முக்கியக் கருத்து
- தாவீதின் காட்டிக்கொடுக்கப்பட்ட சூழ்நிலை.
- தேவன் இந்தச் சூழ்நிலையில் தன்னை விடுவிப்பார் என்ற நம்பிக்கை.
- தேவன் தன்னை விடுவித்தால் அவருக்குத் தான் உற்சாகமாக பலி செலுத்துவதாக பொருத்தனை.
பின்னணி:1 சாமுவேல் 26:1, 2
வச.1-3 - தெய்வ பயம் இல்லாத தனது விரோதிகள் தனது பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் என்று தாவீது தேவனிடம் தெரிவித்து தேவன் தமது வல்லமையினால் தன்னை இரட்சித்து தனக்கு நியாயஞ்செய்யும்படி இந்த வசனங்களில் வேண்டுதல் செய்கிறான்.
தாவீது சவுலுக்கு பயந்து சீப் வனாந்திரத்தில் பதுங்கி இருந்தபோது, சீப் ஊரார் தாவீதை சவுலுக்கு காட்டிக்கொடுத்தனர்.
தனக்கு இங்கு ஏற்பட்ட துரோகத்தினின்று கர்த்தர் காப்பார் என்ற நம்பிக்கையுடன் கர்த்தரிடம் தாவீது விண்ணப்பத்தை
ஏறெடுத்தான்.விசுவாசிகளாகிய நமது வாழ்க்கையிலும் நாம் பல வேளைகளில் துரோகத்தை சந்திக்கும்போது நம்பிக்கை யுடன் தேவனிடம் விண்ணப்பிக்கலாம் என்று இந்த நிகழ்ச்சி நமக்கு தைரியத்தையும் விசுவாசத்தையும் கொடுக்கிறது.
வச.4-7 - இந்த வசனங்களில் தாவீது, கர்த்தர் தன்னை நிச்சயமாய் விடுவிப்பார் என்றும் தனக்கு உதவி செய்கிறவர்களுடனே கர்த்தர் இருந்து, தன்னைப் பகைத்து தனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்களுடைய தீமைக்கு தீமை சரிகட்டுவார் என்று விசுவாசித்து கூறிகிறார்.மேலும், தேவன் தன்னை இரட்சித்து தனது நெருக்கத்திலிருந்து விடுவித்தால் கர்த்தருக்கு உற்சாகமாகபலிகளை செலுத்து துதி செலுத்துவதாகவும் பொருத்தனை செலுத்துகிறார். அது நலமானது என்றும் தனது உள்ளத் தின் ஆழத்திலிருந்து அறிக்கையிடுகிறான்.
நாமும் நமக்கு கர்த்தர் நன்மைசெய்து நம் கஷ்டங்கள் நெருக்கங்களிலிருந்து நம்மை விடுவித்து சமாதானத்தை கொடுக்கும்போது கர்த்தருக்கு நன்றியறிதல் உள்ளவர்களாக இருந்து நமது வாழ்க்கையை கர்த்தருக்க ஒப்புக்கொடுத்து அவருக்குப் பிரியமான ஜீவியம் செய்யவேண்டும் என்ற சத்தியத்தை இந்த சங்கீதம் நமக்கு போதிக்கிறது.
கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாகிய தாவீதுக்கு தனது வாழ்க்கையில் இப்படிப்பட்ட நெருக்கம் நேரிட்டது.
அதுபோல, ஆண்டவரை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளாகிய நமக்கும் நெருக்கும் இந்த உலகத்தில் உண்டு. அந்த நெருக்கங்களில் ஆண்டவர் நம்மோடு இருந்து நம்மை விடுவிப்பார் என்பதுதான் விசுவாசிகளாகிய நமக்குக் கர்த்தர் கொடுக்கும் நம்பிக்கை. ஆண்டவராகிய இயேசு யோவான் 16:33 ஆம் வசனத்திலே சொன்னார்.
"... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்... ' .
Author: Rev. Dr. R. Samuel