முக்கியக் கருத்து:
- இன்ப நேரத்திலும், துன்ப நேரத்திலும் எந்த நேரத்திலும் பரிசுத்தவான்கள் கர்த்தரைத் துதிக்க வேண்டும்.
- சிங்கம்போன்ற பலமுள்ளவர்கள் தாழ்ச்சியடைந்தாலும் கர்த்தரை நம்பும் பரிசுத்தவான்களையோ கர்த்தர் குறைவின்றி காக்கிறார்.
முன்னுரை
காத் இராஜாவாகிய அபிமெலேக்கு என்னும் ஆகீஸ் முன் பைத்தியக்காரன்போல நடிக்க வேண்டிய சூழ்நிலையில், தான் சிறுமைப்படுத்தப்பட்டபோதும், கர்த்தர் தாவீதை எல்லா இடுக்கண்களினின்றும் காத்துக்கொண்டபடியால், தனது அனுபவ சாட்சியுடன் தாவீது பாடும் துதிப்பாடல். 1 சாமுவேல் 21:10-15.
1. எக்காலத்திலும் கர்த்தருக்கு துதி (வச.1-6)
இன்ப துன்ப நேரங்கள் என்ற வித்தியாசமின்றி எக்காலத்திலும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்று தாவீது தனது அனுபவத்திலிருந்து சாட்சியாக கூறுகிறான். ஏனென்றால், தாவீதை கர்த்தர் எல்லா சூழ்நிலைகளும் பாதுகாத்துக் கொண்டதே இதற்குக் காரணம் (வச.1-3) .தான் சிறுமைப்படுத்தப்பட்ட போதும், பயந்தபோதும் (4) பலவித இடுக்கண்களில் சிக்கியிருந்தபோதும் (6) தனது ஏழ்மை நிலையிலிருந்து கர்த்தரை கூப்பிட்டபோது (6) கர்த்தர் தாவீதை இரட்சித்தார். கர்த்தரை ஏறெடுத்துப் பார்த்தபோது தாவீதுக்கு ஒரு நம்பிக்கையின் வெளிச்சம் உதித்ததை உணர்ந்து கொண்டான் (5), தான் மட்டுமல்ல, தன்னோடு கூட இருந்த சிறுமைப்பட்டவர்கள் அனைவருமே கர்த்தரால் விடுவிக்கப்பட்டபடியால், அவர்கள் அனைவருமே தாவீ தின் அனுபவ சாட்சியைப் பகிர்ந்துகொள்ளுகிறவர்களாயிருக்கிறார்கள் என்பதை இந்த வசனங்கள் நமக்குத் தெரியப்படுத்துகிறது.
2. தாவீது கூறும் புத்திமதி (வச.7-14)
அனைத்து தேவ பிள்ளைகளையும் தாவீது தனது புத்திமதிகளுக்கு செவிகொடுக்க அழைக்கிறான் கர்த்தர் நல்லவர் என்பதை நடைமுறையில் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் மூலம் அனுபவித்துப் பார்க்க வே(வச.11).ண்டும். (வச.8) கர்த்தருக்குப் பயந்து நடந்து (வச.9) பொல்லாத செய்கை, கபட்டு உதடு, பேச்சு, தீமை இவற்றை விட்டு விலகி சமாதானத்தை நாடும் (வச.12-14). பரிசுத்தவான்கள் ஒருபோதும் குறைவடையாமல் கர்த்தர் பாதுகாக்கிறார். சிங்கம் போன்ற பெலமுள்ளவர்கள் தாழ்ச்சியடைந்தாலும் கர்த்தரைத் தேடும் தேவ ஜனம் குறைவுபடாது (வச.10).
இப்படிப்பட்ட தேவ பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாக கர்த்தர் தமது தூதர்களை அனுப்பிவைக்கிறார் ஆதியாகமம் 32:1,2,
2 இராஜா. 6:17, எபிரேயர் 1:14 இந்த வசனங்கள் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது.
3. நீதிமானின் விடுதலையும் துன்மார்க்கனின் அழிவும் (வச.15-22)
நீதிமானுக்கு இந்த உலகத்தில் துன்பம் அநேகம் வந்தாலும் அவன் கர்த்தருக்குள் தனது பாதுகாப்பை தேடிக்கொள்வதால் விடுதலையை பெறுகிறான்.
"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்' நீதிமொழிகள் 18:10.
நீதிமானுடைய எலும்புகள் முதலாய் கர்த்தர் பாதுகாக்கிறார். (20) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் பட்டிருந்தபோது, மற்ற குற்றவாளிகளின் கால் எலும்புகளை முறித்த ரோமச் சேவகர்கள் கர்த்தருடைய கால் எலும்புகளை முறிக்காமல் விட்டார்கள். பிதாவாகிய தேவனுடைய செயல் இது.
தீமை செய்கிறவர்களை பூமியிலிராமல் முற்றிலும் தேவன் அழிக்கும் காலம் வரும். (16) தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாகவே கர்த்தருடைய கண்கள் எப்போதும் இருக்கும் (16). ஆனால், இருதயம் நொறுங்குண்டு கர்த்தரை நோக்கிப் பார்க்கும் ஆவியுள்ளவர்களை தேவன் மீட்கிறார் (18-22). 1 பேதுரு 3:10-12 வசனங்களில் பேதுரு அப்போஸ்தலனும் கூட இதே சத்தியத்தை புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குக் கூறுகிறார்.
Author: Rev. Dr. R. Samuel