முக்கியக் கருத்து :
- கர்த்தர் உலகத்தையும் அதிலுள்áவற்றையும் படைத்தவர்
- கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல நாம் பரிசுத்தமடைய வேண்டும்.
தாவீது தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியை தான் எபூசியரிடமிருந்து யுத்தத்தில் பிடித்த சீயோன் மலைக்கு கொண்டு வரும்போது பாடப்பட்ட ஜெயகீதம் (2 சாமுவேல் 6). இதனுடைய ஆவிக்குரிய பொருள் அதைவிட ஆழமான மேன்மையானது.
வச.1,2 "பூமியும் அதின் நிறைவும், ... கர்த்தருடையது. அவரே அதைக் ... ஸ்தாபித்தார்'.
வானத்தையும் பூமியையும் படைத்தவர் கர்த்தர். எல்லாம் அவருடையது பூமிக்கும் அதிலுள்ள எல்லாவற்றிற்கும் கர்த்தர் உரிமையாளராக இருந்த போதிலும், இந்த பூமியும் உலகமும் பிசாசின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்க்கிறோம்.
'... உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்' 1 யோவான் 5:19 .
முதல் மனிதன் ஆதாம் பிசாசுக்கு செவிகொடுத்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதினிமித்தமே உலகம் பாவத்திற்குள் வந்தது என்று ரோமர் 5:16-19 வசனங்களில் வாசிக்கிறோம். ஆனாலும், இந்த பூமியும் அதன் நிறைவும் மறுபடியும் கர்த்தரின் முழு ஆளுகைக்கு வரும் என்று வெளி. 5:13ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
"அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், ... சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ... ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்' வெளி. 5:13
வச.7-10 கர்த்தர் மகிமையின் இராஜா. அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவர் என்று தாவீது வருணிக்கிறார். சீயோன் கோட்டையை எபூசியரிடமிருந்து பிடிக்க யுத்தத்தில் வல்ல கர்த்தர் தனக்கு உதவியதை இங்கே பாடுகிறார். மகிமையுள்ள கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி சீயோன் மலை மேல் உட்பிரவேசிக்க வாசல்களை உயர்த்தும்படி பாடுகிறார்.
வானத்தையும் பூமியையும் படைத்தக் கர்த்தர் பிசாசின் ஆளுகைக்குள் சென்ற அனைத்தையும் மீண்டும் மீட்டெடுக்க யுத்த வீரராக இறங்கிவந்து பிசாசை வென்று அனைத்தையும் மீட்டுக்கொள்வார் என்று வெளிப்படுத்தல் 17 முதல் 19 அதிகாரங்கள் வரை வாசிக்கிறோம்.
"... ஆட்டுக்குட்டியானவர் (இயேசு கிறிஸ்து) கர்த்தாதி கர்த்தாவும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை (பிசாசின் சேனைகளை) ஜெயிப்பார்' (வெளி.17:14).
"... சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்' (வெளி.19:6).
இவ்விதமாக மகிமையின் இராஜா சர்வத்தின் மேலும் மீண்டும் உரிமைபெற யுத்த வீரனாக வந்து ஜெயம் பெறுவார்.
வச.3-6 தாவீது தேவனுடைய பெட்டியுடன் சீயோன் பர்வதம் வரை வந்து, யார் இந்த சீயோன் பர்வதத்தில் தேவனுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு போகமுடியும் என்றும், தேவனுடைய பர்வதமாகிய சீயோன் மலை மேல் யார் தங்கி இருக்க முடியும் என்றும் கேட்கிறான்.தேவனுடைய பெட்டியை பரிசுத்தமுள்ளவர்கள் தான் எடுத்துக் கொண்டு போகமுடியும். அபாத்திரமாக தொட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆகவே, கைகளையும் இருதயத்தையும் சுத்திகரித்துக் கொள்ள வேண்டுமென தாவீது அறிவிக்கிறான்.
கர்த்தர் யுத்த வீரனாக வந்து, பூமியையும் அதிலுள்ள அனைவற்றையும் பிசாசினிடமிருந்து மீட்டெடுத்து பிறகு, தமது பரிசுத்த ஸ்தலத்தை ஸ்தாபிப்பார். இந்த கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலமாகிய தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க, நீடித்து வாழ, நம் கைகளின் கிரியைகள் நீதியாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். இருதயத்தின் எண்ணங்கள் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் ...' மத்தேயு 5:8 என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் சொன்னார்.
"பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே' என்று எபிரெயர் 12:14இல் கூட வாசிக்கிறோம்.
நமது இதயக்கதவுகளைப் பரிசுத்தத்தில் உயர்த்தும் போது கர்த்தர் நமக்குள் பிரவேசிப்பார்.(வச 7,9)
Author: Rev. Dr. R. Samuel