முக்கியக் கருத்து
- தாவீது தான் பத்சேபாளிடம் செய்த பாவத்திற்கு முழுப்பொறுப்பையும் ஏற்று மனஸ்தாபப்பட்டு பாடிய சங்கீதம்.
- தேவன் ஒருவரே தன்னை சுத்திகரித்து, இழந்துபோன இரட்சிப்பையும் சந்தோஷத்தையும் தரமுடியும் என
உணர்ந்து பாடியது.
இந்த சங்கீதத்தின் பின்னணி 2 சாமுவேல் 12:1-13 வசனங்களில் வாசித்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலம் தனது பாவத்தைக் குறித்து கண்டிக்கப்பட்டபோது, உடனே தாவீது மனந்திரும்பியதினால் தேவனுடைய மன்னிப்பை நாத்தான் அறிவிக்கிறான்.
தாவீது தனது பாவத்தை அறிக்கையிட்டு தேவனுடைய கிருபை, இரக்கம், மன்னிப்பை வேண்டுகிற ஜெபத்தில் கூறிய சில
முக்கிய சத்தியங்களை இந்த சங்கீதத்தின் வசனங்களில் தியானிப்பது விசுவாசிகளுக்கு மிகவும் பிரயோஜனமானது.
1. பாவம் செய்வது மாம்ச சரீரத்தில் உள்ள பாவ சுபாவத்தினால் என்று 5-ஆம் வசனத்தில்
"... என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்' என்று தாவீது கூறுகிறான்.
"... என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்;...'
என்று பவுல் ரோமர் 7:18-இல் எழுதியிருக்கிறான். ஆகவே, தேவனே தன்னை சுத்திகரிக்க முடியும் என்று தாவீது
"என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்' என்று மனஸ்தாபப்பட்டு 7-ஆம் வசனத்தில் மன்றாடுகிறான்.
ஈசோப்பு என்ற செடி பலியின் இரத்தத்தை மீட்புக்காக எடுத்துத் தெளிக்க, பூசிக்கொள்ள பயன்படுத்தப்பட்டது என்று
யாத்திராகமம் 12:22-இல் வாசிக்கிறோம்.
பவுலும்கூட இயேசு கிறிஸ்து ஒருவரே பாவ சுபாவத்திலிருந்து விடுவித்து பாவத்தை மன்னித்து தன்னை சுத்திகரிக்க முடியும் என்பதை ரோமர் 7-ஆம் அதிகாரத்திலும் 8-ஆம் அதிகாரத்திலும் தெளிவுபட எழுதியிருக்கிறார்.
2. நாம் செய்யும் எல்லா பாவங்களும் தேவனுக்கு விரோதமானது என்ற சத்தியத்தை தாவீது
"தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து,' ... என்று 4 ஆம் வசனத்தில் அறிக்கையிடுகிறான்.
லூக்கா 15:21 ஆம் வசனத்தில்கூட இளைய குமாரன் தான் செய்த பாவம் பரத்திற்கு விரோதமானது என்று மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுவதை பார்க்கிறோம்.
3. தாவீது தான் துணிகரமாக செய்த பாவத்தினால் பெற்ற தேவ சிட்சையையும் இழப்புகளையும் வசனங்கள் 3,8,11,12-இல் கூறி புலப்புகிறார். "... பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது' (வச.3) "... நீர் நொறுக்கின எலும்புகள் ...' (வச.8) "உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்து ...' (வச.11) "... இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் ... தந்து ...' (வச.12).
4. கர்த்தர் தமது பக்தர்களிடமும், விசுவாசிகளிடமும் விரும்பும் காரியங்களை தாவீது உணர்ந்து பட்டியலிட்டு தான் அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறான்.
. உள்ளத்தில் உண்மை (வச.6)
. சுத்த இருதயம் (வச.10)
. நொறுங்குண்ட ஆவி (வச.17)
. நீதியின் பலிகள் (வச.19)
5. தேவன் தன் பாவங்களை மன்னித்து தனக்கு சுத்த இருதயத்தையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும், உற்சாகமான ஆவியையும் திரும்பக் கொடுப்பாரானால் தாவீது தான் மற்ற பாவிகள் மனந்திரும்பும்படி தேவனுடைய வழிகளை உபதேசித்து, அவருடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடி, தேவனுடைய புகழை மீண்டும் அறிவிப்பேன் என்ற பொருத்தனை ஜெபத்தை வசனங்கள் 10,12,13,14,15 இவற்றில் மிகுந்த வாஞ்சையுடன் ஏறெடுக்கிறான்.
உமக்கு நீதியின் பலிகளை செலுத்துவேன் என்ற நம்பிக்கையின் அறிக்கை மூலம் துக்கமாய் ஆரம்பித்த இந்த சங்கீதத்தை சந்தோஷத்தின் எதிர்பார்ப்புடன் தாவீது முடிக்கிறான்.
Author: Rev. Dr. R. Samuel