ஒழுங்கற்ற, குழப்பமான மற்றும் சிக்கலான உலகில் தேவ பிள்ளைகள் கூட தவறுகளை அல்லது முட்டாள்தனமான செயல்களைச் செய்ய வாய்ப்புள்ளது. அதிலும் சில சமயம் தெரிந்து செய்து விடுவதுண்டு சில நேரங்களில் தெரியாமல் செய்வதுமுண்டு. ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதுகிறார்; "உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்" (ஏசாயா 54:17). மக்கள் நியாயமாகவும் சரியாகவும் குற்றம் சாட்டினாலும் தேவன் அதை மறுத்து வாதிட முடியும். சுவாரஸ்யம் என்னவெனில் குற்றம் சாட்டியவர் சரியானவர், ஆனால் தேவன் அவர்களின் குற்றச்சாட்டை ஏற்கவில்லை, தேவ பிள்ளைகள் அதை மறுக்க முடியும். தேவன் அவர்களை "நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாதீர்கள்" என
கண்டிக்கிறார் (சங்கீதம் 105:15).
1) ஆபிரகாமின் அரை உண்மை:
ஆபிரகாம் கேராரின் தேசத்தில் இருந்தான். ஆபிரகாம் உயிருக்கு பயந்ததால் சாராளைத் தன் சகோதரியாக அறிமுகப்படுத்தினான். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக் சாராளை அழைத்துக் கொண்டு போனான். தேவன் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டார். சாராள் தனது சகோதரி என்று ஆபிரகாமே கூறியதாக அவன் கூறினான். சாராளை ஆபிரகாமிடம் திருப்பி அனுப்பும்படி தேவன் அபிமெலக்கிற்குக் கட்டளையிட்டார். பின்னர் ஆபிரகாம் தனது (பொய்யை) கூற்றை நியாயப்படுத்தினான்; "அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்" (ஆதியாகமம் 20:12).
2) யாக்கோபு தப்பித்தல்:
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தகப்பன் வீட்டை நினைத்து ஏக்கமான யாக்கோபு, லாபானால் ஒடுக்கப்பட்டதின் நிமித்தம், தேவ வழிகாட்டுதலால் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்கிறான். லாபானின் இரண்டு மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் யாக்கோபு வெளியேறுவதைத் மாமனாரான லாபானிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் யாக்கோபு எதுவும் தெரிவிக்காமல் வெளியேறினான்; அதற்கு லாபான் யாக்கோபைத் தண்டிக்கவும் தீங்கிழைக்கவும் தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் ஆனால் முடியவில்லை என்றும் கூறினான். ஆம், “உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமையுண்டு; ஆகிலும் உங்கள் தகப்பனுடைய தேவன் நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்" (ஆதியாகமம் 31:29).
3) ஓய்வுநாளில் சீஷர்கள்:
அவர்கள் பயிர் வழியே கடந்து செல்லும்போது, சீஷர்கள் பசியாக இருந்ததால் கதிர்களைக் கொய்து சாப்பிட்டனர். அவர்கள் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. கர்த்தராகிய இயேசு அவர்களைப் பாதுகாத்து, "தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே" (மத்தேயு 12: 1-8) என்பதாக சீஷர்களுக்காக பேசினார்.
தன் பிள்ளைகள் ஒடுக்கப்படும்போதும் தாக்கப்படும்போதும் கர்த்தர் அவர்களைப் பாதுகாத்து நியாயப்படுத்துகிறார்.
அவருடைய பாதுகாப்பை நான் அனுபவிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்