முக்கியக் கருத்து
- பக்தியில்லா ஜாதிகளிடமிருந்து தப்புவிக்கப்பட தேவனுடைய வெளிச்சமும் சத்தியமும் தேவை.
- தேவனையே தனது நம்பிக்கையாக கொண்டபடியால், தான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்? என்ற கேள்வி எழும்புகிறது.
1. தேவனுடைய வெளிச்சம் தேவை (வச.1,3)
இந்த உலகத்தில் பக்தியில்லாத மனிதர் தேவ ஜனத்தின் நியாயத்தைப் புறட்டுகிறார்கள். அநியாயம் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்புவிக்கப்பட தேவன் தமது வெளிச்சத்தையும், சத்தியத்தையும் அனுப்பவேண்டும் என்று தாவீது வேண்டுகிறான். தேவனுடைய வெளிச்சம் மாத்திரமே உலகத்தின் இருள் காணக்கூடாத நியாயம் எது அநியாயம் எது என்பதைக் காட்ட வல்லது. தேவனுடைய சத்தியம் மாத்திரமே மெய்வழி எது, சூதான வழி எது என்பதை உணர்த்த வல்லது. இயேசு கிறிஸ்துவே இந்த உலகத்திற்கு இந்த வெளிச்சத்தையும், சத்தியத்தையும் கொடுக்க வல்லவர்.
"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது' என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து
யோவான் 1:4 இலும், "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்' என்று யோவான் 14:6 இல் இயேசு கிறிஸ்து தம்மைப்பற்றி கூறுவதையும் வாசிக்கிறோம்.
2. தேவனே நம்பிக்கையின் உறைவிடம் (வச.2,3,4,5)
தேவன் ஏன் என்னை தள்ளிவிட்டார்? நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும் என்ற கேள்வி, தாவீது தேவனையே தனது
நம்பிக்கையின் உறைவிடமாகக் கருதியதால் தான் வெளிப்பட்டது (வச.2).
தான் தேவ சந்ததிக்கு வந்து ஆராதிப்பதை தடுக்கும் பக்தியில்லாத ஜாதியை தேவன் நிச்சயமாக அகற்றுவார். அப்போது
தேவ சந்நிதிக்கு நான் வருவேன் என்று (வச.3,4)இல் தாவீது கூறியிருப்பது இந்த கருத்தை தெளிவுபடுத்துகிறது. ஆகவே, தன் ஆத்துமா கலங்கத் தேவையில்லை என்ற நம்பிக்கையின் வார்த்தையையும், தனது நம்பிக்கை நிறைவேற தான் தேவனுக்குக் காத்திருந்து அவரைத் துதிக்க வேண்டும் என்ற நியமத்தையும் தனது ஆத்துமாவுக்கு ஆலோசனைக் கூறுவது விசுவாசிகள் பின்பற்றவேண்டிய கட்டளையும்கூட.
"... விசுவாசிக்கிறவன் பதறான்' ஏசாயா 28:16.
Author: Rev. Dr. R. Samuel