முக்கியக் கருத்து
- தேவனை அறிந்த தேவ ஜனம் பாவத்திற்குள் விழும்போது சிட்சையும் வேதனையும் வரும்.
- தேவ ஜனம் மனந்திரும்பி தேவனுடைய இரக்கத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தாவீது ஞாபகக்குறியாக தனது மனந்திரும்புதலுக்குப் பலியாக செலுத்தி பாடிய பாடல் லேவி.2:2, 24:7
1. (வச.1-10) தாவீது தனது மதிகேட்டினால் (வச.5) தான் செய்த பாவங்கள் நிமித்தம் தனக்கு வந்த சிட்சையை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, மனஸ்தாபப்பட்டு, தேவன் இந்த சிட்சையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மனந்திரும்புதலின் பலியாக பாடிய பாடல் (வச.1-2) இந்த சிட்சை தனது சரீரத்தில் கொடிய வியாதியாக வந்து தன்னால் தாங்கக்கூடாததாயிருப்பதால் தனது மனதும் குழம்பி வேதனைக்குள்ளான நிலமையை வெளிப்படுத்துகிறான் (வச.3, 4, 6-10).
கர்த்தரை அறிந்தும், அவர் இரக்கத்தைப் பெற்றும் பிறகு பாவம் செய்யும் விசுவாசியை கர்த்தர் மன்னித்து விட்டு விடுகிறார் என்ற போதனை சரியல்ல. கர்த்தர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார் என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஆனாலும்,
மனந்திரும்பாத பட்சத்தில் அழிவையும் சந்திக்க நேரிடும் என்ற சத்தியத்தையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
(1 கொரிந்தியர் 11:29-30), எபிரேயர் 6: 4-8.
2. (வச.11-16) இப்படிப்பட்ட துயர நேரத்தில் தாவீதின் நண்பர்கள் அவனை விட்டு தூர விலகிப்போகிறார்கள். தாவீதின் சத்துருக்கள் அவனை கண்ணி வைத்து அழிக்கக் கிட்டி வருகிறார்கள். அவர்கள் தாவீதுக்கு விரோதமாக வஞ்சனை செய்து பெருமை பாராட்டி கேடானவைகளை செய்ய எத்தனிக்கிறார்கள் (வச.11-12). தாவீது தனது குற்றத்தை உணர்ந்துவிட்டபடியால், தனது சத்துருக்கள் பேசுவதை பொருட்படுத்தாமல் அதைக் கண்டு கொள்ளாமல், தேவனிடமே தனது ஜெபத்திற்கு மறுஉத்தரவை எதிர்பார்த்து, தேவனே தன்னை விடுவிக்கவும், தனது சத்துருக்களை தடை செய்ய நம்பி இருக்கிறான் (வச.13-16).
இதுவே ஒரு தேவ பிள்ளையின் சரியான அணுகுமுறை.
3. (வச.17-22) தாவீது தனது பாவத்தை உணர்ந்து, மனஸ்தாபப்பட்டு, அறிக்கையிட்டு தேவன் தன்னை கைவிடாமல் தூக்கிவிடும்படி மன்றாடுகிறான். தாவீதின் சத்துருக்களோ தாவீது மனந்திரும்பியபோதும் கூட, அவனை விரோதித்தது நன்மைக்குத் தீமை செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தாவீது "என் இரட்சிப்பாகிய ஆண்டவரே' (வச.22) என்று கூவி தனது நம்பிக்கையின் ஜெபத்தை
ஏறெடுப்பதைப் பார்க்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel