முக்கியக் கருத்து
- நம்முடைய கர்த்தர் சர்வ ஞானி, சர்வ வியாபகர், சர்வ வல்லவர்.
- கர்த்தருடைய இந்த எல்லா தன்மைகளும் தமது மக்களுக்காக அவர் கொண்டுள்ள கரிசனையோடு தொடர்புள்ளவைகளாயிருக்கின்றன.
- கர்த்தர் நம்மைப்பற்றி எல்லாம் அறிந்திருந்த போதிலும், நம்மை அவர் ஆராய்ந்து பார்க்க நம்மை நாமே அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
வச.1-6 - எல்லாம் அறிந்தவர் (என்னைப் பற்றி)
கர்த்தர் என்னைப் பற்றி எல்லாம் அறிந்தவர் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். ஆரம்பநாள் முதல் எனது செய்கைகள் நினைவுகள் எல்லாவற்றையும் அவர் அறிவார். தமது சொந்த பிள்ளைபோல் கரிசனையோடு என்னைச் சுற்றி வளைத்து தமது தயவுள்ள கரத்தை என்மேல் வைக்கிறார். இந்த அறிவுக்கெட்டாத ஞானம் தனக்கு ஆச்சரியமாக இருப்பதை சங்கீதக்காரன் தெரிவிக்கிறார். மத்தேயு 9:4, எபேசியர் 1:4.
வச.7-12 - எங்கும் இருப்பவர் (நான் இருக்கும் இடமெல்லாம்)
கர்த்தர் ஆவியாயிருக்கிறபடியால் இந்த உலகத்திலும் மற்றெல்லா இடங்களிலும் பிரசன்னராயிருக்கிறார். அவர் எங்கும் இருப்பதே அவரால் ஆசீர்வதிக்கப்படுவதின் சாரமாயிருக்கிறது. முக்கியமாக நான் அவருடைய பிரசன்னத்தைவிட்டு விலகமுடியாது என்று சங்கீதக்காரன் கூறுகிறார். எல்லா சூழ்நிலையிலும், வெளிச்சத்திலும் இருளிலும் அவர் இருக்கிறார். அவர் எங்கும் இருப்பது, என்னை பாதுகாத்து பராமரித்து வழிநடத்துவதற்காகவே என்றும் சங்கீதக்காரன் விளம்புகிறார்.
எரேமியா 23:24; ஆமோஸ் 9:2; எபேசியர் 1:23; எபிரெயர் 4:13.
வச.13-16 - எல்லாம் வல்லவர் (எனக்கு எல்லாம் செய்ய வல்லவர்)
தாயின் கருவில் உருவாகிற நிலையிலிருந்தே என்னை உருவாக்கி படைத்தவர் கர்த்தர். எனது மனோ நிலமை, மாம்ச நிலமை எல்லாவற்றையும் உருவேற்படுத்திய அவருடைய சிருஷ்டிப்பின் செயல் கர்த்தருடைய வல்லமையையும், இயற்கைக்கு மேலான அதிசயத்தையும் விவரிக்கிறது. என்னை உருவாக்கியது மாத்திரமல்லாமல் என் எதிர் காலம் எல்லாவற்றையும் அவர்தமது புத்தகத்தில் எழுதிவைத்து என்னை கண்காணித்து பாதுகாக்கிறார். இது எனக்கு தெரியும் என்று சங்கீதக்காரன் தெரிவிக்கிறார்.ஆதி.17:1; யோபு 31:15; எரே.32:17,27.
வச.17-18 - என்னைப்பற்றி எல்லாம் அறிந்து, என்னை எல்லா இடங்களிலும் பாதுகாக்கும் சர்வ வல்லவர் நான் நடக்க வேண்டிய வழிகளையும் ஆலோசனை கூறி வழிநடத்துகிறார் என்பது, கர்த்தர் தன்னை ஒரு இயந்திரம் போல இயக்காமல் சுய உரிமை கொடுத்து வழிநடத்துகிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது. கர்த்தருடைய ஆலோசனைகள் அருமையானவைகள். அவற்றை நான் கைக்கொள்வேன் என்றும் சங்கீதக்காரன் உறுதி எடுக்கிறார்.சங்கீதம் 32:8, ஏசாயா 30:21, 2 தீமோ.3:16,17.
வச.19-22 - துன்மார்க்கனை முழுப்பகையாய் பகைக்கிறேன் என்று சங்கீதக்காரன் குறிப்பிடுவது தனது சத்துருக்களை அல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள் சத்துருக்களை சிநேகிதியுங்கள் மத்.5:44 என்ற கட்டளைக்கு இந்த எண்ணம் அப்பாற்பட்டதாக புலப்படவில்லை. கர்த்தருடைய பரிசுத்ததிற்கு எதிர்த்து நிற்கிறவர்களை தானும் பகைக்கும் குணத்தையே இது குறிக்கிறது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்று 2 கொரி.6:14 ஆம் வசனத்தில் போதிக்கப்பட்டதற்கு ஒத்ததாகவே தாவீதின் கூற்றும் இருக்கிறது. மேலும் கர்த்தர் துன்மார்க்கத்தில் வாழ்கிறவர்களை அழிக்கும் காலம் வரும். அதற்காக பரிசுத்தவான்களும் கர்த்தரிடம் மன்றாடுகிறார்கள் என்று பழைய புதிய ஏற்பாடுகளில் வாசிக்கிறோம்.ஏசாயா 30:32,33; வெளி.6:10, 11:18.
வச.23:24 - கர்த்தர் நம்மைப்பற்றி எல்லாவற்றையும் அறிந்தவராகவும், நமது செல்லுமிடம் அனைத்திலும் இருப்பவராகவும் நம்மை உருவாக்கி ஆலோசனை அளித்து வழிநடத்துகிறவராயிருந்தாலும் கூட, அவர் எதையுமே கட்டாயமாக நம்மை செய்யவைப்பதில்லை. நமக்கு முழு சுய உரிமையை கொடுத்திருக்கிறார்.
ஆகவே, நித்திய ஜீவன், நித்திய ஆக்கினை இதில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். நித்திய ஜீவனின் வழியிலே நம்மை நடத்தவும், நம்மில் உள்ள வேதனை உண்டாக்கும் பாவ வழிகளை கர்த்தர் ஆராய்ந்து அகற்றவும் நாம் அவரை அழைக்கவேண்டும். நமது இதயக்கதவுகளை நாம் அவருக்கு திறந்து கொடுக்கவேண்டும்.
சங்கீதம் 24:7-9; யோவான் 6:67-69; வெளி.3:20.
Author: Rev. Dr. R. Samuel