முக்கியக் கருத்து
- தாவீது தனக்கு தீங்கு செய்பவர்கள் தனது தோழர்களே என்று வருத்தப்படுகிறான்.
- தனது நெருக்கதினிமித்தம் தப்பித்து ஓடிப்போக இருதயம் நினைப்பதையும் தெரிவிக்கிறான்.
- ஆனால் அப்படி செய்யாமல் தேவனுடைய இரட்சிப்பை நம்பி அவர்மேல் தனது பாரத்தை வைக்கிறான்.
1. தேவன் தனது ஜெபத்தை நிச்சயமாக கேட்டு "மறைந்திராதேயும்' என்ற விண்ணப்பத்தை தனது அவசர தேவையினிமித்தம் தாவீது தெரிவிக்கிறதை காண்கிறோம் (வச.1,2).
2. தனக்கு கேடு செய்ய நினைப்பவர்கள் தனது பகைஞரல்ல, ஆனால் ஒரு சமயம் தனக்குத் தோழர்களாக இருந்தவர்களே இப்படி விரோதிகளாக மாறிவிட்டார்கள் என்று வருத்தத்தோடே தேவனிடம் முறையிடுகிறான் (வச.11-14, 20, 21).
விசுவாசிகளாகிய நமக்கும் இந்த அனுபவம் உண்டாயிருக்கலாம். தாவீதைப்போல நாம் சோர்ந்துபோகாமல் தேவனிடம் முறையிடுவது நல்லது. இப்படிப்பட்ட அனுபவங்களை குறித்து நாம் நொந்து நமது சமாதானத்தைக் கெடுத்துக்கொள்ளத் தேவையில்லை.மேசியா கிறிஸ்துவையும் அவருடைய சீஷனாகிய யூதாசே காட்டிக்கொடுத்தான்
(லூக்கா 22:47,48) என்பதும் இங்கு தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டுள்ளது.
3. கர்த்தர் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கவும் (பாபேல் கோபுரம் கட்டினபோது செய்ததுபோல) தேவன் அவர்களுக்கு மரண ஆக்கினையை கொடுக்கவேண்டும் என்றும் வேண்டுகிறான் (வச.9,15,23).
4. தனது நெருக்கத்திலே, தப்பிக்க வழியில்லாதபடி தனது சத்துருக்கள் தன்னை சூழ்ந்து கொண்ட சூழ்நிலையில் தான் பறவையைபோல சிறகடித்து பறந்து தப்பித்துக்கொள்ள தன் இருதயம் நினைப்பதையும் தாவீது மறைக்காமல் தெரிவிக்கிறான் (வச.3-8).
அப்சலோமும் அவனோடு சேர்ந்தவர்களும் தாவீதை சூழ்ந்து நெருக்கின அனுபவம் (2 சாமுவேல் 17:22-26) வரை உள்ள வசனங்களில் வாசிக்கலாம்.
அநேக நேரங்களில், விசுவாசிகளாகிய நாமும்கூட நம்முடைய இக்கட்டு நேரங்களில் "எங்காவது ஓடிப்போகலாம்' என்று நினைப்பதுண்டு.
5. ஆனாலும், தாவீது தான் அப்படிச் செய்யாமல்
"கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்' (வச.22)
என்ற வாக்குத்தத்த வசனத்தை கூறி கர்த்தரையே தனக்கு விடுதலை தருபவராக நம்பி தேவனிடம் இருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதை அறிக்கையிடுகிறான்.
பல்லவி
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம்
சரணங்கள்
உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
மேலும், அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் கர்த்தரை தியானம் செய்வேன். என் நெருக்கங்களைக் குறித்து முறையிட்டு ஜெபிப்பேன். அப்பொழுது என் சத்தத்தை கர்த்தர் கேட்பார் என்று (வச.17) இல் தெளிவாக தாவீது கூறுகிறான்.
விசுவாசிகளாகிய நாம், பிரச்சனைகள் அதிகரிக்கும்போது அதிகமாக வேதத்தை தியானித்து தேவனிடம் அதிக நேரம்
ஜெபத்திலும் தரித்திருக்கவேண்டும் என்பதை சங்கீதக்காரன் உணர்த்துகிறான்.
அவ்விதம் நாம் செய்தால் நிச்சயம் நம் ஜெபம் கேட்கப்படும்.
Author: Rev. Dr. R. Samuel