தொடர் - 4
கிறிஸ்துமஸ்க்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. வழக்கம் போல வக்கீல் வீட்டு டைனிங்ஹால் கலகலத்தது. எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஜெபா மெதுவாக.
“அப்பா என்னுடைய இரண்டு செட் டிரஸ்ஸில் ஒன்றை ஜானுக்குத்தாறேம்பா” ஆவலோடு தந்தையைப் பார்த்தான்.
“எந்த ஜான்?” ஆச்சரியத்தோடு வினவினார் டேனியல் .-
“என் கிளாஸ் மெட் ஜான். அவனுக்கு இன்னும் டிரஸ்ஸே எடுக்கலையாம். அவனுக்கு கிறிஸ்துமஸ் பிரசண்ட்டா டிரஸ் கொடுக்கிறேம்பா”.
“என்ன அந்த சேரிப்பையன் ஜானா? கிறிஸ்துமஸ் பிரசண்ட் கொடுக்க வேற ஆளே உனக்கு கிடைக்கலையா,? இகழ்ச்சி தொனித்தது அவர் வார்த்தைகளில்.
“அப்பா! நான் இயேசு பாலகனுக்கு காணிக்கை கொடுக்க விரும்புறேம்பா!” “நான் என்ன சர்ச்க்கு செய்யாமலா இருக்கேன்?”,
“அப்பா! பிரசங்கபீடம், மைக், ஃபேன், சில டியூப்லைட்ஸ் என்று நிறைய செய்திருக்கீங்கப்பா, இல்லைன்னு சொல்லலை, ஆனா, இல்லை என்று இருப்பவர்களுக்கு கொடுப்பதும் கடவுளுக்கு செய்வதுதான்”.
“அப்படின்னா! சர்ச்சுக்குச் செய்யவேண்டியது அவசியமில்லையா? அந்தக் காலத்தில் மிஷனெரிமார்கள் நம் நாட்டிற்கு வந்து பாடுபட்டு, உழைச்சி, ஓடாப் போயி கட்டின அருமையான ஆலயங்கள் பராமரிக்கப்படலைன்னா நாளடைவில் அழிந்தல்லவா போய்விடும். கொடுத்ததைக் காப்பாற்றவாவது வேண்டாமா?”
“சர்ச்சுக்கு செய்ய வேண்டாம்னு சொல்லலப்பா. இயேசு சுவாமி பரிசேயரிடம் “நீங்கள் ஒற்தலாம், மருக்கொழுந்து முதலிய சகல வித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து நியாயத்தையும், தேவ அன்பையும் விட்டுவிடுகிறார்கள் இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் விடாதிருக்க வேண்டும்” (லூக் 11:42) என்று சொன்னது போல ஆலயப்
பராமரிப்புக்கும் கொடுக்க வேண்டும். அனாதைகளுக்கும் உதவ வேண்டும். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்னு நம்ம திருமறை சொல்லுகிறதப்பா”.
“சரி, சரி, உன்னுடைய பழைய பேண்ட், சர்ட் ஒரு செட் கொடு! இல்லாவிட்டால் ஒரு காட்டன் செட் புதுசா எடுத்துக்கொடு”.
“அப்பா! விலையேறப்பட்டதைத்தாம்பா ஆண்டவருக்குக் கொடுக்கணும். என்னுடைய புதிய டிரஸ்ஸில் ஒன்றைக்கொடுக்கிறேம்பா!” தயங்கிச் தயங்கிச் சொன்னாலும் தான் சொன்னதைத்தான் கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதம் சொற்களில் தொனித்தது.
“ஜெபா!” வீடே அதிரும்படி கத்தினார் டேனியல். “அது.'.பாரின் கிளாத்! ஒரு செட் 5000 ரூபாய்! வர, வர, உனக்குத் திமிர் அதிகமாகிக்கிட்டே போகுது. முடிவாச்சொல்றேன். இஷ்டம்னா ஒரு புதிய காட்டன் டிரஸ் எடுத்துக்கொடு. இல்லை உனக்கெடுத்த இரண்டில் ஒன்றைக் கொடுத்தால், அடுத்த மாதம் வரும் உன் பா்த்டேக்கு நான் ஒண்ணும் எடுக்கமாட்டேன். உன் இஷ்டம் போல் செய்!” கோபமாக கூறிவிட்டுப் போய்விட்டார். புதிது புதிதாக டிரஸ் பண்ண விரும்பும் தன் மகன், கிறிஸ்மஸ், புத்தாண்டு, அவன் பர்த்டே எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு செட்டை திரும்பத் திரும்ப போடமாட்டான் என்று எண்ணிய டேனியலின் எண்ணம் சிதைந்தது. அவனுடைய புதிய டிரஸ்ஸில் ஒன்றை ஜான் அணிந்து ஆலயம் வர, கிறிஸ்மஸ், புத்தாண்டு, அவன் பர்த்டே அனைத்திற்கும் ஒரே டிரஸ்ஸை அணிந்து கொண்டான் ஜெபா!
