முக்கியக் கருத்து
- சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் செய்கிற கர்த்தர் மனுப்புத்திரருக்கு இரக்கம் பாராட்டுகிறார், ஆகவே, அவருக்கு நாடோறும் துதிசெலுத்துவேன்.
- கர்த்தர் மடங்கடிக்கப்பட்டவர்களை தூக்கிவிட்டு எல்லா பிராணிகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்.
- கர்த்தருடைய இந்த அன்பினிமித்தம் மாம்சதேகமுள்ள யாவும் அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும்.
1. வச.1-13 - சதாகாலமும் ஆளும் ராஜாவாகிய கர்த்தர் எல்லா மனுபுத்திரருக்கும் இரக்கம் பாராட்டுகிறார். ஆகவே நாடோறும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தப்படும்.
கர்த்தர் பெரியவரும், சதாகாலமும் ஆளும் ராஜாவுமாயிருக்கிறார். அவர் மனுப்புத்திரர் எல்லார் மேலும் மனவுருக்கமும், இரக்கமும் பாராட்டி தமது தயவை வெளிப்படுத்துகிறார். இதை சரியாக உணர்ந்த தாவீது தேவனை உயர்த்தி, நாடோறும் ஸ்தோத்தரித்து அவர் நாமத்தை துதிப்பேன் என்று கூறுகிறான் (1-3). கர்த்தருடைய இந்த வல்லமையான கிரியைகளை கண்டு அனுபவித்த ஜனங்கள் அனைவரும்கூட அவருடைய மகத்துவத்தை விவரித்து பேசுவார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்களும் அவரை ஸ்தோத்தரிப்பார்கள் (6-10).
2. வச.14-16 - விடுவிக்கப்படுகிறவர்களை தூக்கிவிட்டு, எல்லா பிராணிகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார்
கர்த்தர் உதவியற்ற நிலையிலும் மங்கடிக்கப்பட்டும் விழுகிற மனிதனுக்கு உதவிசெய்து தூக்கிவிடுகிறார். அதேபோல மிருக ஜீவன்கள், பிராணிகள் அனைத்திற்கும்கூட அவைகள் தம்மை நம்பியிருக்கிறபடியால் ஆகாரம் கொடுத்து பராமரிக்கிறார். மத்தேயு 6:26,28,29. உதவியற்ற, மடங்கடிக்கப்பட்ட சூழ்நிலையில் நாம் இருக்கும்போது கர்த்தர் நம்மை நோக்கிப்பார்க்கிறார். நம்மை தூக்கிவிடுகிறார்.
3. வச.17-20 - தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களின் கூப்பிடுதலை கேட்கிறார்
கர்த்தர் தமது செயல்கள் அனைவற்றிலும் நீதியாய் செயல்படுகிறார். அதே நேரத்தில் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். ஆகவே, தம்மில் அன்புகூர்ந்து, தமக்கு பயந்து, தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களை விசேஷமாக கவனித்து அவர்களை காப்பாற்றி, துன்மார்க்கத்தில் ஜீவிக்கிறவர்களை அழித்துப்போடுகிறார் ரோமர் 8:28-30, 1:18.
4. வச.21 - மாம்சதேகமுள்ள யாவும் கர்த்தரை துதிக்கவேண்டும்
இப்படிப்பட்ட மகத்துவமான தேவனை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கிறபடியால் நான் அவரை துதிப்பேன் என்று தாவீது அறிவிக்கிறான். அதே நேரத்தில், கர்த்தர் மாம்ச தேகமுள்ள யாவற்றின் மேலும் தயவு இரக்கம் பாராட்டி அவையெல்லாவற்றையும்கூட பராமரிப்பதால் அவையெல்லாமுமே அவரைத் துதிக்கக் கடமைப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறான். ஆகவே, மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்க அழைப்பு விடுக்கிறான்.
Author: Rev. Dr. R. Samuel