முக்கியக் கருத்து
- கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களையும் மறவாமல், அவரை ஸ்தோத்தரிக்கவேண்டும்.
- மகா கனம் பொருந்திய தேவன் மண்ணான மனிதனின் மீறுதல்களை மன்னித்து, வியாதியினின்று விடுவித்து தன்னிடம் சேர்த்துக்கொள்ள விரும்புகிறார்.
- மனிதன் கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள தீர்மானிக்கும்போது அவர் கிருபையும் இரக்கமும் கிடைக்கும்.
1. (வச.1-2) கர்த்தருக்கு நன்றி செலுத்தும் மனநிலை
கர்த்தர் மனிதனுக்கு செய்த எல்லா உபகாரங்களையும் ஒருபோதும் மறக்கக்கூடாது (உபா.8:11,12). சில வேளைகளில் கர்த்தரை ஸ்தோத்தரிக்கும், நன்றிசெலுத்தும் மனநிலை நமது உதாசீனத்தாலும், மறதியாலும், சோர்வினாலும், அறியாமையினாலும் உண்டாகலாம். அப்போது நமது உள்ளந்திரியமாகிய ஆத்துமாவுக்கு நாம் கட்டளை கொடுத்து நன்றி செலுத்தவைக்க வேண்டும். இது மனிதனின் கடமை.
2. (வச.3-6) கர்த்தர் செய்த உபகாரங்களின் பட்டியல்
ஆதாம் பாவத்தில் வீழ்ந்ததால், மனிதகுலம் முழுவதும் பாவத்திலும், வியாதியிலும், மரண பயத்திலும், ஒருவருக்கொருவர் விரோதம் செய்வதிலும் விழுந்து இன்றைக்கு இந்த உலகம் இருக்கும் அவல நிலைக்கு வந்துவிட்டது. மனிதன் தன் சுயநலத்திற்காக அக்கிரமம் செய்வதும், தன்னைவிட பலவீனனான மற்ற மனிதனை ஒடுக்குவதும் மற்றும் பல பாதக செயல்களில் ஈடுபடுகிறான். ஆகவே, மனிதர்கள் தேவன் நிர்ணயித்த நன்மைகளை அனுபவிக்க முடியாமல், ஆயுசு நாட்கள் குன்றியவர்களாகவும் அழிவை நோக்கி செல்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே, கர்த்தர் மனிதனை இந்த மோசமான நிலமையிலிருந்து மீட்டெடுக்க விரும்புகிறார். முதலாவதாக, மனிதனுடைய எல்லா நிர்பாக்கிய நிலமைக்கும் காரணமான அவனுடைய அக்கிரமத்தை மன்னிக்கிறவராயிருக்கிறார், அதைத் தொடர்ந்து அவனுடைய சரீர வியாதியை குணமாக்கவும், ஆயுசு நாட்களை கூட்டவும், சரீரத்தில் பெலனைக் கொடுக்கவும் மற்ற சக மனிதர்களுடைய ஒடுக்குதலிலிருந்து காக்கவும் செயல்படுகிறார் (3-6). கர்த்தர் இந்த செயலை நிறைவேற்ற முதலாவது இஸ்ரவேல் என்ற மக்களைத் தெரிந்தெடுத்து, அவர்களுக்கு மோசே என்ற தலைவனை உருவாக்கி, தமது எல்லா வழிகளையும் தெரியப்படுத்தியும் தமது கிரியைகளை நடப்பித்தும் காட்டினார் (7). அதன் பின்பு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பால் மனிதனின் கட்டுகளிலிருந்து விடுவித்து மீட்கும்இரட்சணியப் பணியை செய்து முடித்தார் என்பதை சுவிசேஷங்களில் வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம்.
ஏசாயா 43:21, எபிரெயர் 1:1,2.
3. (வச.8-17) மகா பெரிய தேவன் மண்ணான மனிதன் மேல் பாராட்டும் தயை.
மகா பெரிய தேவன் மண்ணான மனிதனைத் தாமே படைத்தார். ஆகசூவ,தகப்பனைப்போன்ற அன்பை அவன்மேல் பாராட்டுகிறார் (13). அவர் நம்மை மண்ணிலிருந்து படைத்ததால் நமது உருவம் அவருக்குத் தெரியும். மேலும், நாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டோம் என்பதை நினைப்பூட்டுகிறார் (14). இந்த மகாபெரிய தேவன் புல்லைப்போன்ற மிகவும் இலேசான மனிதனை நிலைநிறுத்த வேண்டுமானால் அவருடைய மகா பெரிய இரக்கமும் கிருபையும் (8) பாராட்ட வேண்டியுள்ளது. ஆகவே அவர் மனிதன் மேல் கோபப்படாமல், மனிதனுடைய பாவத்திற்கேற்ற தண்டனையும் கொடுக்காமல், அவனுடைய பாவங்களை அவனைவிட்டு வெகுதூரத்திற்கு தூக்கி எறிந்துவிடுகிறார். மத்தேயு 11:4,5.
4. (வச.17-22) சர்வ வல்ல கர்த்தரின் கிருபையை பெற்றுக்கொள்ள உலக மக்களுக்கு அழைப்பு
விழுந்து போன, பெலவீனப்பட்டுப்போன மனிதன் தேவ பெலனை பெற்றுக்கொண்டு மீண்டும் பிழைக்க, கர்த்தருக்குப் பயந்து அவருடைய உடன்படிக்கையை கைக்கொண்டு, அவரது கட்டளைகளை நினைக்கும்படியாக அழைப்பு விடுக்கப்படுகிறது (16,17,18). சர்வத்தையும் ஆளும் இராஜாவாகிய கர்த்தரை கர்த்தருடைய சேனைகளும், தூதர்களும், அவருடைய கிரியைகளாகிய எல்லா சிருஷ்டிப்புகளும் ஸ்தோத்தரிக்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களோடு சேர்ந்து, கர்த்தருடைய உபகாரங்களைப் பெற்று அனுபவிக்கும், என் ஆத்துமாவும் ஸ்தோத்தரிக்க கடமைப்பட்டுள்ளது. (எபே.1:5,6) (19-22).
Author: Rev. Dr. R. Samuel