முக்கியக் கருத்து
- கபட நாவை விரும்பும் பொல்லாதவன் சங்கரிக்கப்படுவான்.
- தேவனுடைய கிருபையை நம்பும் நீதிமான் செழிப்பான்.
தாவீது சவுலுக்கு பயந்து நிராயுதபாணியாய் அப்பமும் தண்ணீரும்கூட இல்லாமல் ஓடும்போது ஆசாரியனாகிய அகிமெலேக்கைச் சந்திக்கிறான். தாவீதின் உண்மை நிலை அறியாமல் அகிமெலேக்கு உதவி செய்கிறான். இதைப் பார்த்துவிட்ட சவுலின் ஊழியக்காரனாகிய தோவேக்கு சவுலிடம் அபிமெலேக்கைக் காட்டிக்கொடுக்க, அகிமெலேக்கையும் அவன் வீட்டாரையும் சவுல் கொலை செய்கிறான். இந்தப் பின்னணி 1 சாமுவேல் 21,22 ஆம் அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை வைத்து தாவீது நம்பிக்கை கலந்த துயரத்தில் பாடிய சங்கீதம் இது.
1. இரண்டு வகை மக்கள் இங்கே இனம் காட்டப்படுகிறார்கள்.
. பொல்லாப்பில் பெருமை பாராட்டும் பலவான்கள் (வச.1) தோவேக்குவும், சவுலும்
. தேவனுக்குப் பயந்த நீதிமான்கள் (வச.6) அகிமெலேக்குவும், தாவீதும்.
நாம் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?
2. பொல்லாப்பில் பெருமை பாராட்டும் பலவானின் பெலன் எதில் உள்ளது என்று வசனம் 2,3,4,7-இல் கூறப்பட்டுள்ளது.
. கபட நாவு (வச.2,4)
. பொய் (வச.3)
. செல்வப் பெருக்கு (வச.7)
. தீவினை (வச.7)
கபட நாவைக் குறித்து யாக்கோபு 3:6 ஆம் வசனத்தில்,
"நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; ...' என்று கூறப்பட்டுள்ளது.
3. தேவனுக்கு பயந்த நீதிமானுடைய பெலன் எதில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
. தேவனுடைய கிருபை (வச.1)
. தேவனே பெலன் (வச.7)
நீதிமான் சொல்கிறான் "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, ...' (புலம்பல் 3:22).
பிலிப்பியர் 4:13 ஆம் வசனத்தில்கூட பவுல் அப்போஸ்தலன்
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு' என்று எழுதுகிறான்.
4. பொல்லாப்பைப் பெலனாகக் கொண்டதினால் அவர்களுக்குக் கிடைப்பது என்ன என்று தாவீது எழுதுகிறான்.
. அழிவு (வச.5)
. வேறோடே பிடுங்கப்படுவார்கள் (வச.5)
. நிர்மூலமாகிவிடுவார்கள் (வச.5)
. நகைப்புக்கு ஆளாவார்கள் (வச.6,7)
"அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; ...' என்று பொல்லாப்பை பெலனாகக் கொண்டவர்களைக் குறித்து சங்கீதம் 20:8இல் வாசிக்கிறோம்.
5. தேவனை பெலனாகக் கொண்டவர்களின் பலனையும் தாவீது எழுதுகிறான்.
. தேவனுடைய ஆலயத்தில் செழிப்பாக இருப்பார்கள் (வச.8)
. அசையா நம்பிக்கை இருக்கும் (வச.8)
. துதி, மகிழ்ச்சி உண்டு (வச.9)
. நலமானது கிடைக்கும் (வச.9)
தேவபிள்ளையே உன்னுடைய பெலன் எங்கே இருக்கிறது?
சவுல் பரிதாபமாக அழிந்தான்,
தாவீதோ தழைத்து பெருகினான்.
"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, ... நன்மை செய்து, ... அதைப் பின்தொடரக்கடவன்'
என்று 1 பேதுரு 3:10-11 வசனங்களில் வாக்குத்தத்த வசனமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel