முக்கியக் கருத்து
- கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்பது அவருடைய கிரியைகள் மூலம் வெளிப்படுகிறது.
- கர்த்தருடைய கிருபை, பாதுகாப்பு இவற்றை பெறும் அவருடைய ஜனம் அவரைத் துதிக்கவேண்டும்.
முன்னுரை
1. இந்த சங்கீதத்தை தாவீது 1 நாளா.16:34 இலும், சாலொமோன் 2 நாளா.7:13 இலும் ,யோசபாத் 2 நாளா.20:21 இலும் பாடியிருக்கிறார்கள்.
2. திரும்பத் திரும்ப கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று 26 முறை இந்த சங்கீதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் அந்த சத்தியம் உறுதிப்படுகிறது.
வச.1-4 - கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்பது அவருடைய அதிசயமான கிரியைகள் மூலமும் அவருடைய வல்லமையின் மகத்துவத்தின் மூலமும் வெளிப்படுகிறது. அவருடைய கிருபையில் தமது ஜனத்திற்கு அவர் காட்டும் அன்பு, இரக்கம், உண்மை, பிரியம் ஆகிய இவை அடங்கி இருப்பதால் கர்த்தர் தமது ஜனத்திற்கு நல்லவராகக் காணப்படுகிறார். தேவனின் இந்த செயலே அவரது ஜனமாகிய நாம் அவருக்கு நன்றியும் துதி செலுத்த உற்பத்தி மையமாக இருக்கவேண்டும்.
வச.5-9 - கர்த்தருடைய ஞானமான படைப்புகள் மூலம் தமது ஜனத்திற்கு வாழ்வாதாரத்தை இந்தப் பூமியில் உணடாக்கி இருக்கும் அவருடைய செயல் பூமியில் வசிக்கும் நம்மீது அவர் பொழியும் ஏராளமான கிருபையை வெளிப்படுத்துகிறது.
வச.10-22 - தாம் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் அன்பும் கருணையும் உள்ள தேவன் துன்மார்க்க ஜாதிகளை தண்டிக்கிறவராகவும் அழிக்கிறவராகவும் மாறுவதை இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, கர்த்தருடைய கிருபையில் அவருடைய சர்வ வல்லமையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தும் செயலும் அடங்கி உள்ளது.
வச.23-24 - சர்வ வல்லமையும், பராக்கிரமமும் படைத்த தேவன் தமது ஜனங்களை பொறுத்தவரை அவர்களின் பெலவீனத்திலும் தாழ்மையிலும் கிருபையாய் அவர்களை பாதுகாத்து, எதிரிகளுக்கு விடுவித்து பராமரிக்கிறவராக செயல்படுகிறார்.
வச.25-26 - தமது ஜனத்திற்கு மாத்திரமல்லாமல் மாம்ச தேகமுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தமது மகா பெரிய கிருபையினாலே ஆகாரம் கொடுத்து பராமரிக்கிறார். அவர் பரலோகத்தின் தேவனாக இருக்கிறபடியால் இந்த மகாபெரிய கிரியையை செய்ய வல்லவராயிருக்கிறார். ஆகவே, அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடன் ஜீவராசிகள் அனைத்தும் அவரைத் துதிக்க கடமைப்பட்டுள்ளன.
Author: Rev. Dr. R. Samuel