முக்கியக் கருத்து:
- சிறுமைப்பட்டவர்கள்மேல் இரக்கப்படுகிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
- பாவத்தினின்று மனந்திரும்பி உத்தமமாய் நடக்க விரும்புகிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
1. இரக்ககுணமுள்ளவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் (வச.1-3)
சிறுமைப்பட்டு, பல தேவைகளுடன் இருப்பவர்கள்மேல் இரக்கம் பாராட்டி உதவி செய்கிறவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கி
றார். சிறுமைப்படுதல், தேவையாயிருத்தல் என்பது மனிதனின் சரீர பிரகாரமான வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் காணப்படும். ஏழ்மை, தீராத வியாதி, பிறரால் வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்படுதல் என்பவை சரீர வாழ்க்கையிலும், பாவத்தில் ஜீவித்தல், மனக்கலக்கங்கள், பிசாசு பிடி, சாபக்கட்டுகள் என்பவை ஆவிக்குரிய ஜீவியத்திலும் வரும் சிறுமைகள். இவர்களுக்கு தேவ பெலனும் விடுதலையும் தேவை. விசுவாசிகள் இப்படிப்பட்டவர்கள் மேல் இரக்கம் பாராட்டி தங்கள் பொருளாலும், பெலத்தாலும், தேவ வல்லமையாலும் விடுவிக்க சிந்தை கொண்டு செயல்படும்போது தேவன் அவ்விசுவாசிகளுக்குப் பலன் கொடுக்கிறார். கர்த்தர் சிறுமையானவர்கள் மேல் கரிசனையுடையவராயிருப்பதால் இப்படிப்பட்டவர்களை ஆசீர்வதிக்கிறார்.மத்தேயு 5:7 ஆம் வசனத்தில் "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்' என்று ஆண்டவராகிய இயேசுவே கூறியிருக்கிறார். சிறுமையானவர்களுக்கு இரக்கம் பாராட்டுகிறவர்களைக் கர்த்தர் ஆபத்து நாளில் விடுவித்து, சத்துருக்களின் கையினின்று பாதுகாத்து, வியாதிப்படுக்கையிலிருந்தும் எழுப்புகிறார்.
2. தாவீதின் கசப்பான அனுபவமும், கற்றுக்கொண்ட பாடமும் (வச.4-10)
தாவீது தனது சரீர வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சிறுமைப்பட்டு தேவையாயிருந்ததை "... உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், ...' என்று (வச.4) இலும், "தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது;...' என்று (வச.8) இலும் அறிக்கையிட்டிருப்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளுகிறோம்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது பகைஞரும், பிராண சிநேகிதரும் ஒரு மனதாக, தனக்கு உதவி செய்யாமல் எதிர்த்து நின்று தூஷித்ததை (வச.5,6,7,8,9) இவற்றில் கூறியிருப்பதை வாசிக்கிறோம். தாவீதின் இந்த அனுபவத்தின் பின்னணியை நாம் 2 சாமுவேல் 15,16 ஆம் அதிகாரங்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்த இக்கட்டான நேரத்தில் கர்த்தர் ஒருவரே தனக்கு துணையாயிருப்பார் என்பதை
உணர்ந்து "கர்த்தாவே, ... என்னை எழுந்திருக்கப்பண்ணும்' என்று (வச.10) இல் ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம்.
3. கர்த்தரின் பிரியம் (வச.11-13)
தாவீது, தான் பாவஞ்செய்திருந்தாலும் தனது சரீரத்தில் வியாதி கொண்டாலும், தேவனிடம் மனந்திரும்பி வந்து உத்தமமாய் நடக்க விரும்பியதால் கர்த்தர் தாவீதின் மேல் பிரியம்கொண்டார் என்பதை (வச.11) இல் அறிக்கையிடுகிறார். இதை தாவீது எப்படி அறிந்துகொண்டாரென்றால், தாவீதின் சத்துருக்கள் அவனை மேற்கொள்ளவில்லை. கர்த்தரே அதை தடுத்துப்போட்டார்.
தாவீதுக்கு விரோதமாக அவனுடைய பிராண சிநேகிதனே எழும்பியது, தாவீதின் குமாரனாகிய மேசியா கிறிஸ்துவின் அனுபவமாகவும் இருக்கப்போவதை இங்கே தீர்க்கதரிசன வார்த்தைகளாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆண்டவரோடு அப்பம் புசித்த யூதாசே காட்டிக் கொடுத்தான். ஆனாலும், பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுந்திருக்கப் பண்ணினதால் ஜெயம் கொடுத்தார் லூக்கா 22:1-4,47
விசுவாசிகளாகிய நாமும் கூட
1. சிறுமையானவர்கள் பேரில் இரக்கம் பாராட்ட வேண்டும்.
2. நாமும் சரீரத்திலும், ஆவியிலும் சிறுமைப்படும்போது மனந்திரும்பி தேவனோடே ஒப்புரவாகி உத்தமனாய் நடக்க
தீர்மானிக்க வேண்டும்.
அப்போது தேவன் நம்மை என்றைக்கும் நிலை நிறுத்துவார் (வச.12). நாமும் இஸ்ரவேலின் தேவன் என்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் என்று கூறுவோம் (வச.13).
Author: Rev. Dr. R. Samuel