முக்கியக் கருத்து :
- கர்த்தர் தன்னைத் தனது சத்துருக்கள் கைகளினின்று விடுவித்ததை விவரித்துப் பாடிய சங்கீதம்.
. ஏன் விடுவித்தார்.
. எப்படி விடுவித்தார்.
- கர்த்தருக்கு முன்பாக தாவீது நீதியாய் நடந்துகொண்டதற்கு கிடைத்த பிரதிபலன்.
ஏன் விடுவித்தார்
(வச.4-5) தாவீதின் சத்துருக்கள் மரணக்கட்டுகள்போல் அவனை சூழ்ந்துகொண்டது அவனுடைய பெலத்தை மிஞ்சிப்போனது.
(வச.1:3,6) தாவீது கர்த்தருடைய பெலத்தின்மேல் நம்பிக்கைவைத்து கர்த்தரைத் தனக்குக் கன்மலையாகவும் சத்துரு உட்புக முடியாத அடைக்கலக் கோட்டையாகவும் கொண்டதால் கர்த்தர் தாவீதை விடுவித்தார். தாவீது தனது நெருக்கத்தின்போது முறுமுறுக்காமல், துதியுடன் கர்த்தரை நோக்கி அபயமிட்டதால் தாவீதின் ஆழமான அன்பு அவனுடைய சத்தத்தைத் தேவ ஆலயத்தில் எட்டச்செய்தது. தாவீதின் கூப்பிடுதல் தேவனுடைய சந்நிதியில் கேட்கப்படுவதை எந்தச் சூழ்நிலையும் தடுக்க முடியவில்லை. நம்முடைய நெருக்கங்கள் நாம் தேவனிடம் மன்றாடி விடுதலையைப் பெற்றுக்கொள்ளும் ஜெபங்களை தடுக்கக்கூடாது. ஒடுக்கப்படுகிறவர்களின் மெல்லிய கூக்குரலும்கூட தேவதூதர்களின் ஆரவாரதொனியின் மத்தியில் கர்த்தருடைய செவிகளில் கேட்கும்.
"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்' (நீதிமொழிகள் 18:10).
எப்படி விடுவித்தார்
(வச.7-18) கர்த்தர் தீவிரமாக இறங்கி வந்து தமது தாசனை விடுவித்தார். கர்த்தருடைய பாதையில் இருந்த சர்வமும் நடுநடுங்கும்படியாக தமது வல்லமையினால் எல்லா சத்துருக்களையும் சிதறடித்து தாம் தெரிந்துகொண்டவனை தேவன் தப்புவித்தார்.
தேவன் தமக்கு உண்மையுள்ளவர்களை, தாம் தெரிந்துகொண்டவர்களை மீட்கும்படிக்கு எல்லா சத்துருக்களையும் சிதறடித்து வல்லமையான காரியங்களை செய்வார். தமது ஜனம் பெலனற்றவர்களாயினும் அவர்களிலும் அதிக பலவான்களாகிய பலத்த சத்துருக்களின் கைகளினின்று அவர்களை விடுவிப்பார்.
"தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்' (லூக்கா 1:74,75).
தேவன் நம்மை விடுவித்த பிறகு நாம் நம்முடைய பெலவீனத்தை அறிக்கையிட்டு அவருக்கே எல்லா துதியும் கனமும் செலுத்தவேண்டும்.
தாவீதின் நீதியுள்ள நடக்கைக்கு கிடைத்த பிரதிபலன் (வச.20-36)
தாவீது தேவனுக்கு முன்பாக நீதியில் உண்மையாய் நடந்து தனது வழிகளை காத்துக் கொண்டபடியால் கர்த்தர் தாவீதை பெலத்தால் இடைக்கட்டி பெலமுள்ள கால்களையும் புயங்களையும் கொடுத்து வெற்றியுள்ள வாழ்க்கையை கட்டளையிட்டார்.
கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் ஜீவிக்கும் எல்லா தேவ மக்களுக்கும் கர்த்தர் பாவத்திற்கு எதிர்த்துப் போராடக்கூடிய சத்துவத்தையும் பெலத்தையும் கொடுப்பார் (எபேசியர் 6:10-17).
தாவீதின் சாட்சி (வச.37-49)
தேவனையே தனக்குக் கன்மலையாகவும் கோட்டையாகவும் நம்பிய தாவீது, கர்த்தர் தமது உடன்படிக்கையை காத்துத் தன்னிலும் பலவான்களாகிய தனது சத்துருக்களை தனக்குக் கீழ்ப்படுத்தினார் என்று சாட்சி கூறி கர்த்தருக்கே எல்லா துதியையும் கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறான்.
Author: Rev. Dr. R. Samuel