முக்கியக் கருத்து
- தாவீது தன்னிடத்தில் எந்த பாவமும் இல்லாதிருந்தும் அக்கிரமக்காரர் அவன் மேல் எழும்புகிறார்கள் என்று தேவனிடம் முறையிடுகிறான்.
- தேவன் கிருபையுள்ளவரானபடியால் தன்னை சந்தித்து சத்துருக்களுக்கு நீதி சரிகட்டுவார்.
- துன்மார்க்கனை சடிதியாய் கொன்று போடாமல் மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாக அவர்களைத் தாழ்த்திப்
போடும் என்பது தாவீதின் வேண்டுதல்.
1. தாவீது தனது குற்றமற்ற நிலையை ஆதாரமாக வைத்து தேவன் தனது சத்துருக்களாகிய அக்கிரமக்காரரிடமிருந்து தன்னைத் தப்புவிக்கக் கோருகிறான். தனது சத்துருக்கள் தனக்கு வஞ்சகமாக துரோகஞ் செய்கிறார்கள். தன்னைவிட அவர்கள் பலவான்கள் என்றும் தன் பிராணனை வாங்க சாயங்காலத்திலும் பதிவிருக்கிறார்கள் என்ற பயங்கரத்தையும் தேவனிடம் தாவீது தெரிவிப்பதைப் பார்க்கிறோம். தங்களை யாரும் கேட்கவும் தடுக்கவும் முடியாது என்ற எண்ணத்தில் சத்துருக்கள் பெருமை பாராட்டுகிறார்கள் என்றும் தாவீது புலம்புகிறான் (வச.1-7).
2. ஆனாலும், தேவன் கிருபையுள்ளவர், உயர்ந்த அடைக்கலமானவர். புறஜாதிகளையும் துன்மார்க்க சத்துருக்களையும் இகழுகிறவர். என் தேவன் என் சத்துருக்களின் சரிகட்டுதலை நான் காணச்செய்வார் என்ற ஆறுதலின் நம்பிக்கை வார்த்தைகளை தாவீது அறிக்கை செய்கிறான் (வச.8-10).
3. தேவன் தனது சத்துருக்களை சடிதியில் கொன்றுபோட்டால் மக்கள் அதை மறந்துவிடுவார்கள். ஆகவே, அவர்களை சிதறடித்து பொல்லாங்கனுக்குக் கர்த்தர் கொடுக்கும் தண்டனையை உலக மக்கள் கண்டு தெரிந்துகொள்ளும்படியாக அவர்களை காட்சிப்பொருளான உதாரணமாக வைத்து தாழ்த்திப்போடும் என்று தாவீது வேண்டுவதைப் பார்க்கிறோம் (வச.11).
4. இவ்விதமாக துன்மார்க்கர் தேவனால் தண்டிக்கப்பட்டு உணவுக்காக அலைந்து திருப்தியாகாமல், பூமியின் எல்லையெங்கும் அரசாளுகிற தேவனால் நிர்மூலமாக்கப்படுவார்கள் (வச.12-15).
5. ஆனால், தாவீது மகிழ்ச்சியாக -" எனது உயர்ந்த அடைக்கலமாகிய கர்த்தர் கிருபையும் என் பெலனுமாக இருந்து இக்கட்டில் எனக்குத் தஞ்சமாக இருந்தபடியால் அவரை காலையில் புகழ்ந்து பாடி அவரது வல்லமையை தெரிவிப்பேன்' என்று பொருத்தனையோடு கூடிய சாட்சியைப் பிரஸ்தாபப்படுத்தி வச.16 இல் பாடுகிறான்.
தேவ ஜனமாகிய நாம் தேவனை அண்டிக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது, துன்மார்க்க சத்துருக்களை தேவனே தமது வல்லமையால் தண்டித்து நம்மை தமது கிருபையால் காத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார்.
Author: Rev. Dr. R. Samuel