முக்கியக் கருத்து:
- தேவ மக்களின் சத்துருக்களை தேவன் நியாயந்தீர்க்க ஜெபம்.
- தேவ ஊழியனின் சுகத்தை விரும்பும் தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும்.
1. கர்த்தாவே நீர் யுத்தம்பண்ணும் (வச.1-26)
தேவ ஜனத்தை துன்பப்படுத்தும் சத்துருவோடே தேவன் யுத்தம் செய்து நியாயந்தீர்க்க தாவீது ஏறெடுக்கும் ஜெபம்.
தேவ ஜனத்தின் சத்துரு, தேவ மக்கள் நன்மை செய்தாலும் பதிலுக்கு தீமை செய்கிறார்கள். ஓயாமல் தன்னை நிந்தித்து, தனது ஆபத்தில் அவர்கள் சந்தோஷப்படுவதால் தேவனே அவர்களை அழிக்கவேண்டும், தேவதூதன் அவர்களை துரத்திப் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று தாவீது ஜெபிக்கிறான்.
தாவீது தனது சத்துருக்களைத் தான் பழிவாங்க விரும்பாமல் தேவனிடம் விட்டுவிடும் செயல் தாவீதின் நீதியை விளங்கச் செய்கிறது. ஒவ்வொரு தேவ பிள்ளையும் இப்படியே தங்கள் விசுவாச ஜீவியத்தில் பிறர் மேல் தங்கள் தாக்குதலை தொடுக்கக்காமல் தேவனிடமே விட்டுவிட வேண்டும். (உபா.32:35, ரோமர் 12:1) பொல்லாதவர்கள் தேவனிடம் மனந்திரும்பி இரட்சிக்கப்பட ஜெபிப்பது அவசியமாயினும், பொல்லாதவர்களால் கொடுமைக்கு ஆளாகும் சிறுமைப்பட்டவர்களை, அவர்களிலும் பெலவான்களாகிய துன்மார்க்கர் கையிலிருந்து கர்த்தர் விடுவிக்க ஜெபிப்பதும் அவசியம் (லேவி.18:24,25; வெளி.6:10,17) லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் தேவன் தமது பிள்ளைகளின் ஜெபம் கேட்டு அவர்களின் எதிராளிகளுக்கு எதிராக தம் ஜனத்திற்கு நியாயம் செய்வார் என்ற உண்மை தெளிவாகிறது.
ஆகவே, கர்த்தரை நம்பும் தேவ ஜனம் கொடுமைக்கும் அநியாயத்திற்கும் ஆளாகி நெருக்கப்படும்போது, தாங்களே பழி வாங்கத் துணியாமலும், சோர்ந்து போகாமலும் தேவனிடம் ஜெபிக்க வேண்டும். தேவன் அக்கிரமத்தை இந்த உலகத்தினின்று முற்றிலும் அழிக்க ஜெபிப்பது அவசியம். அப்பொழுது தான் தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் முழுமையாக வரும்.
2. தேவ ஊழியனின் சுகம் (வச.27,28)
தேவ ஊழியனின் சுகத்தைக் கர்த்தர் விரும்புகிறார். தேவ ஊழியனுடைய நீதி விளங்கவேண்டும். சாட்சி விளங்கவேண்டும் என்று விரும்பும் தேவ பிள்ளைகள், தேவ ஊழியனின் சுகத்தைக் கர்த்தர் விரும்புவதால் அவருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லவேண்டும். தேவனுடைய நீதியையும், துதியையும் தேவ மக்கள் எப்போதும் சொல்லிக் கொண்டி ருக்கும்போது, பொல்லாப்பு அழிக்கப்பட்டு மறைந்தே போகும். ஆமென்!
Author: Rev. Dr. R. Samuel