முக்கியக் கருத்து:
- எதிர்ப்பு சக்திகளால் உடைக்கப்பட்டவனை, தேவன் தம் மீதுள்ள நம்பிக்கையால் விடுவிக்கிறார்.
- விடுவித்த தேவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
1. என்னை விடுவியும் (வச.1,4, 8-13)
சத்துருக்களின் வஞ்சக செயலினால் (4,8), வியாதியின் கொடுமையினால் (9,10), நண்பர்களும் கைவிட்டு வெறுத்ததினால் (11-13) தாவீது ஒரு உடைந்துபோன பாத்திரத்திற்கு ஒப்பாக நொறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி கர்த்தரிடம் "என்னை விடுவியும்' (1) என்று ஜெபிக்கிறான். அநேகருடைய அவதூறான வார்த்தைகள் தன்னை பயத்திற்குள்ளாழ்த்தியதை (13) தாவீது கூறி புலம்புவது, எரேமியா 20:10 ஆம் வசனத்தில் எரேமியா தீர்க்கதரிசி புலம்புவதற்கு ஒப்பாயிருக்கிறது. விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட உடைக்கப்படும் சூழ்நிலைகள் வரும்போது நம்மை விடுவிக்கும்படி நாம் கூப்பிட ஒரு தேவன் நமக்கு இருக்கிறார் என்ற பெரிதான நம்பிக்கையையும், ஆறுதலையும் இந்த வசனங்கள் நமக்குக்
கொடுக்கிறது.
2. உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (வச.5-7, 14-18)
இந்த வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது மரணத்திற்கு முன் சொல்லப்பட்ட கடைசி வார்த்தைகளில் ஒன்று (லூக்கா 23:46). சீஷனாகிய ஸ்தேவானும் கூட இரத்த சாட்சியாய் மரிக்கும்போது (அப்.7:59) இல் சொல்லப்பட்ட
வார்த்தை இது. இவைகள் ஒரு விசுவாசி, தேவ பிள்ளை தேவன் மேல் வைத்திருக்கும் விசுவாசத்தைக் காட்டுகிறது. எப்படிப் பட்ட ஆபத்தான சூழ்நிலையிலும் தேவனை சார்ந்து அவரிடம் அண்டிக்கொள்ளும் உணர்வைக் காட்டுகிறது. நம்முடைய ஆவி பிரியும் தருவாயில் நாம் இந்த வார்த்தைகளை கூறக்கூடிய தைரியம் நமக்கு இருக்குமா என்று ஒவ்வொரு விசுவாசியும் தன் வாழ்நாளில் சிந்தித்துப் பார்ப்பது மிகுந்த பயனைக் கொடுக்கும்.
இங்கே, தாவீது (வச.5) இல் இந்த வார்த்தைகளைக் கூறும்போது, தனது மிகுந்த ஆபத்து நேரத்தில் தனது முழு வாழ்க்கையையுமே தேவனுடைய பாதுகாப்பிற்கு ஒப்படைப்பதை காண்பிக்கிறது.
"என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்' எரேமியா 20:12 வசனத்தில் எரேமியா சேனைகளின் கர்த்தரிடம் தனது எல்லா காரியங்களையும் சத்துருக்களின் செய்கைகளை குறித்தும் ஒப்படைத்து விட்டு ஒரு சிறந்த பாதுகாப்பை தேடிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தாவீது தேவனிடம் தன் முழு வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு, வீணான மாயைகளை நான் பற்றிக்கொள்ளாமல் அவற்றை வெறுத்து, கர்த்தாவே உம்மை மாத்திரமே என் விடுதலைக்காக நம்பி இருக்கிறேன் (வச.1,3,5,6,7) என்று இந்த வசனங்களில் கூறி தேவ கிருபை, இரக்கம், நீதி இவற்றின்மேல் முற்றிலும் தனது நம்பிக்கையின் நங்கூரத்தைப் பாய்ச்சி இருப்பது எல்லா விசுவாசிகளுக்கும் நல்ல புத்திமதியையும் ஆலோசனையையும் கொடுக்கிறது (வச.14-18).
3. உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது (வச.19-24)
தாவீது தேவன் தன்னை எல்லா இக்கட்டுகளுக்கும் விடுவிப்பார் என்பதை நம்புவது மாத்திரமன்றி, இப்படிப்பட்ட இக்கட்டிலிருந்து பலமுறை தன்னை விடுவித்திருக்கிறார் என்பதை ருசித்து தேவனை மனதார பாராட்டி நன்றி செலுத்துகிறான் (வச.21,22).அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு பயப்படும் எல்லா பரிசுத்தவான்களையும் கர்த்தர் இவ்விதமாகவே விடுவிக்கிறார் என்றும், இந்த விடுதலையின் ஏற்பாட்டை தேவன் தேவபிள்ளைகளுக்காக ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்ற சத்தியத்தையும் எல்லா பரிசுத்தவான்களுக்கும் அறிவிக்கிறான் (19,20).
ஆகவே, தேவ மக்கள் கர்த்தருக்குக் காத்திருந்து, திடமனதாயிருக்க வேண்டும், கர்த்தரில் முழுமனதாக அன்பு கூற வேண்டும் என்ற ஆலோசனையை (வச.23,24). இவற்றில் கூறி அற்புதமாக இந்த சங்கீதத்தை முடிக்கிறான். ஆமென்.
Author: Rev. Dr. R. Samuel