முக்கியக் கருத்து
-தேவபக்தியுள்ள சிறுமையும் எளிமையுமானவனை தேவன் பாதுகாக்க ஜெபம்.
- தேவபக்தியுள்ள தனக்கு தீங்கு செய்ய வரும் துஷ்டனைத் தேவன் தண்டித்து நியாயம் செய்ய ஜெபம்.
- தாவீதையும், மேசியாவையும் வஞ்சித்த பகைஞனுடைய முடிவைக் குறித்த தீர்க்கதரிசனம்.
1. (வச.1-5) தேவனுடைய உதவியை நாடுகிறவர்கள்
தேவபக்தியுள்ள, தேவனைத் துதிக்கிற தேவ ஜனம் அவருடைய உதவியை உரிமையோடு நாடலாம். இந்த உலகத்தில் தேவ ஜனம் நேர்மையாக நடக்கும்போது துன்மார்க்கர் அவர்களுக்கு தீங்கு செய்ய வருகிறார்கள். ஆனால், தேவ மக்களோ யாருக்கும் தீங்கு செய்யாமல், நன்மை மாத்திரமே செய்து மற்றவர்களை சிநேகித்து அன்பு பாராட்டுகிறார்கள். துன்மார்க்கனோ, நன்மைக்கு பதிலாக தீமையும் சிநேகிதத்திற்கு பதிலாக விரோதத்தையும் செய்கிறான். துன்மார்க்கன் கள்ள நாவினால் கபடம் பேசுகிறான். ஆகவே, தேவ மக்கள் தேவனுடைய உதவியை நாடுவதே இந்த சூழ்நிலையில் நல்லது. தங்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கக்கூடிய பெரிய பெலன் தேவனுடைய உதவியை நாடும்போது கிடைக்கிறது. வசனங்கள் யோவான் 15:7, 1 பேதுரு 5:8,9 இந்த சத்தியத்தை நமக்கு தெளிவாக போதிக்கிறது.
2. (வச.6-20) துன்மார்க்கனை தண்டித்து நியாயம் செய்யவேண்டுதல்
- இந்த ஜெபத்தில், நீதிக்கான வைராக்கியம் காணப்படுகிறது. நீதியை விரும்பி செய்யும் தேவ மக்களை துன்பப்படுத்தும் துன்மார்க்கனை தண்டிப்பதே நீதிமான்களுக்கு கர்த்தர் செய்யும் நியாயம் என்று விளங்குகிறது. துன்மார்க்கனுடைய வலதுபக்கம் சாத்தான் நிற்பான். அவனுக்கு மேலாக ஒரு துஷ்டன் நிற்பான் (வச.6). இந்த துன்மார்க்கனின் அக்கிரமம் அவனுடைய சந்ததியையும் பிள்ளைகளையும் தண்டிக்க (வச.9-14) வேண்டும் என்ற வேண்டுதல் யாத்திராகமம் 20:5 ஆம் வசனத்தில் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்களுக்குக் கொடுத்த 10 கட்டளைகளின்போது உரைத்த அவருடைய வார்த்தையின் அடிப்படையிலேயே இருக்கிறது.
- சிறுமையும் எளிமையுமான தேவ ஜனத்தை துன்பப்படுத்தி மனமுறிவடையச்செய்ததால் இந்த துன்மார்க்கன் ஆசீர்வாதத்தைப்பெற வழியில்லாமல் சாபத்தையே பெறக்கடவர்கள். அவர்கள் பேர் முதலாய் பூமியில் இல்லாமல் நிர்மூலமாகக்கடவர்கள் என்ற வேண்டுதல் நம்முடைய கர்த்தர் இப்பூமியில் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து துன்மார்க்கர்களையும் சாத்தானையும் அழிக்கும்போது முழுமையாக நிறைவேறும் (வெளி19,20,21, 22 அதிகாரங்கள்)
- தேவ ஜனத்தை பகைத்து வஞ்சிக்கும் துன்மார்க்கனின் முடிவு இதுவே என்று (வச.20) இல் கூறப்பட்டிருப்பது, தாவீதை வஞ்சித்த அகிதோப்பேல், மேசியா கிறிஸ்துவை வஞ்சித்த யூதாஸ் இவர்களின் முடிவை பற்றி கூறப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையாகும். அப்போஸ்தலர் 1:16-20 வரையான வசனங்களில் பேதுரு இந்த சங்கீதத்தின் வச.8-20 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம்.
3. (வச.21-31) தேவனுடைய பாதுகாப்பிற்காக ஜெபம்
- சிறுமையும் எளிமையுமான தன்னை சத்துருக்கள் நிந்தித்து தலையை துலுக்கி சபித்தாலும் கர்த்தருடைய கிருபை நலமானதினால் கர்த்தர் தனக்கு சகாயம் செய்து, ஆசீர்வதித்து விடுவிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை மிக உறுதியான நம்பிக்கையோடு தாவீது (21-26) ஏறெடுப்பதை பார்க்கிறோம். அது மாத்திரமல்ல, கர்த்தருடைய கரம் தன்னை இரட்சிக்கிறது என்று அந்த துன்மார்க்கரும் அறிந்துகொள்ளும் விதத்தில் கர்த்தருடைய பாதுகாப்பு தனக்குக் கிடைக்க வேண்டும் என்று தாவீது ஜெபிக்கிறான்.
- எளியவனை தண்டிக்க நினைக்கிறவர்களினின்று காக்க கர்த்தர் அவனுடைய வலதுபாரிசத்தில் நிற்பார் (3). ஆனால், துன்மார்க்கனுடைய வலது பாரிசத்திலோ சாத்தான் நிற்பான் (6) என்று தாவீது கூறியிருப்பது தேவ பக்தியின் வைராக்கியத்தைக் காண்பிக்கிறது.
- கர்த்தருடைய நியாயஞ்செய்யும் கிரியைகளை நினைத்து அநேகர் நடுவில் சாட்சியாக கர்த்தரைத் துதித்துப் புகழுவேன் என்று தாவீது (30) கூறும் அறிக்கையை ஒவ்வொரு விசுவாசியும் கூட உள்ளத்தின் ஆழத்திலிருந்து அறிக்கையிடவேண்டும்.
Author: Rev. Dr. R. Samuel