முக்கிய கருத்து :
- நீதியின் தேவனாகிய கர்த்தர் மாத்திரமே மனுப்புத்திரருக்கு நன்மை காண்பிக்க முடியும்.
- பக்தியுள்ளவனை கர்த்தர் அறிவார்.
1. நன்மை நாடும் மனிதர் (வச.6,2,1,7,8)
எங்களுக்கு நன்மை காண்பிப்பவர் யார் என்று இந்த உலகில் மக்கள் நாடி செல்கிறார்கள். நீதியுள்ள தேவன் மாத்திரமே மனிதனுக்கு நன்மையை காண்பித்து சமாதானம் அருளமுடியும். ஆகவே, சங்கீதக்காரன் 6 ஆம் வசனத்திலே "கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்' என்கிறார். ஆனால் பலரும் கர்த்தரை விட்டு பொய்யான பொருட்கள் மேலும் மாயையானவற்றையும் நம்பி மோசம்போகிறார்கள் என்பதை 2 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
எரேமியா 10:6-14 வசனங்களில், "கர்த்தாவே, உமக்கு ஒப்பானவர் யார்? ... அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம்பொய்யே' என்றும்,
ரோமர் 1:25 வசனத்தில், "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்' என்றும் வாசிக்கிறோம்.
ஒரு மனிதன் மெய்யான நீதியும் பரிசுத்தமுமான தேவனை நோக்கிக் கூப்பிடும்போது அவர் அவனை விண்ணப்பத்தைக் கேட்டு அவனை விடுவித்து இரக்கமும் சமாதானமும் அளிப்பார் என்று 1 ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவர்களுக்கு கர்த்தர் சந்தோஷம், சமாதானம், சுகம் தருவார் என்று வசனங்கள் 7,8 இல் வாசிக்கலாம்.
2. பக்தியுள்ளவனை தேவன் அறிவார் (வச3,5)
நீதியின் தேவனை பற்றிக்கொள்ளும் தேவ பக்தியுள்ள மனிதனை கர்த்தர் தெரிந்துகொள்கிறார் (வச.3).
ஆபிரகாம் தேவபக்தியுள்ளவனாயிருந்தபடியால் தேவன் அவனைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் (ஆதியாகமம் 12 -13).
கொர்நேலியு ஜெபம் செய்கிறவனும் தான தர்மங்கள் செய்கிறவனுமாயிருந்தபடியால் கர்த்தர் அவனை இரட்சிக்கப்படும்படி தெரிந்துகொண்டார் (அப்போஸ்தலர் 10:16). அப்படிப்பட்ட நீதியுள்ள மனிதன் கர்த்தருக்கு தனது நீதியுள்ள வாழ்க்கையின் மூலம் நன்றி செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறான் (வச.5).
3. பக்தியுள்ளவர்கள் பாவத்திற்கு விலகியிருக்கவேண்டும் (வச.4)
தேவ பக்தியுள்ள மனிதர்களுக்கும் சோதனைகள் வரும். அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு மற்றவர்களைப்போல பாவம் செய்யாமல் அமைதியாக தங்கள் உள்ளிந்திரியங்களில் கர்த்தரோடு உறவாடி தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும் என்று 4 ஆம் வசனம் ஆலோசனை அளிக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel