முக்கியக் கருத்து
- லேவி கோத்திரத்தை சேர்ந்த பாடல்களாகிய கோராகின் புத்திரரின் பாட்டு.
- உலகத்தின் செல்வம் நிலையற்றது.
- தேவனுக்காக வாழ்பவர்கள் பாதாளத்தினின்று தப்பிக்கொள்வார்கள்.
இந்த முழு சங்கீதத்தின் கருத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரே வசனத்தில் கூறி இருக்கிறார்.
"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை (ஆத்துமாவை) நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?...' (மத்தேயு 16:26).
ஏழு குறிப்புகள் மூலம் இந்த சங்கீதத்தின் பொருளை தியானிக்கலாம்.
1. இந்த சங்கீதத்திலுள்ள சத்தியம் எல்லா ஜனங்களும் கேட்க வேண்டிய அவசியமாயிருக்கிறது (வச.1,2).
2. இந்த நற்செய்தியாகிய சத்தியம் எல்லா ஜனங்களுக்கும் ஞானத்தை தெரியப்படுத்துகிறது (வச.3,4).
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; ...' என்று நீதிமொழிகள் 1:7 வசனத்தில் வாசிக்கிறோம்.
ஆகவே, கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்தை இந்த சங்கீதம் அறிவிக்கிறது.
மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பல உவமைகளால் தேவனுடைய ராஜ்ஜியத்தைப்பற்றிய மறைபொருளை வெளிப்படுத்தினார் என்பதை (வசனம் 4) உறுதிப்படுத்துகிறது.
"இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; ... மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது' (மத்தேயு 13:34,35).
3. உலக செல்வத்தை மாத்திரம் நம்பி வாழும் மக்கள் எவ்வளவு கனம் பொருந்தியவர்களாக இருந்தாலும் மிருகங்களைப் போலவே முடிவை சந்திக்கிறார்கள். அவர்கள் ஆத்துமாக்களை மீட்டுக்கொள்ள முடியாமல் போகிறார்கள் (வச.6-14).
"மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; ... இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்' என்று பிரசங்கி 3:19 ஆம் வசனத்தில் ஞானி எழுதியிருக்கிறார்.
4. மனிதன் மிகுந்த ஐசுவரியத்தை சம்பாதித்து பலரும் அவனைப் புகழ்ந்தாலும் மரிக்கும்போது தனது செல்வத்தையோ புகழையோ தன்னுடன் கொண்டு போவதில்லை (வச.7).
"உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்' என்று 1 தீமோத்தேயு 6:7 ஆம் வசனத்தில் பவுல் அப்போஸ்தலர் எழுதியிருக்கிறார்.
5. ஆகவே, மெய்ஞானமாகிய கர்த்தருக்குப் பயப்படும் பயம் உள்ளவர்கள், இந்த உலகத்தின் அக்கிரமங்களுக்கும், தீங்கு நாட்களுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை (வச.5).
6. உலகத்தில் மிகுந்த ஐசுவரியவானாகவும், மிகுந்த புகழ்ச்சியையுடையவனாகவும் உள்ள உலக மனிதனைப் பார்த்து தேவனுடைய ஞானத்தைப் பெற்ற மக்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. 16,18-20.
"உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்' என்று 1 யோவான் 4:4 வசனம் நமக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
7. ஆனாலும், உலக செல்வமும், புகழ்ச்சியும் கொடுக்க முடியாத ஆத்தும இரட்சிப்பையும். நித்திய ஜீவனையும், பரிபூரண சந்தோஷத்தையும் தேவன் ஒருவரே கொடுத்து பாதாளத்திற்கும், நரக ஆக்கினைக்கும் ஒரு மனிதனை தப்புவிப்பார்.
"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்' என்றும் பரிபூரண ஜீவனை பெறுவான் என்றும்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோவான் 10:9,10,11 ஆம் வசனங்களில் உறுதி அளித்திருக்கிறார்.
உலக செல்வத்தை நம்பாமல், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோமா?
Author: Rev. Dr. R. Samuel