முக்கியக் கருத்து:
- 1. அழிவிலிருந்து பாதுகாத்து உயர்த்திய கர்த்தரை நினைவு கூர்ந்து போற்றவேண்டும்.
- 2. உலக செல்வமும், மாம்சமும் பெலனும் ஒருவனை நிலையாக வைக்க முடியாது. அவைகளை நம்பினால்
துக்கமே. தேவன் மீதான நம்பிக்கையோ துக்கத்தை சந்தோஷமாக மாற்றும்.
முன்னுரை
வீடு பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம் என்ற தலைப்பின்படி இந்த சங்கீதம்
1) 2 சாமுவேல் 5 ஆம் அதிகாரத்தில் தாவீதுக்குக் கட்டப்பட்ட வீட்டை பிரதிஷ்டை செய்தபோதுபாடியிருக்கலாம், அல்லது
2) 2 சாமுவேல் 6 ஆம் அதிகாரத்தில் தேவனுடைய பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் வைத்தபோது பாடியிருக்கலாம், அல்லது,
3. தேவனுடைய இரண்டாம் ஆலயம் கட்டப்பட்டபோது தாவீதின் இந்த சங்கீதத்தை உபயோகப்படுத்தியிருக்கலாம்.
அழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி (வச.1-5).
தாவீது தனது கடந்து சென்ற நாட்களின் அனுபவத்தை வைத்து இந்த வசனங்களைப் பாடியிருக்கிறார். தாவீதின் சத்துருக்கள் பலவாராக முயற்சிசெய்தும், தேவனுடைய கிருபையால் அவர்கள் மேற்கொள்ள முடியாமல் தாவீதை கர்த்தர் கை தூக்கி விட்டார். தாவீதும்கூட தனது தவறுகளால் சிட்சிக்கப்பட்டு வியாதிப்பட்ட நேரத்திலும் கூட, கர்த்தரை நோக்கி கூப்பிட்டவுடன் , தேவன் தாவீதை குணமாக்கினார். குழியிலே அல்லது மரணத்திலே அழிந்துவிடாமல் என்னை உயிரோடே காத்துக் கொண்டபடியால் தேவனே உம்மை போற்றுகிறேன் என்கிறார். இப்படிப்பட்ட, கர்த்தருடைய, பரிசுத்தமான செயல்களை தேவ மக்களாகிய பரிசுத்தவான்கள், விசுவாசிகள், எப்போதும் நினைவு கூர்ந்து அவரை பாடி, துதித்துக் கொண்டாட வேண்டும் என்று தாவீது அறிவுறுத்துகிறான்.
உலக செல்வமல்ல தேவ தயவே பெலன்
தாவீது தனக்கு கிடைத்த செல்வச் செழிப்பு. தனது மக்கள், படை பலம் இவை தனக்கு பாதுகாப்பையும் வெற்றியையும் கொடுக்கிறது என்று யோசித்த நேரத்தில்தானே தேவ தயவு அவனை விட்டு அற்றுப்போயிற்றென்று உணர்ந்தான். குழியில் இறங்கத்தக்க நிலைக்குத் தள்ளப்பட்டு, கலங்கினான் (வச.6-8). ஆனால், உடனே தேவனை நோக்கி மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி கெஞ்சியபோது, கர்த்தர் சகாயம் செய்தார். 2 சாமுவேல் 24: 10.
1. "குழியில் இறங்குகையில் ... என்ன லாபமுண்டு?" (வச.8) என்று தேவனிடம் தாவீது கேட்கிறான்.
"... பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?' (சங்கீதம் 6:5) என்ற வாதத்தை தேவன் முன் வைத்து தன்னை தேவன் மரணத்திலிருந்து காத்துக்கொண்டால் அவருக்கு நன்றியுள்ளவனாயிருந்து கர்த்தரை துதிப்பேன் என்ற பொருத்தனை ஜெபத்தையும் ஏறெடுப்பதைப் பார்க்கிறோம்.
விசுவாசிகளாகிய நாமும், கர்த்தர் நம்மை இக்கட்டுகளினின்று விடுவித்து வெற்றியை கொடுக்கும்போது, நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதற்காக, பொருத்தனை செய்து ஜெபிக்கவும் வேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel