முக்கியக் கருத்து
- தேவ பிரசன்னத்தின் மேலுள்ள தாவீதின் மிக ஆழமான வாஞ்சை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
- தேவ பிரசன்னத்தை தடைசெய்யும் சூழ்நிலை அகல நம்பிக்கையோடு ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.
ஏழு குறிப்புகள் மூலம் இந்த சங்கீதத்திலுள்ள தாவீதின் ஏக்கத்தையும், வாஞ்சையையும், ஜெபத்தையும் விவரிக்கலாம்.
1. தாவீது எப்படி தேவனை வாஞ்சித்தான் (வச.1)
மான்கள் நீர்நிலைகள்ள இடத்தில்தான் வாழமுடியும். நீர்நிலை இல்லாமல் மான்கள் மாண்டுபோம்.அதுபோல, தேவன் இல்லாமல் தான் வாழ முடியாது என்பதை வெளிப்படுத்த தாவீது உபயோகப்படுத்தியுள்ள இந்த உதாரணம் தாவீதின் மிக ஆழமான தேவன்மேலுள்ள பசி தாகத்தை விவரிக்கிறது.
"நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்'
என்று ஆண்டவர் இயேசுவே மத்தேயு 5:6 ஆம் வசனத்தில் கூறியுள்ளார்.
2. தாவீது எப்படிப்பட்ட தேவனை வாஞ்சித்தான்? (வச.2)
தாவீது ஜீவனுள்ள தேவன் மேல் வாஞ்சையாயிருக்கிறான். இந்த உலக மக்கள் ஜீவனற்ற, உயிரில்லாத பல ஜடப்பொருட்களை தேவனாக நம்பி வாஞ்சிக்கிறார்கள். 2 இராஜாக்கள் 19:15-19 ஆம் வசனங்களில் ஜீவனுள்ள தேவனிடம் தான் ஏறெடுக்கும் ஜெபத்தை எசேக்கியா இராஜா விவரித்து இருப்பது மெய்யான தேவனைப்பற்றிய அறிவையும் அவர் மேல் வைக்கும்
நம்பிக்கையே சரியானது என்பதையும் உணர்த்துகிறது. 1 தெச.1:9 வசனமும் இந்த சத்தியத்தை அறிவிக்கிறது.
3. தாவீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனை வாஞ்சித்தான் (வச.2,3,4,6,7,8,10)
தாவீது தனது மிகுந்த கசப்பான சூழ்நிலையில் இந்த இனிமையான சங்கீதத்தைப் பாடியிருக்கிறான். தான் தேவனுடைய ஆலயத்திற்கு தேவ ஜனத்தை நடத்திக்கொண்டு சென்ற சந்தோஷமான நாட்களை நினைவுகூர்ந்து, தான் இப்போது தேவ பிரசன்னத்தைவிட்டு வெகுதூரம் தள்ளப்பட்ட வேதனையான சூழ்நிலையில் இந்த பாடலைப் பாடியதை வச.2,3,4 வசனங்களில் காண்கிறோம். தற்போது தாவீது வடக்குக் கோடியில், பனி படர்ந்த எர்மோன் மலையுச்சியிலிருந்தும் சிறுமலைகளில் திரிந்தும் யோர்தான் தேசத்திலிருந்தும் இந்த சத்தத்தை எழுப்புவதை அறிவிக்கிறான் (வச.6). எர்மோன் மலைகளிலிருந்து பனி உருகி யோர்தான் நதியில் பாயும் வெள்ளப் பெருக்கின் சத்தம் தனது வேதனையின் கூக்குரலுக்குப் பதிலளிப்பதாகவும் அந்த அலைகள் தேவனுடைய சத்தமாகவே தான் கருதுவதாகவும் (வச.7) இல் கூறும் கவிதை நயம் உள்ளத்தை உருக்குகிறது.
ஆனாலும், இப்படிப்பட்ட சூறாவளியின் சூழ்நிலையிலும் தேவனுடைய கிருபை பகலிலும் இரவிலும் தனக்குக் கட்டளையிடப்படுவதை மறவாமல் நம்பிக்கையோடு தான் பாடுவதை தாவீது தெரிவிக்கிறான் (வச.8).தனது நிலமையை தன் சத்துருக்கள் தன்னை நிந்திக்கப் பயன்படுத்துவதையும் (வச.3,10) தாவீது தேவனிடம் தெரியப்படுத்துகிறான்.
4. தாவீது துயரத்தின் மத்தியிலும் தேவனை துதிக்கிறான் (வச.5,11)
கலங்கும் தன் ஆத்துமாவை தாவீது தேற்றுகிறான். தேவனை நோக்கிக் காத்திருந்து அவரை துதிப்பதே இந்தத் துயரத்தை ஆற்றும் அருமருந்து என்று தனது ஆத்துமாவுக்கு ஆலோசனை அளிப்பது ஒவ்வொரு விசுவாசியும் ஏற்றுக்கொள்ள
வேண்டிய அவசிய ஆலோசனை. பிலிப்பியர் 4:4, 1 தெச.5:16.
5. இக்கட்டின் நேரங்களிலும் இடைவிடாத ஜெபம் (வச.8,9)
தேவன் தன்னை மறந்தார் என்றது போன்ற சூழ்நிலையிலும், தனது சத்துருக்கள் தன்னை தூஷிக்கும் நிலமையிலும்,
துக்கம் மோலிடும்போதும் தொடர்ந்து ஜெபிக்கும் தாவீதின் வழியே எந்த தேவபிள்ளையையும் துன்பத்திலிருந்து மீட்கும் வழி. 1 தெச.5:17.
6. தனது உணர்வுகளை மறைக்காமல் தேவனிடம் அறிக்கையிடுதல் (வச.3,5,6,9-10)
இந்த வசனங்களில் தாவீது தனது உள்ளுணர்வுகளை மறைக்காமல் தெரியப்படுத்தி அவற்றை மேற்கொள்ளும் வழியை
யும் தனக்கு சொல்லிக்கொள்வது எல்லா விசுவாசிகளும் கற்றுக்கொள்ளவேண்டும்.
7. தன் உள்ளந்திரியங்களோடு சம்பாஷித்து தைரியப்படுத்திக் கொள்ளுதல் (வச.5,11)
தாவீது தியானிக்கிற ஒரு மனிதன். வேதவசனங்களை தியானிப்பதுடன் அவற்றைக் கொண்டு தனக்குள் தன்னை தைரியப்படுத்திக்கொள்ளும் வகையில் சம்பாஷித்துக்கொள்வது மிக முக்கியமான வழிமுறையாகும். சங்கீதம் 39:3.
Author: Rev. Dr. R. Samuel