வக்கீல் பணியிலும் அதிக உதவியாக இருந்த ஜெபா கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தான். வீட்டிற்கு வரும் கட்சிக்காரர்களின் வாக்கு மூலங்களைக் கேட்டு, எதிரியை வீழ்த்த மிக ஞானத்தோடு குறுக்கு கேள்விகளை அடுக்குவான். வீடு ஒரு குட்டிக் கோர்ட்டு போல இருக்கும். அவனுடைய வாதத்திறமை வக்கீல் டேனியலையும், சில சமயம் வீழ்த்தும்! டேனியல் அகமகிழ்ந்து போவார். இப்பொழுதெல்லாம் தன் கட்சிக்காரர்கள் உண்மையானவர்களா? என ஆராய முற்பட்டான். சில சமயங்களில் தன் தந்தையிடம் “அப்பா! தப்பு செய்தவன் இவன்தான்! இவன் ' தண்டனைக்குரியவன். இவனுக்காக வாதாடாதீர்கள்!” என புத்தி சொல்ல ஆரம்பித்தான். ஏதேதோ கூறி சமாளித்தார் டேனியல். ஆனால், மேல் படிப்பிற்கு ஜெபாவை அனுப்பும் போது சட்டக்கல்வி பயில மறுத்து, தமிழை அவன் தேர்ந்தெடுத்த போது, அதிர்ச்சியடைந்தார். தன் மகனை ஒரு பெரிய சட்ட நிபுணராகவே கற்பனை செய்து, அவனை நீதிபதியாக்க வேண்டுமென அவர் கட்டிய கற்பனைக் கோட்டை இடிந்து சரிந்தது! தந்தைக்கும், மகனுக்குமிடையே இடைவெளி விரிந்தது! ஜெபாவை வெறுக்க ஆரம்பித்தார். இன்று ஜெபசிங்.... தன் தந்தையின் அன்பை இழந்த தமிழாசிரியராக இருக்கிறார்.
“அண்ணா” ஜெபாவின் தோள்களைப் பற்றி உலுக்கின பியூலா, “என்ன அண்ணா அமைதியாயிட்டீங்க! வேலை கிடைக்காதுண்ணு சொன்னது தப்புண்ணா” உண்மையான மனவருத்தம் அவள் சொற்களில் தொனித்தது.
“இதிலென்ன தப்பு?” இவனுக்கெங்க வேலை கிடைக்கப் போகுது? இந்தக் காலத்தில் காசில்லாம காரியம் நடக்குமா? அன்பளிப்பு, நன்கொடை, அப்படி இப்படின்னு காசைத் தள்ளினால்தான் காரியம் நடக்கும். உங்க அண்ணன் பைத்தியக்காரன். காசும் கொடுக்கக்கூடாது. பெரிய ஆள் சிபாரிசும் கூடாது என்றால் எப்படி வேலை கிடைக்கும்? பியூலா! ஒவ்வொருத்தன் டாக்டர், இன்ஜீனியர், வக்கீல்ன்னு படிக்க அலையறான், உன் அண்ணனுக்கு ஆண்டவர் ஆசீர்வாதம் கொட்டி கிடக்கு. படிக்க வைக்க ஆள் இருந்தும் “வா...த்...தி...யா...ர்” வேலை தான் அவனுக்கு வேணுமாம். பிழைக்கத் தெரியாத மடையன், இளைய குமாரன் மனந்திருந்தி வந்தது போல தன் இஷ்டப்படி ஓடும் இவனும் ஒருநாள் என்கிட்ட வரத்தான் போறான். பணத்தின் அருமையை தெரிஞ்சிக்கத்தான் 'போறான்.” வசை மாரி பொழிந்தபடி பங்களாவினுள் நுழைந்த டேனியல் தன் அறைக்குச் செல்ல படியேறினார். சொல்லம்புகளைத் தன் மார்பில் தாங்கியபடி நின்றிருந்த ஜெபசிங்கை பரிதாபமாகப் பார்த்தாள் பியூலா!.
“சார் போஸ்ட்” போஸ்ட்மேன் குரல் கேட்டு ஓடி வந்த பியூலா கவரை வாங்கி பிரித்தாள். அவள் முகம் மலர்ந்தது.
“அண்ணா! உனக்கு வேலை கிடைச்சிருச்சு!? ஆனந்தமாகக் கூவினாள். “அப்பா நீங்க தோத்துப் போயிட்டீங்க! அண்ணனுக்கு வேலை கிடைச்சிருச்சி”. படியேறிக் கொண்டிருந்த டேனியல் நின்று திரும்பினார். ஒரு நிமிடம் திகைத்தார், பின் அட்டகாசமாகச் சிரித்தார்.
“வேலை கிடைச்சிருச்சா? வேலையில் ஜாயின்ட் பண்ணி கொஞ்ச நாள் ஆகிறதுக்குள்ள இவன் கொள்ளைகளுக்கும், அவர்கள் கொள்ளைகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு மனக்கஷ்டத்தோடே வேலையை விடப் போறானா இல்லையான்னு பாரு, சேலஞ்ஜ்...! ” கூறிவிட்டுப் போய்விட்டார்.
நாட்களுக்குத் தான் எவ்வளவு வேகம், உருண்டோடியது. வள்ளுவர், மேல்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்துவிட்டார் ஜெபசிங்! தந்தையின் சொற்களில் மின்னிய உண்மைதனை உணர்ந்துகொள்ள அதிக நாட்கள் பிடிக்கவில்லை ஜெபசிங்கிற்கு!
இதன் தொடர்ச்சி சதியின் சதிராட்டம் என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.