன்பங்களுக்காகவும், உலக வசதிகளுக்காகவும் அதிகாலை முதல் இரவு வரை ஏங்குகிறோமா, அல்லது,அதைவிட தேவனுடைய வல்லமை, மகிமை நம் வாழ்வில் காணப்படவேண்டும் என்று விரும்புகிறோமா என்று ஒவ்வொரு விசுவாசியும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
தேவனுடைய வல்லமையை, அதிசயமான கிரியைகளை முழுமனதுடன் வாஞ்சிக்கும்போது கட்டாயமாக தேவனுடைய அற்புதங்கள் எப்படிப்பட்ட வறட்சியான சூழ்நிலையிலும்கூட நம் வாழ்க்கையில் நடக்கும் என்பதை தாவீது இந்த
வசனங்களில் உறுதிப்படுத்துகிறார்.
" நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூறுகிறேன்' (வச.7).
மேலும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில்
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்' என்று
(மத்தேயு 5:6) வனத்தில் தெளிவுபட கூறியிருக்கிறார்.
3. (வச.9-11) தாவீதினுடைய விசுவாசத்தின்படி அவனுக்கு எதிராக வரும் சத்துருக்கள் அழிவார்கள். தாவீதையோ தேவன் மேன்மைப்படுத்துவார் என்பதே. இதையே தாவீது அறிக்கையிட்டான். அப்படியே முடிவில் நடந்தது என்பதை (2 சாமுவேல் 18) அதிகாரத்தில் வாசித்து தெரிந்துகொள்கிறோம்.
நாமும்கூட விசுவாசத்துடன், கர்த்தர் நம் வாழ்க்கையின் பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் வெற்றிதருவார் என்று நம்பி, உலக உல்லாசங்களைவிட்டு தேவனை மாத்திரமே வாஞ்சிக்கும்போது கர்த்தர் வெற்றியை அருளுவார் என்பது நிச்சயம்.
Author: Rev. Dr. R. Samuel