முக்கியக் கருத்து :
- கர்த்தருக்கு முன்பாக தான் உண்மையாயிருப்பதினிமித்தம் கர்த்தர் தன் கூப்பிடுதலை கவனிக்கவேண்டும் என்று தாவீது விண்ணப்பிக்கிறான்.
- உலக மனிதர்கள் உலக செல்வங்களில் சந்தோஷப்படுவார்கள். ஆனால், தானோ தேவனுடைய முகத்தை நித்திய மகிமையில் தரிசிக்கும்பொழுதுதான் திருப்தியடைவான் என்று தாவீது சொல்கிறான்.
(வச.1-5) கர்த்தருக்கு முன்பாக தனது வாழ்க்கை உண்மையாயிருப்பதன் அடிப்படையில் கர்த்தர் தன் கூப்பிடுதலை கேட்டருளவேண்டும் என்று தாவீது விண்ணப்பிக்கிறான்.
இது ஒரு வித்தியாசமான ஜெபமாக உள்ளது. தேவனுடைய இரக்கம் கிருபை இவற்றினிமித்தம் ஜெபிக்கும் தாவீது இப்பொழுது ,தான் கர்த்தருக்கு உண்மையாயிருப்பதன் நிச்சயத்தில் தனது மன்றாட்டை வைக்கிறான். நமக்கு அந்த நிச்சயம் உண்டா என்று சிந்திக்கக் கடைமைபட்டிருக்கிறோம்.
"அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்' (1 யோவான் 3:22).
கர்த்தருக்குப் பிரியமாக நம் வாழ்க்கை இருந்தால் அவர் நம் ஜெபங்களை கேட்பது நிச்சயம். கர்த்தருடைய வழிகளைவிட்டுத் தன் காலடிகள் வழுவாதபடி கர்த்தரே தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் 5ஆம் வசனத்தில் தாவீது வெளிப்படுத்தியிருக்கும் வாஞ்சை அவனது தேவனுக்கு முன்பான நேர்மையைக் காண்பிக்கிறது.
(வச.6-13) கண்ணின் மணி சரீரத்திற்கு விலையேறப் பெற்றதும் அருமையானதும் கூட. ஆகவே, அனிச்சைச் செயலாகவே எதிர்பாராத தீங்குகளினின்று கண்ணின் கருவிழி கண்ணின் இமைகளால் விரைவாகப் பாதுகாக்கப்படுகிறது. அதுபோல, தாவீது தான் தேவனுக்கு மிக அருமையானவனானபடியால் தனது எதிராளிகளின் தாக்குதல்களினின்று கர்த்தர் தீவிரமாய்த் தன்னைக் காப்பாற்றவேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட கர்த்தர் தம் பிள்ளைகளை எப்படி பாதுகாக்க விரும்புகிறார் என்பதற்கு உதாரணமாக ஒரு தாய்கோழி தன் குஞ்சுகளை எந்தவித திடீர் ஆபத்தின்போதும் தன் சிறகுகளின் கீழ் சீக்கிரமாக வந்து மூடி மறைத்துக்கொள்வதை மத்தேயு 23:37 இல் கூறி இருக்கிறார்.
ஒவ்வொரு விசுவாசியும்கூட தனது அனுதின வாழ்க்கையில் எதிர்ப்பாராது வரும் திடீர் ஆபத்துகளினின்று தேவன் பாதுகாக்கும்படியாக ஜெபிக்க வேண்டும்.
(வச.14,15) உலக மனிதர்கள் உலக செல்வங்களில் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், தானோ தேவனுடைய முகத்தை நித்திய மகிமையில் தரிசிக்கும்பொழுது மாத்திரமே திருப்தியடைவான் என்று தாவீது விளம்புகிறார். ஒரு விசுவாசி தனது மகிழ்ச்சியும் திருப்தியும் எதில் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் சிந்திக்கவேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel