முக்கியக் கருத்து
- தெய்வ பயமற்ற மனிதனுடைய அருவருப்பான நிலமை.
- தேவனை அறிந்த மனிதனின் திருப்தியான நிலமை.
1. தெய்வ பயமற்ற மனிதனின் நிலமை (வச.1-4, 12)
தெய்வ பயமற்ற ஒரு மனிதன் துன்மார்க்கனாகவும் நல்லதல்லாத வழியிலே நடந்து பொல்லாப்பை வெறுக்காதவனாகவும் இவ்வுலகத்தில் வாழ்கிறான். அவனுடைய இருதயத்தில் அக்கிரமமானவற்றை யோசிக்கிறான். ஆகவே, அவன் வாய் துரோகமான காரியங்களைப் பேசுகிறது (வச.1-4).
இப்படிப்பட்ட மனிதருடைய இருதயத்தைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாற்கு 7:21-23 வசனங்களில்
"எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிலிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், ... களவுகளும் ... துஷ்டத்தனங்களும் ... பெருமையும் ... புறப்பட்டுவரும் ... இவைகளெல்லாம் ... மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.'
எனவே, இப்படிப்பட்ட தெய்வபயமற்ற மனிதர் தேவனால் தள்ளப்பட்டு எழுந்திருக்க முடியாமல் விழுந்துவிடுவார்கள் என்று
(வச.12) இல் தாவீது திண்ணமாக கூறுகிறான்.
"... கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்' என்று உபாகமம் 29:19 ஆம் வசனத்தில் தேவ தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரரிடம் உரைத்ததை வாசிக்கிறோம்.
2. தேவனை அறிந்த மனிதனின் நிலமை (வச.5-9)
தேவன் மகத்தான பர்வதங்கள் போன்ற நீதியும் மகா ஆழமான நியாயங்களையும், மேகமண்டலம் வரை உயர்ந்துள்ள சத்தியங்களையும் கொண்ட, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகா பரிசுத்தமும், அருமையான அளவில்லாத கிருபையும் உடையவராதலால் அவரை அறிந்த மனிதன் சம்பூரணமாக திருப்தியடைவான்.
மனிதனுக்கு பரிபூரணஜீவன் அல்லது நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும் ஜீவ ஊற்று கர்த்தரிடமிருந்துதான் புறப்படுகிறது. ஆகவே, கர்த்தரிடம் அவருடைய ஆலயத்திற்கு வருகிற மனிதன் அவருடைய பாதுகாப்பின் நிழலில் தங்கி, தனது தாகம் தீர்க்கப்படுகிறான். அவனுடைய பாதையில் வெளிச்சம் பிரகாசிக்கிறது.
"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி'
என்று தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பற்றியும், அவரை அண்டிக்கொள்ளும் மனிதனுடைய பாக்கியத்தைப் பற்றியும் யோவான் சுவிசேஷகன் யோவான் 1:4,9 வசனங்களில் எழுதியிருக்கிறான்.
"... என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்'
என்று இயேசு கிறிஸ்துவே யோவான் 7:38 ஆம் வசனத்தில் கூறி இருக்கிறார்.
பல்லவி
பாலைவனத்தின் நீரோடை போல்
புதுகிருபை கர்த்தர் பொழிந்தாரே
இத்தனை நன்மை எனக்களித்தாரே
கர்த்தரை நான் என்றும் மறவேனே
சரணம்
3. ஜீவத்தண்ணீரின் ஊற்றண்டையில்
ஜீவன் அடைந்தே என் தாகந் தீர்த்தேன்
ஜீவன் வழி சத்தியம் இயேசுவே
ஜீவாசீர்வாதம் தேவனின் பாதம்
ஜெயமாகவே என்றும் பெற்றிடுவேன் - பாலைவனத்தின்
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
3. தேவனை அறிவதே வேண்டும் (வச.10, 11)
துன்மார்க்கனின் கை தன்னைப் பிடிக்காமல், அவன் கால் தன்னை மேற்கொள்ளாமல் தான் தேவனை அறிகிற மேலான
பாக்கியத்தையே பெற தாவீது விரும்பி தனது ஆவலை வெளிப்படுத்துகிறான்.
உங்களுடைய விருப்பமும் வாஞ்சையும் என்ன? சிந்திப்பீர்களா? முடிவெடுப்பீர்களா?
Author: Rev. Dr. R. Samuel