முக்கியக் கருத்து
- தாவீது தனது விக்கினத்தில் தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்து தப்பிக்கிறான்.
- தேவன் பூமிக்கும் வானங்களுக்கும் மேலாக உயர்ந்தவர்.
- தாவீதின் சத்துருக்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்.
1. தாவீது சவுலுக்குத் தப்பி ஓடி கெபிகளிலே ஒளிந்துகொண்டிருக்கும்போது பாடிய ஜெபப்பாடல் இது. ஆபத்து நேரங்களில் ஒரு குஞ்சு பறவை தாய்ப் பறவையின் செட்டைகளின் கீழ் மறைந்துகொள்ளும் அற்புதமான உதாரணம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. "பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்' என்று ஏசாயா 31:5 ஆம் வசனத்தில் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை தாவீது பிடித்துக்கொண்டு கர்த்தரிடம் தன் விக்கினத்திலிருந்து தப்ப அவருடைய செட்டைகளின் நிடிலிலே அடைக்கலம் புகுந்துகொண்டான் (வச.1).
"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவன் ' என்று தாவீது (வச.2) இல் அறிக்கையிடுகிறான்.
2. தனது சத்துருக்கள் சிங்கங்களைப்போல வந்து தன்னை விழுங்கப் பார்த்தாலும் தேவன் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி தன்னை பாதுகாப்பார் என்ற நிச்சயத்தை தாவீது விசுவாசித்து அறிக்கையிடுவதையும் (வச.3-5)இல் பார்க்கிறோம்.இந்த விசுவாசம் பெரிது. தேவ பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான நம்பிக்கையாகும்.
3. தாவீதின் சத்துருக்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள் என்பதை (வச.6) இல் தெரிவிக்கிறார்.
தேவனை உறுதியாக பிடித்திருக்கும் ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் நடப்பது இதுதான். யூதனாகிய மொர்தெகாய்க்காக ஆமான் அமைத்த தூக்கு மரத்தில், ஆமானே தூக்குப்போடப்பட்டது எஸ்தர் 7:9 ஆம் வசனத்தில் பார்க்கிறோம். மேலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களை அக்கினிச் சூளையில் தூக்கிப் போட்டவர்களே அக்கினிக்கு இரையானார்கள் ,ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படவில்லை என்பதை
தானியேல் 3:20-25 வசனங்களில் வாசிக்கிறோம்.
4. வானங்களுக்கு மேலாக உயர்ந்த தேவனை துதிக்க, மகிமைப்படுத்த தாவீது தனது எல்லா உள்ளந்திரியங்களையும், பெலத்தையும், வாத்தியக் கருவிகளையும் அதிகாலமே விழித்தெழும்ப கட்டளை கொடுக்கிறான் (வச.8-11).
தேவ ஜனமே! நம்மை இந்த உலகத்தின் சகல விக்கினங்களுக்கும் விலக்கிப் பாதுகாக்கும் தேவன் மகா பெரியவர். உன்னதங்களுக்கு மேலாக உயர்ந்தவர். நமது ஆவி, ஆத்துமா, சரீரம் இவற்றால் உண்மையாய், உற்சாகமாய் துதிக்க நன்றி பலி செலுத்த அதிகாலையில் விழித்தெழுவோமா! எக்காலத்திலும் அவரை ஸ்தோத்திரிப்போமா!
Author: Rev. Dr. R. Samuel