முக்கியக் கருத்து
- கர்த்தர் நம் ஜெபத்தைக் கேளாதவர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் அவரை நம்பவேண்டும்.
- கர்த்தர் ஏற்ற நேரத்தில் நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை உயர்த்துவார்.
கர்த்தர் ஜெபத்தை கேட்க கதறலின் ஜெபம்
(வச.1-5) தாவீதுக்கு கர்த்தர் தனது ஜெபத்தைக் கேளாமல் மவுனமாக இருந்தது போன்ற சூழ்நி;லை ஏற்பட்டபோது இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். நமக்கும் அநேக நேரங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படுவதுண்டு. ஆனாலும், கர்த்தரை தாவீது அந்த சூழ்நிலையிலும் தனது கன்மலையாகவே நம்புகிறதைப் பார்க்கிறோம்.
"என் கன்மலையாகிய கர்த்தாவே, ..." (வச.1) என்று தான் அழைக்கிறானே தவிர வேறு எந்த விதத்திலும் அவரை அழைக்கவில்லை. ஒவ்வொரு விசுவாசியும் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடம் இது. கர்த்தர் நம்மை கேளாதவர்போல எப்போதுமே இருந்துவிட மாட்டார்.
"... ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" என்று எபிரெயர் 4:16 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
"... உம்முடைய பரிசுத்த சந்நிதிக்காக நேராகக் கையெடுக்கையில் ..." (வச.2)
என்று தாவீது கூறும்போது கர்த்தருடைய பரிசுத்தத்தைத் தன் வாழ்க்கையில் எப்போதும் முக்கியப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். நமது எல்லா சூழ்நிலையிலும் இந்த உணர்வு விசுவாசியின் இருதயத்தில் இருக்கவேண்டும். கர்த்தர் நமக்கு உதவி செய்யாவிட்டால் நாம் நிர்மூலமாகிவிடுவோம் என்ற நிலமையையும் தாவீது அறிக்கையிடுகிறான்.
தாவீது கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கர்த்தர் தன்னை துன்மார்க்கரோடும், அக்கிரமக்காரரோடும் தன்னை அதே பட்டியலில் சேர்க்கவேண்டாம் என்று மன்றாடுகிறார் (வச.3,4). ஒவ்வொரு விசுவாசியின் வாஞ்சையும் இப்படியே இருக்கவேண்டும்.
அதே நேரத்தில் இந்த பூமியை பாவத்தினால் கெடுக்கும் அக்கிரமக்காரர்களை அவர்கள் பொல்லாப்புக்கு ஏற்றபடி தண்டித்து அவர்களை இல்லாமல்போகச் செய்ய செய்யும் ஜெபம் தாவீதின் தேவ வைராக்கியத்தைக் காண்பிக்கிறது (வச.4,5) விசுவாசிகளாகிய நாமும் அப்படிப்பட்ட வைராக்கியத்துடன் காணப்படுவோமா?
கர்த்தர் ஜெபத்தைக் கேட்டதற்காக நன்றி
(வச.6-9) ஜெபத்தைக் கேட்காதவர் போலிருந்த தேவனுடைய மவுனநிலை ஏற்ற நேரத்தில் மாறி,
"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்" (வச.6 )
என்று தாவீது கூறுவது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நமக்கும் இப்படித்தான் கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு நம்மையும் சந்தோஷமடையச் செய்வார். அதற்குக் காரணம் தாவீது கர்த்தரையே தனக்குப் பெலனாக முழுமனதுடன் நம்பியிருந்ததே என்று (வச.7) இல் தெளிவுபடுத்துகிறார். கர்த்தர் தமக்கு சுதந்திரமாகத் தெரிந்துகொண்ட இரட்சிக்கப்பட்ட தேவ மக்களாகிய நம்மை எப்போதும் போஷித்து, பராமரித்து நமக்குப் பாதுகாப்பான அரணாக இருந்து நமது ஆவிக்குரிய, சரீர பிரகாரமான வாழ்க்கை வளம்பெறச் செய்து நம்மை உயர்த்துவார் என்பது உறுதி (வச.8).
Author: Rev. Dr. R. Samuel