முக்கியக் கருத்து :
- தாவீது தனது ஜெபத்திற்கு பதில் தாமதமாவது குறித்து அங்கலாய்க்கிறான்.
- தாவீது தேவன் தந்த விடுதலையில் விசுவாசத்தின் மூலம் களிகூறுகிறான்.
தாவீது மிகுந்த ஆபத்தான நிலையில் இருக்கிறான். தேவனிடமிருந்து விடுதலை தாமதமானதால் பொறுமையிழந்து காணப்படுகிறான். ஆனாலும், தனது சஞ்சலத்தினிமித்தம் தேவ மக்களின் சத்துரு தன்னை உயர்த்தக்கூடாது என்பதே தாவீதின் அங்கலாய்ப்பு (வச.1,2,4).
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அழிந்து போகாதபடி தனது கண்களை தேவன் தெளிவாக்கும்படி ஜெபிக்கிறான் (வச.3).
பக்தியுள்ளவனின் ஜெபம் உடனடியாக பதிலளிக்கப்படாதபோது தேவன் தன்னை மறந்தாரோ என்ற உணர்வு சில வியாதி, பொருளாதார தேவை, கடினமான பிரச்சனை நேரங்களில் நமக்குத் தோன்றும் (வச.1).
ஆயினும் தேவ மக்கள் அப்படிப்பட்ட நேரங்களில் விசுவாசத்தின் மூலம் கர்த்தருடைய கிருபைக்காக தாவீதைப்போல களிகூற பரிசுத்த ஆவியுடைய பெலனை நாடி ஜெபிக்கவேண்டும் (வச.5,6).
உண்மையாய் தேவனைத் தேடுகிறவர்களை அவர் மறந்தார் என்பதல்ல. ஆனால், சில முக்கியமான காணக்கூடாத நோக்கத்தை அவர்கள் வாழ்க்கையில் நிறைவேற்ற தேவனின் திட்டம் அது என்று நாம் அறிய வேண்டும்.
"அதற்கு அவர் : என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்" என்று 2 கொரிந்தியர் 12:9 ஆம் வசனத்தை கர்த்தர் பவுலிடம் சொல்லி திடப்படுத்தினார்.
"என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்' என்று யாக்கோபு 1:2,3 வசனத்திலும் வாசிக்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel