முக்கியக் கருத்து
- கர்த்தரை ஒருமித்து கூடி துதிக்க வேண்டும்.
- கர்த்தர் தாழ்மையுள்ளவர்களை உயர்த்தி ஆதரவு கொடுக்கிறார்.
- கர்த்தர் இஸ்ரவேலரை கூட்டிச் சேர்த்து அவர்களுக்கு பாதுகாப்பு, செழிப்பு, சுகம் அனைத்தையும் கொடுக்கிறார்.
வச.1-11 - கர்த்தரை ஒருமித்து கூடி துதிக்கவேண்டும். தனிப்பட்ட நபராக மாத்திரமல்லாமல் கூட்டமாகவும் துதிப்பது நல்ல தும் ஏற்றதுமாகும் (1). கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேலரை தமது வாக்குத்தத்தத்தின்படி சிதறிப்போன பல இடங்களிலிருந்து கூட்டிச் சேர்ப்பார் (2). அதே நேரத்தில், கர்த்தர் இஸ்ரவேலருக்கு மாத்திரம் தேவனல்ல. அவர் அனைத்து மனுபுத்திரருக்கும், பிராணிகளுக்கும், ஜீவராசிகளுக்கும் ஆகாரம் கொடுத்து ஆதரிக்கிறவராயிருக்கிறார் (9). ஏனெனில், அவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். நட்சத்திரங்கள் முதல் கொண்டு அனைத்தையும் பேரிட்டு அழைக்கும் விதத்தில் அவற்றை கணக்கில் வைத்திருக்கிறார் (4). அவர் பெலவீனனையும் நொறுங்குண்டவனையும் ஆற்றித் தேற்றுகிறார் (3). தங்கள் பெலத்தில் பெருமை பாராட்டுகிறவர்களை ஒதுக்கி, தமக்கு பயந்து காத்திருக்கிறவர்கள் மேல் கிருபையை பாராட்டுகிறார்(10,11). ஏசாயா 66:2; எசேக்கியேல் 11:16,17; எபேசியர் 4:2,3.
வச.12-20 - கர்த்தர் இஸ்ரவேலை தமது தெரிந்துகொண்ட ஜனமாக ஏற்படுத்தி இருக்கிறார். எருசலேம் என்றழைக்கப்படக்கூடிய இஸ்ரவேல் தங்கள் தேவனை ஸ்தோத்தரிக்கவேண்டும் (12). ஏனென்றால் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று எண்.24:1 ஆம் வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆகவே தான், அவர்கள் தங்கள் வணங்காக் கழுத்தினிமித்தம் துரத்துண்டு சிதறி சிறைப்பட்டுப்போனாலும் ஏற்ற காலத்தில் அவர்களை அவர்களுடைய வாக்குத்தத்த தேசத்தில் கூட்டிச் சேர்ப்பேன் என்று வாக்குக்கொடுத்தார் (2). அது இப்பொழுது நடந்து வருகிறதை பார்க்கிறோம். இந்த இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் பலத்த பாதுகாப்பு கொடுத்து (13) செழிப்பையும் கொடுத்து (14) பலவித ஆசீர்வாதங்களால் நிரப்புகிறார். இந்த இஸ்ரவேலிலே தமது வார்த்தையாகிய வசனத்தை கர்த்தர் வைத்திருப்பதினாலேயே இந்த விசேஷ ஆசீர்வாதங்களுக்கு உரியவர்களாக வைத்திருக்கிறார் (19,20). கர்த்தர் தமது வார்த்தையை எல்லா பிரஸ்தாபத்தை, பார்க்கிலும் மகிமைப்படுத்தியிருக்கிறார் சங்.138:2.
புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலராக இருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தை நமக்குள் இருப்பதால் கர்த்தர் நம்மையும் சகல ஆசீர்வாதங்களினாலும் நிரப்பி, அழைத்த தேவன் உண்மையுள்ளவராக நம்மை மகிமைப்படுத்துகிறார்.ரோமர் 8:3.
Author: Rev. Dr. R. Samuel