முக்கிய கருத்து :
- தேவனாகிய கர்த்தர் நீதியுள்ளவர், துன்மார்க்கத்தை விரும்பாதவர் சூதுள்ள மனுஷனை அருவருக்கிறார்.
- நீதிமான் கர்த்தரை நம்புகிறதினாலும் அவருடைய பரிசுத்த சந்நிதியில் வந்து கர்த்தரைப் பணிந்துகொள்ளுவதினாலும் ஆசீர்வதிக்கப்படுவான்.
1. தேவனாகிய கர்த்தர் (வச.4,5,6,12)
தேவனாகிய கர்த்தர் நீதியும் பரிசுத்தமும் உள்ளவர். துன்மார்க்கத்தில் பிரியப்படாதவர். தீமை அவரிடம் சேருவதில்லை. ஆனால், இந்த உலகில் மக்கள் பல அசுத்த ஆவிகளையும் மாயையான பொருட்களையும் தேவர்கள் என்று தவறாக நம்பி வணங்கிவருகிறார்கள். சத்திய வேதமாகிய பைபிள் இதை நிராகரிக்கிறது. தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் அவரை மாத்திரமே தொழுதுகொள்ளவேண்டும் என்று கீழ்காணும் வசனங்கள் வேத புத்தகத்தில் கூறுவதை காணலாம்.
யாத்.20:3-6; லேவி.11:45, 20:6,7, 26:1; உபாகமம் 7:3, 4:16; ஆபகூக் 1:13; யோவான் 4:24; 1 கொரி.10:14; அப். 4:12.
2. நீதிமான் (வச.1,2,3,7,8,11,12)
நீதிமான் கர்த்தரை சந்திக்க காலையில் ஆயத்தமாகி காத்திருப்பான். தேவனிடம் தனது விண்ணப்பங்களை செலுத்துவான். அவரை தியானிப்பான். ஆண்டவருடைய பரிசுத்த சந்நிதிக்குள் பிரவேசித்து அவரை பணிந்துகொள்ளுவான். ஆகவே, கர்த்தர் நீதிமானை ஆசீர்வதித்து, அவருடைய நீதியிலே நடத்தி, அவனுடைய வழிகளைச் செவ்வைப்பண்ணுவார். கர்த்தரை நம்பி அவரை நேசிக்கிறவர்களை கர்த்தர் சந்தோஷத்தினால் நிரப்புகிறார்.
"நீதியின் கிரியை சமாதானமும், ... என் ஜனம் சமாதான தாபரங்களிலும், ... குடியிருக்கும்'. (ஏசாயா 32:17,18).
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்'(மத்தேயு 5:6).
3. அக்கிரமக்காரர் (வச.5,6,9,10)
துன்மார்க்கர், வீம்புக்காரர், அக்கிரமக்காரர் என்று பலவாறாக இந்த வசனங்களில் அழைக்கப்படும் மக்கள் சூதுள்ளவர்களாகவும் பொய் பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய வாயில் உண்மை இல்லை. மேலும் கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட துன்மார்க்கத்தைக் கர்த்தர் வெறுத்து, குற்றவாளிகளாகத் தீர்த்து அவர்களை தள்ளிவிடுவார்.
"அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி...' (ஆதியாகமம் 19:24). என்ற வசனங்களில் துன்மார்க்க தேசங்களின்மேல் வந்த அழிவைக் காணலாம்.
"... விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், ... பொறாமைகள், கொலைகள், வெறிகள், ... இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை' (கலா.5:19-21) .
ஆனாலும், துன்மார்க்கன் தன் பாவ வழியைவிட்டு மனந்திரும்பி கர்த்தரிடம் வந்தால் அவர் அவனை சேர்த்துக்கொள்ளுவார், இரட்சிப்பார் என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.
"துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்'(எசேக்.33:11-15).
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து ... நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்' (1 யோவான் 1:9).
Author: Rev. Dr. R. Samuel