முக்கியக் கருத்து
- கர்த்தர் தமது நீதியினிமித்தமும். கிருபையினிமித்தமும் அவருடைய நாமத்தினிமித்தமும் தன்னை நசுக்கும் சத்துருவினின்று விடுவித்து தன்னை உயிர்க்க ஜெபம்.
- இதற்காக கர்த்தரை தான் அதிகாலையில் தேடும்போது அவருடைய நல்ல ஆவியானவர் தன்னை வழிநடத்தவும் ஜெபம்.
வச.1-7 - தன்னை நசுக்குகிற சத்துருவின் துன்பங்களால் தன்னுடைய ஆவி தொய்ந்துபோன நிலையில் கர்த்தர் ஒருவரே தன்னை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஏறெடுக்கப்படுகிற ஜெபம். கர்த்தர் தமது நீதியின் அடிப்படையிலும் கிருபையின் நிறைவினாலும் தன்னை விடுவிக்கும்படியான விண்ணப்பம் தாவீது ஏறெடுக்கிறான். ஏனென்றால், மனிதர்களில் ஒருவரும் நீதிமான்கள் இல்லை. கர்த்தர் ஒருவரே நீதிமான். ஆகவே அவருடைய நீதியின்படியே தன்னை விடுவிப்பது நன்மை பயக்கும் என்று ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறான் (1,2,3). ஏசாயா 64:6; ரோமர் 3:23,24.
கர்த்தர் பூர்வநாட்களில் தம்மை அண்டிக்கொண்டவர்களுக்குச் செய்த அதிசயமான கிரியைகளின் நினைவுகூறுதல் தாவீதுக்கு நம்பிக்கையையும் தேவன் பேரில் வாஞ்சையையும் கொடுக்கிறது. தனக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என்ற வாஞ்சையைவிட தேவனை தான் அடைய வேண்டும் என்ற வாஞ்சை இங்கு மேலோங்கி இருப்பது காணமுடிகிறது (5,6). கர்த்தருடைய விடுதலையை பெறாமல் தான் அழிந்தவிடுவது நல்லதல்ல என்பதால் கர்த்தர் தீவிரமாய் தனக்குச் செவிகொடுத்து மீட்டுக்கொள்ள ஒரு அவசர வேண்டுதலையும் காண்கிறோம் (7).
வச.8-10 - கர்த்தருடைய விடுதலைக்காக அவர் கிருபையை பெற்றுக்கொள்ள ஏற்ற சமயம் அதிகாலை என்று தாவீது உணர்ந்து இங்கே ஜெபிப்பதை பார்க்கிறோம்.
"அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்' என்று நீதிமொழிகள் 8:17 ஆம் வசனத்திலும்வாசிக்கிறோம். சத்துருக்களிடமிருந்து தப்புவிக்கப்பட்டு, கர்த்தருக்குப் பிரியமான வழியில் நடக்க கர்த்தருடைய நல்ல ஆவியானவர் (பரிசுத்த ஆவியானவர்) தன்னை செம்மையான வழியில் நடத்தும்படியாக முழுதும் ஒப்புக்கொடுத்து தாவீது ஏறெடுக்கிற ஜெபத்தை ஒவ்வொரு விசுவாசியும் ஏறெடுக்கவேண்டும்.யோவான் 14:16,26, 16:13.
வச.11.12 - கர்த்தர் தம்மை அண்டிக்கொள்பவர்களை கிருபையாய் இரட்சித்து தமது நீதியின்படி மீட்டுக்கொண்டு நீதிமான்களாக்க சித்தம் கொண்டிருக்கிறார். இதுவே மனுக்குலத்திற்கு தேவனின் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற தாவீதின் ஜெபம் ஏற்றதாக காணப்படுகிறது.ரோமர் 5:1; எபே.2:5,8.
Author: Rev. Dr. R. Samuel