முக்கியக் கருத்து
- தேவ ஊழியர்கள், தேவனுக்கு பயப்படுகிறவர்கள், தேவனிடமிருந்து நன்மை பெற்றவர்கள் அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதிக்கவேண்டும்.
- கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது இந்த உலகத்தில் எந்த பெலவானும் நமக்கு தீங்கிழைக்க முடியாது. - கர்த்தருடைய நாளில் அவருடைய ஆலயத்தில் துதியோடு பிரவேசித்து மகிழ்ச்சியோடு பலிகள் செலுத்தவேண்டும்.
1. அவர் கிருபை என்றுமுள்ளது (வச.1-4)
கர்த்தருடைய கிருபை அவரை நம்பும் தேவமக்கள் மீதிலும்,அவருடைய ஊழியர்கள் மீதிலும்,அவருக்கு பயப்படுகிற எல்லார்மேலும் என்றும் உள்ளது என்பதை கர்த்தர் மீண்டும் மீண்டும் தமது கிரியைகளால் உறுதிப்படுத்தியிருப்பதால் அவர் கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி துதிப்பது எழுதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடலாக மாறிவிட்டது.
மத்தேயு 26:30 ஆம் வசனத்தில் கூட நம் ஆண்டவர் சீஷர்களுடன் தமது கடைசி பஸ்கா ஆசரிப்பிற்கு பிறகு இந்த ஸ்தோத்திரப் பாட்டை பாடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் இந்த பாட்டை உபயோகப்படுத்துவது மிகவும் நல்லது. அவர் கிருபை நம்மேல் பெருகும்.
பல்லவி
தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
சரணம்
நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக்கொண்டேன்
காத்துக்கொள்ள கிருபை தாருமே
பாட்டு - சகோதரி சாராள் நசரோஜி
2. கர்த்தர் என் பட்சத்திலிருக்கிறார் (வச.5-14)
கர்த்தர் என் பட்சத்திலிருக்கிறார் என்ற நம்பிக்கை உறுதி எல்லா தேவ மக்களுக்கும் இருக்கவேண்டும். ஏனென்றால், கர்த்தரை அடைக்கலமாக கொண்டிருப்பவர்களுக்கு பெலனும், ஆபத்தில் உதவியும், எல்லா நேரங்களிலும் வழிநடத்தி அவர்களுனே கர்த்தர் இருப்பதாக வசனம் வாக்களிக்கிறது. யோசுவா 1:9, மத்தேயு 28:20 தேவாலயத்திற்குக் கர்த்தரைத் தொழுது கொள்ளச் செல்லும்போது இஸ்ரவேல் மக்கள் தங்கள் இராஜாவுடன் இந்தப் பாடலைப் பாடியிருக்கலாம். கர்த்தர் தங்கள் பட்சத்தில் இருப்பதால், நம்பியிருந்த மனிதர்கள் உதவி அற்றுப்போகிற சூழ்நிலையிலும் தங்களை நிர்மூலமாக்க வந்த சத்துருக்களின் கைகளினின்று தங்களை கர்த்தர் விடுவித்ததை சாட்சியாகக் கூறி இப்பாடலை பாடுவதாகத் தோன்றுகிறது. இந்தத் துதியின் பாடல் நமது அனுபவமாக இருக்கிறதா? 1 யோவான் 5:4 நமது விசுவாசமே இந்த ஜெயத்தின் அனுபவத்தைக் கொடுக்கும்.
3. நீதிமானின் கெம்பீர சத்தம் (வச.15-21)
நீதிமானைக் கர்த்தர் உடனிருந்து தப்புவித்து காத்து விடுவித்ததால், அவனுடைய கூடாரத்திலிருந்து தொடர்ச்சியாக இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தின் பாடல் தொனி கேட்டுக் கொண்டே இருக்கும். நீதிமானுக்கு சில வேளைகளில் கர்த்தருடைய சிட்சை பலத்த தண்டனையாக வரலாம். ஆனாலும், கர்த்தர் அவனை அழிவுக்கு ஒப்புக்கொடுக்கமாட்டார். அப்போது நீதிமான் சாகாமல் பிழைத்து கர்த்தரைத் துதிப்பான். நீதிமானுடைய வீட்டில் கர்த்தருடைய வலது கரம் தொடர்ந்து பராக்கிரமமான கிரியைகளை செய்துகொண்டிருக்கும். இந்த இரட்சிப்பின் துதியோடு நீதிமான் தேவாலயத்தின் வாசல்களுன் இப்போது பிரவேசிக்கிறான்.
4. தள்ளப்பட்ட கல் (வச.22-23)
மேசியா கிறிஸ்துவை இந்த உலகத்தில் அவருடைய சொந்த யூத ஜனங்கள் புறக்கணித்தார்கள் யோவான் 1:11 .ஆனால், பிதாவாகிய தேவன் அவர் மூலமாக புதிய ஏற்பாட்டு திருச்சபையை கட்டும்படியான முக்கியமான மூலைக்கல்லாகினார். எபேசியர் 2:20, அப்.4:11. இந்த உலகம் பல வேளைகளில் தேவ மக்களாகிய நம்மை இப்போது புறக்கணித்தாலும் தேவன் நம்மைக் கொண்டு ஒரு புதிய உலகம் உருவாக்கப்போகிறார் என்பதை நாம் எப்போதும் மனதில் கொண்டு தைரியமாக இருக்கவேண்டும்.
5. தேவாலயத்தில் துதியும், பலியும் (வச.24-29)
தேவஜனம் கர்த்தருடைய நாளில் தேவாலயத்திற்குள் பிரவேசித்து மகிழ்ச்சியோடு கர்த்தரை துதித்து பலிபீடத்தில் அவருக்கு பலிகளை செலுத்தி தொழுதுகொள்வதை இந்த வசனங்கள் விவரிக்கிறது. கர்த்தர் தமது ஜனத்தின் மேல் எப்போதும் கிருபை உள்ளவராக இருந்து அவர்களுக்காக பராக்கிரமமான கிரியைகளை செய்து சத்துருக்களின் கைகளினின்று காத்து அவர்களை மூலைக்கல் போன்ற முக்கியமானவர்களாக தமது ராஜ்ஜியத்தில் உயர்த்துவதால், தேவ ஜனம் இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தோடு அவர் ஆலயத்திற்குள் வந்து அவரை துதித்து அவருக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்தவேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel