முக்கியக் கருத்து :
- யுத்தத்தில் வெற்றிக்காக ஜெபப்பாடல்.
- கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு வெற்றி கொடுப்பார் என்ற நம்பிக்கை.
யுத்தத்திற்கு செல்வதற்கு முன் பாடப்படும் ஜெபப்பாடல் இது. தாவீது யுத்தத்திற்கு செல்லும்போது கர்த்தர் வெற்றி அருளவேண்டும் என்று இஸ்ரவேலர் பாடிய ஜெபப்பாடல்.
(வச.1,2) யுத்தத்தில் ஆபத்து வரும், அப்போது கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிப்பாராக என்று ஜெபிக்கிறார்கள். கர்த்தர் தமது பரிசுத்த ஸ்தலமாகிய வல்லமை பொருந்திய இடத்திலிருந்து பதில் கொடுப்பதால் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகிறது.
விசுவாசிகளாகிய நமக்கு ஒரு யுத்தம் உண்டு. அது பொல்லாத ஆவிகளாகிய பிசாசின் சேனைகளுடன் என்று வாசிக்கிறோம்.
"ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, ... அந்தகார லோகாதிபதிகளோடும், ... பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ... ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு ... வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்' என்று எபேசியர் 6:12-18 வரையான வசனங்களில் அறுவுறுத்தப்படுகிறோம்.
(வச.3-6) கர்த்தர் நிச்சயம் ஜெபத்தைக் கேட்டு வெற்றியைத் தருவார் என்ற நம்பிக்கையை பார்க்கிறோம். தாவீது இராஜா கர்த்தருக்கு நன்றியாக பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி ஜெபித்திருக்கிறபடியால் தேவன் தாம் அபிஷேகம் பண்ணின ராஜாவை யுத்தத்தில் இரட்சிப்பார் என்றும் இராஜாவின் மனவிருப்பத்தை நிறைவேற்றுவார் என்றும் தேவ மக்கள் நம்பிக்கையின் அறிக்கையை செய்கிறார்கள்.
"... நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்' என்று நீதிமொழிகள் 10:24ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்கு நம்மையே காணிக்கையாக செலுத்தி அவருக்குப் பிரியமாய் ஜீவிக்கும்போது, நமது போராட்டங்களில் கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்.
"இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே' என்று ரோமர் 8:37 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்' (சங்.20:7) என்று கூறி இரவேலர் தங்களுடைய படைபலத்தின் மேல் பெருமை பாராட்டி நம்பிக்கை வைக்காமல், தேவனுடைய பெலத்தின் மேலேயே முழு நம்பிக்கை வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
"பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' என்று சகரியா 4:6ஆம் வசனத்திலும்
"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு'
என்று பிலிப்பியர் 4:13 வசனத்திலும் வாசிக்கிறோம்.
(வச.8,9) இந்த இரண்டு வசனங்களிலும் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டார்கள், நாங்கள் ஜெயித்தோம். கர்த்தர் ராஜாவை இரட்சித்த பிறகு அவர் எங்கள் வேண்டுதலைக் கேட்பார் என்று இஸ்ரவேலர் முடிவை அறிவிக்கின்றார். கிறிஸ்துவும் சிலுவையில் வெற்றி சிறந்ததால் விசுவாசிகளாகிய நம் ஜெபத்தைக் கேட்பார் என்று உறுதியாகிறது.
Author: Rev. Dr. R. Samuel