முக்கியக் கருத்து
- கர்த்தர் தமது வார்த்தையாகிய வசனத்தை மற்றெல்லாவற்றையும்விட அதிகமாக மேன்மைபடுத்தியிருக்கிறார்.
- ஆகவே பூமியின் இராஜாக்கள் அதிபதிகள் அவருடைய வார்த்தையை கேட்டவுடன் கர்த்தரை போற்றுவார்கள்.
- எனவே, தேவர்கள் என்றழைக்கப்படும் பல அதிகாரங்களுக்கு முன் பயப்படாமல் வெட்கப்படாமல் நானும் என் கர்த்தரை துதிப்பேன்.
வச.1-3 - கர்த்தர் தமது வார்த்தையாகிய வசனத்தை மற்றெல்லா மகத்துவங்களைவிட அதிக மேன்மைப்படுத்தியிருக்கிறார் ஏசாயா 42:2; மத்தேயு 24:35 .பக்தனாகிய தனது ஜெபத்தை தமது வாக்குத்தத்த வசனப்படியே கேட்டு பெலன் கொடுத்து, தைரியப்படுத்தியிருக்கிறபடியால் பொய்யான தேவர்களுக்கு முன்பாகவும், உலகத்தின் அதிகாரங்கள், வல்லமைகளுக்கு முன்பாகவும் பயப்படாமல் வெட்கப்படாமல் என் கர்த்தரை உயர்த்தி துதிப்பேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். விசுவாசிகளாகிய நாம் இந்த சாட்சியை தைரியமாக கூறமுடியுமா என்று சிந்திக்க வேண்டும். மாற்கு 8:38; 2 தீமோத்.2:15; அப்.26:1,18,25.
வச.4,5 - தேவன் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறபடியினாலும், அவருடைய மகிமை பெரிதாயிருக்கிறபடியினாலும் இந்த பூமியின் மேலான அதிகாரங்களும் இராஜாக்களும்கூட அவருடைய வசனத்தை கேட்கும்போது அவரைத் தாங்களாகவே போற்றித் துதித்து கர்த்தருடைய வழிகளைப் பாடுவார்கள். இன்றைக்கு அநேக உலக நாடுகள் கிறிஸ்தவ நாடுகளாயிருப்பதே இதற்குச் சாட்சியாயிருக்கிறது.எஸ்றா 1:1-10; மத்தேயு 28:19. அதுமாத்திரமல்லாது, கிறிஸ்துவாகிய தேவன் தமது ஆயிர வருட அரசாட்சியை இந்த உலகத்தில் ஸ்தாபிக்கும்போது இந்த வசனங்கள் பூரணமாய் நிறைவேறும். ஏசாயா 2:3; தானி.7:13,14; வெளி.21:23,24.
வச.6-8 - இவ்வளவு மகத்துவமான மகாபெரிய தேவனோ தாழ்மையாய் தம்மை அண்டிக்கொள்கிறவர்களை நோக்கிப் பார்த்து அவர்களை உயர்த்துகிறார். தங்களை மேட்டிமையாக உயர்த்துகிறவர்களையோ அவர் தாழ்த்திப் போடுவார். நீதி.6:16,17; லூக்கா 1:46-49; யாக்கோபு 4:6. தன்னைத் தாழ்த்தி அவர் பாதத்தில் ஒப்புக்கொடுக்கும் பக்தன் துன்பத்தின் பாதையில் நடந்து சென்றாலும், பல தடைகளை சந்தித்தாலும் கர்த்தரே அவனுக்காக எல்லா காரியங்களையும் வெற்றியாய் முடித்துக்கொடுத்து இரட்சிப்பார். மீகா 2:13,7. இது தாவீதின் சாட்சி. அனேக பக்தர்களின் சாட்சியும்கூட. அன்பான விசுவாசியே உன்னுடைய சாட்சியும் இவ்விதமாக இருக்கும்! விசுவாசிப்பாயா!
Author: Rev. Dr. R. Samuel