முக்கியக் கருத்து
- நான் பயப்படும் நாளில் கர்த்தரை நம்புவேன்.
- என் கண்ணீர் வீண்போகாமல் கர்த்தர் கணக்கில் வைக்கிறார்.
- தேவனை நம்பியுள்ள எனக்கு மனிதன் தீங்கு செய்ய முடியாது.
வச.1-3 : தாவீது சவுலுக்கு பயந்து பெலிஸ்தியரிடம் சென்று காத்தூரில் இருந்தபோது அங்கும் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து வெகுவாய் பயந்தபோது, தாவீது தான் செய்த மிக சரியான உச்சிதமான காரியமாக
"நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்' (வச.3) என்று கர்த்தரிடம் தெரிவிக்கிறான்.
யூதாவின் இராஜாவாகிய யோசபாத்துக்கு விரோதமான ஏராளமான ஜனங்களும் யுத்த மனுஷரும் வந்து முற்றுகையிட்ட போது, "...யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்' என்று 2 நாளாகமம் 20:3 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
கர்த்தர் யோசபாத்தின் சத்துருக்களை இதினிமித்தம் முறியடித்தார்.
விசுவாசிகளாகிய நாமும் நம்மை பயப்படுத்தும் சூழ்நிலை மூடும்போது, கர்த்தரை நம்பி அவரை நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தர் நம்மை நிச்சயமாக விடுவிப்பார்.
வச.4-11 : தாவீது இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலையில் தேவனை புகழுகிறான் என்பது அவனுடைய உண்மை விசுவாசத்தைக் காண்பிக்கிறது. அநேகர் தங்கள் நெருக்கத்தில் தேவனை இகழுகிறார்கள்.
தேவனிடம் தான் ஏறெடுக்கும் கண்ணீர் ஜெபம் வீண்போகவில்லை என்று தாவீது நன்றாக அறிந்து,
"... என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?'
(வச.8) என்றான்.
தேவ பிள்ளைகளாகிய நாம் சிந்தும் கண்ணீர் அனைவற்றையும் தேவன் துருத்தியில் சேர்க்கிறார் என்பதை நாம் அறியவேண்டும்.மேலும், இப்படிப்பட்ட தேவன் என் பட்சத்தில் இருக்கும்போது மனிதனுக்கு நான் பயப்படேன் என்று (வச.4,11) இல் தைரியமாக கூறுகிறான். "... தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?'
என்று ரோமர் 8:31 இல் வாசிக்கிறோம் (யோவான் 14:27).
இந்த அசையா விசுவாசம் நமக்கு உண்டா? சிந்திக்கவேண்டும்.
வச.12,13 : தாவீது கடைசியாக தேவனிடம் தான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவதை பற்றி உறுதியளிக்கிறான். தேவனிடமிருந்து வரும் நிச்சயமான விடுதலையை தேவனிடமே தெரிவிக்கிறான். நமக்கும் அந்த விசுவாசம் இருக்கும்போது நாம் நிச்சயம் ஜெயிப்போம்.
Author: Rev. Dr. R. Samuel