முக்கியக் கருத்து
- மனுஷர் நமக்கு விரோதமாக எழும்புவது நிச்சயம்.
- கர்த்தரை நம் பட்சத்தில் வைத்திருக்க நாம் ஜாக்கிரதையாக இருக்கும்போது நாம் தப்புவோம்.
- தப்புவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
1. வச.1-5 மனுஷர் நமக்கு விரோதமாக எழும்புவது இவ்வுலக வாழ்க்கையில் நிச்சயம். இஸ்ரவேல் மக்களுக்கு அன்றைக்கும் இன்றைக்கும் சத்துருக்கள் உலகில் பெருகியிருக்கிறார்கள். இஸ்ரவேல் மக்களை முற்றிலும் அழித்துவிட பல ஜாதிமக்கள் முயற்சி எடுத்தார்கள். அதேபோல் ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய கிறிஸ்தவ விசுவாசிகளையும் அழித்துவிட பல அதிகாரங்கள் உலகில் முயற்சி எடுக்கின்றன. இந்த சூழ்நிலையை விளக்கும் வகையில் தான் சங்கீதக்காரனுடைய இவ்வசனங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலைகள் நம்மை நசுக்குகிறதாக தோன்றும்போது தேவனும் அவருடைய அற்புத வல்லமையும் தவிர வேறொன்றும் நம்மை காப்பாற்ற முடியாது என்பதை வச.2 இல் வாசிக்கிறோம்.
"... தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?' என்று ரோமர் 8:31 ஆம் வசனத்தில் கூட வாசிக்கிறோம். ஆகவே விசுவாசிகளாகிய நாம் கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கக்கூடிய விதத்தில் நமது வாழ்க்கை கர்த்தருக்குப் பிரியமானதாக நடத்தும்போது நாம் வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
2. வச.6 நம்மை கர்த்தர் தப்புவிக்கும்போது மறந்துவிடாமல் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். 1 கொரி.15:57
3. வச.7-8 நமக்கு விரோதமாக வந்த வேடனுடைய கண்ணி தெறித்தது. ஆனாலும், நாம் தப்பினோம். நாம் அஜாக்கிரதையாக இருக்கும் போதுதான் எதிரியின் கண்ணி தெறிக்கும். ஆனாலும், நம்முடைய நல்ல கர்த்தர் நம்மை காக்கிறார். ஆகவே, நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக எதிராளியாகிய பிசாசின் எல்லா தந்திரங்களையும் அறிந்து எப்போதும் விழிப்புள்ளவர்களாக உலக பாவங்களுக்கு விலகி இருக்கவேண்டும். 2 கொரி.2:11, 2 தீமோத்.2:22.
Author: Rev. Dr. R. Samuel