முக்கியக் கருத்து
- தேவ மக்கள் தங்கள் சிறையிருப்பில் தேவனுடைய வீட்டை நினைத்து துக்கிக்கிறார்கள்.
- தேவ ஜனத்திற்கு சத்துரு இழைத்த கொடுமை அவர்கள் மேலேயே திரும்பும்.
வச.1-3 - இஸ்ரவேல் மக்கள் தேவனைவிட்டு வழிவிலகிப் போனதினிமித்தம் பாபிலோனில் சிறைப்பட்டுப்போன இடத்தில் தங்கள் அனுபவத்தை கூறுகிறார்கள் 2 நாளா.36:16-20. யூதர்களாகிய இவர்கள் தங்கள் வழக்கத்தின்படியே பாபிலோனிலும் ஆற்றங்கரையில் கூடினார்கள் அப்.16:13.
ஆற்றங்கரையின் பார்வை தங்கள் தேசத்தின் ஆற்றங்கரையை நினைவுபடுத்தியதால் அழுதார்கள். அது மாத்திரமல்ல தங்களை சிறைபிடித்தவர்கள் அவர்களுக்காக இஸ்ரவேலரைத் தங்கள் எபிரெய இசையில் பாடக்கேட்டது மேலும் துக்கத்தை வருவித்ததால் தங்கள் இசைக்கருவிகளைக்கூட தங்களைவிட்டு தூரப்படுத்தினார்கள்.
தேவஜனமே, தேவனைவிட்டு தூரப்போகும்போது சிறையிருப்பின் அனுபவத்தையும் துக்கத்தையும் சந்திக்க நேரும். ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறையிருப்பில் வரும் துக்கம் மனந்திரும்புதலுக்கு ஏற்றதாக இருந்தால் கர்த்தர் மன்னித்து சிறையிருப்பைத் திருப்புவார். அந்த அடிப்படையில் இஸ்ரவேலரின் சிறையிருப்பை கர்த்தர் திருப்பினார். 2 கொரி.7:10,11; எஸ்றா 1:1,2,3,7.
வச.4-6 - சிறையிருப்பின் தேசத்தில் கர்த்தரின் பாட்டை மகிழ்ச்சியாக பாடுவதெப்படி? மிகுந்த துயரத்திலும் வெறுப்பிலும் உள்ள சூழ்நிலை சந்தோஷத்தின் பாடலை கொடுக்க முடியாதுதான். தேவனை விட்டுப் பிரிந்ததன் அனுபவம் அத்தனை கசப்பை கொடுக்க கூடியதுதான். ஆனாலும் தாவீது சங்கீதம் 34:1 ஆம் வசனத்தில் கூறியிருப்பதுபோல விசுவாசிகள் இன்ப நேரத்திலும் துன்ப நேரத்திலும் கர்த்தரை துதித்துப் பாடவேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எருசலேமாகிய தேவனுடைய வீட்டை நினைவு கூறவேண்டும். எழுத்தின்படியான எருசலேமையும் ஆவிக்குரிய எருசலேமாகிய தேவ ஜனம், தேவ சபை, தேவனுடைய இராஜ்ஜியம் இவற்றை ஒரு விசுவாசி எப்போதுமே மறக்காமல் நினைவுகூறவேண்டும்.
வச.7-9 - ஏதோமியர் ஏசாவின் புத்திரராவார்கள். இஸ்ரவேலின் சகோதரர்களாகிய இவர்கள், இஸ்ரவேலர் வனாந்திர யாத்திரை செய்து ஏதோமியர் ஊர் வழியே வந்தபோது இவர்களுக்கு உதவி செய்யாமல் எதிர்த்தார்கள். பாபிலோனியரோடு சேர்ந்து இஸ்ரவேலரின் அழிவுக்கு காரணமானார்கள். அதேபோல, பாபிலோனியர் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது கொடுமையாக அவர்களை நடத்தி, குழந்தைகளையும் கொடூரமாகக் கொன்றார்கள்.ஆகவே, தேவ ஜனததிற்கு அவர்கள் செய்த கொடுமை அவர்கள் மேல் திரும்பும்படி தேவஜனம் ஜெபித்தார்கள். அதன்படியே ஏதோமியர்மேலும் பாபிலோனியர்மீதும் தேவகோபம் திரும்பிற்று.
தேவ ஜனமாகிய நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்களையும் சிநேகித்து அவர்களுடைய மனந்திரும்புதலுக்காக நாம் ஜெபிக்க கட்டளையிடப்பட்டிருந்தாலும்கூட, அவர்கள் மனந்திரும்பாத பட்சத்தில் தேவ கோபாக்கினையும் தண்டனையும் அவர்கள்மேல் திரும்ப தேவனிடம் நாம் மன்றாடும் காலம் வரும். வெளி.6:10.
Author: Rev. Dr. R. Samuel