முக்கியக் கருத்து :
- கர்த்தர் தமது பரிசுத்த வாக்கினாலே துன்மார்க்கனின் நாவை அறுத்துப்போடுவார்.
- கர்த்தர் ஏழைக்கு நீதி செய்து பக்தியுள்ளவனை காத்துக்கொள்வார்.
சண்டாளர்களுடைய இச்சகமான பேச்சினாலே மக்கள் வஞ்சிக்கப்பட்டு, உண்மையுள்ளவர்கள் குறைந்து துன்மார்க்கர் அதிகரித்து வரும் இக்கட்டான நிலமையை உணர்ந்து தாவீது கர்த்தருடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கிறான் (வச.1,2,8).
"பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்' (1 தீமோத்தேயு 4:1) என்று நாம் வாசிக்கிறபடியால் விசுவாசிகளும் இந்தக் கொடிய காலங்களை உணர்ந்து ஊக்கமாக ஜெபிக்கவேண்டும். தமது பரிசுத்தமான வாக்கினாலே கர்த்தர் துன்மார்க்கனின் நாவை சங்கரித்து, ஏழைக்கு நீதி செய்து பக்தியுள்ளவனை பாதுகாத்துக்கொள்வார் என்பதை உண்மையுள்ள விசுவாசிகள் அறிந்து கொள்ளவேண்டும் (வச.3-7).
"நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்' (ஏசாயா 11:4) என்ற வசனம் நமக்கு நம்பிக்கையளிக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel