முக்கியக் கருத்து
- தேவ ஊழியர்கள் தேவனை துதிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
- தேவனுடைய குணங்களான கிருபை, இரக்கம் இவற்றிற்காகவும். அவர் நல்லவரும் பெரியவருமாயிருக்கிறபடியினாலும் அவரை துதிக்கவேண்டும்.
- என்றென்றைக்குமுள்ள மெய்தேவன் தெரிந்துகொண்ட ஜனம், விக்கிரகங்களை வழிபடும் ஜனங்களைவிட பாக்கியமுள்ளவர்களானதால் கர்த்தரை துதிக்கவேண்டும்.
1. வச.1-4 - கர்த்தரை துதிக்க அழைப்பு
தேவனுடைய வீட்டில் வாசமாயிருக்கும் அவருடைய ஊழியர்கள் தேவனைத் துதிக்கும்படியாக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கர்த்தர் தம்முடைய ஆலயத்திலும் வீட்டிலும் தங்கும்படியாக இஸ்ரவேலரை தெரிந்து கொண்டபடியால் அவருடைய கிருபையும் இரக்கமும் வெளிப்பட்டிருக்கிறது. ஆகவே கர்த்தருடைய கிருபை, இரக்கம் இவற்றினிமித்தம் அவரைத் துதிப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் செயலாக இருக்கிறது.
விசுவாசிகளாகிய மீட்கப்பட்ட ஜனமாகிய நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரட்சித்துத் தமக்கென தெரிந்தெடுத்துக் கொண்டபடியால் தேவ அன்பு வெளிப்பட்டிருக்கிறது. இந்த பெரிதான செயலின் மூலம் கர்த்தர் நல்லவரும் பெரியவருமாக வெளிப்பட்டிருக்கிறார். ஆகவே அவரை துதிக்க வேண்டியது அவசியமும் அது மகிழ்ச்சியை கொடுக்கிறதாகவும் இருக்கிறது. யாத்.19:5, உபா.14:2, ஏசாயா 43:21, 1 யோவான் 4:9,10.
2. (வச.5-14) - கர்த்தர் தெரிந்துகொண்டவர்களின் பாக்கியம்
கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் எகிப்தியரையும், எமோரியரையும், அநேகம் ஜாதிகளையும் அழித்து தம்முடைய ஜனத்தை நியாயம் விசாரித்து அவர்கள்மேல் பரிதாபப்பட்டு பல அற்புதங்களை செய்து தமது வல்ல மையை அவர்கள் பேரில் விளங்கப்பண்ணினார் (8-14).
தமக்கு சித்தமான வல்லமையான கிரியைகளைக் கர்த்தர் வானத்திலும் பூமியிலும் நடப்பிக்கிறார். அவரை தடை செய்ய எவற்றாலும் முடியாது (5-7). இப்படிப்பட்ட மகா பெரிய தேவனை தங்களுக்கு தெய்வமாகக் கொண்ட இஸ்ரவேலர் பாக்கியவான்கள். உபா.4:7, சங்.33:12.
புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்மை கர்ததர் தெரிந்துகொண்டு மீட்டுக்கொண்டபடியால் நாம் உலகின் எல்லா ஜனங்களைப்பார்க்கிலும் பாக்கியவான்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாயிருக்கிறோம்.தீத்து 2:12,13 1 பேதுரு 2:9.
3. வச.15-18 - அஞ்ஞானிகளின் துர்பாக்கியம்
உயிரற்ற விக்கிரகங்களை தெய்வம் என்று நம்பி அவற்றை வழிபட்டு மோசம் போகும் ஜனங்கள் ஜீவனற்ற விக்கிரகங்கள் போலவே இருக்கிறார்கள். மேன்மையான தேவ ஆசீர்வாதங்களை இழந்து துர்பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள் என்று சங்கீதக்காரன் இந்த வசனங்களில் கூறுகிறார். ஆகவே, விசுவாசிகளாகிய நாம் இப்படிப்பட்ட ஜீவனற்ற விக்கிரகங்களுக்கு விலகி இருக்கவேண்டுமென்று இந்த வசனங்களினால் உணர்த்தப்படுகிறோம்.2 கொரி.6:16,17 1 யோவான் 5:21.
4. வச.19-21 - கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டியவர்கள்
இவ்விதமாக தேவனால் ஜீவனற்ற விக்கிரகங்களினின்று காக்கப்பட்டு தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் மக்கள், அவர்களின் ஆசாரியர், சீயோன் வாசமாயிருப்பவர்கள் யாவரும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட புதிய ஏற்பாடு விசுவாசிகளும், ஊழியர்களுமாகிய நாம் எவ்வளவுக்கு அதிகமாக கர்த்தரை ஸ்தோத்தரிக்கவும். ஆராதிக்கவும். தொழுது கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று இந்த வசனங்களால் நாம் உணர்த்தப்படுகிறோம்.
நாம் கர்த்தருக்கு ஆராதனை, தொழுகை, ஸ்தோத்திரம் செலுத்துதல் இவற்றிற்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ளுகிறோம் என்பதை சிந்திப்போம்.
Author: Rev. Dr. R. Samuel