சாந்தி என்பவருக்கு இரண்டு மூத்த உடன்பிறப்புகள் கைக்குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டனர். மூன்றாவது குழந்தையின் போது பெற்றோர்கள் குழப்பமடைந்து, ஒரு ஜோசியக்காரனிடம் ஆலோசனை கேட்டனர், அவர் ஒரு பரிகாரத்தை பரிந்துரைத்தார். ஆறு வயது சிறுமியை கோவிலுக்கு அழைத்துச் சென்று, பூசாரியின் மடியில் உட்கார வைத்தனர். பின்னர் அவளது பெற்றோர்கள் ஒரு தட்டில் நெற்பதரை வைத்திருந்தார்கள். பின்னர் இரண்டு ரூபாய் மதிப்புள்ள இந்திய நாணயத்தை அந்த பூசாரியிடம் கொடுத்தனர். இப்போது இந்த உமிக்காக இந்தப் பெண்ணை விலை கொடுத்து வாங்கி எங்கள் குடும்பத்தில் தத்தெடுக்கிறோம் என்றார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சாபம் குழந்தையைப் பாதிக்காமல் இருக்க, இந்த சடங்கு குழந்தையின் பாதுகாப்பாக கருதப்பட்டது. சாந்திக்கு 'உமிக்கு வாங்கப்பட்ட குழந்தை’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. (ஒளியூட்டும் அக்கினித்துளி; ரெவ். திலக் சாமுவேலின் வாழ்க்கை வரலாறு: முன்மாதிரி போதக ஆலோசகர்- சாந்தி திலக்) ஒரு சடங்கில் கூட பெண் குழந்தைகளின் விலை உமியாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், தேவன் மனிதர்களை விலையேறப்பெற்றவர்களாக மதிக்கிறார், அவர் மனிதகுலத்தை தவறாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத அன்புடன் நேசிக்கிறார்.
1) கிரயத்துக்கு வாங்கப்பட்டது:
விழுந்துபோன, பாவமுள்ள, பொல்லாத மனிதகுலத்தை தேவன் கிரயத்துக்கு வாங்கியிருக்கிறார். விழுந்து போன மனிதர்களுக்காக மரிக்க அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்புவதே அந்த கிரயம் (1 கொரிந்தியர் 6:20).
2) விலையேறப்பெற்ற இரத்தத்தால் வாங்கப்பட்டது:
"உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே" (1 பேதுரு 1:18-19) என்பதாக பேதுரு வலியுறுத்துகிறார். தேவ சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் அளவிட முடியாத மதிப்புடையவர்கள், தேவனுடைய குமாரன் அவர்களை மீட்க இரத்தம் சிந்தினார்.
3) அவருடைய மகிமைக்காக வாங்கப்பட்டது:
தேவன் தம்முடைய மகிமைக்காக நம்மை வாங்கினார் என்று பவுல் எழுதுகிறார். எனவே, நம் அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தமானது, நமது ஆவி, ஆத்துமா, சரீரம் என அனைத்தும் அவருடைய மகிமைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
4) ஒரு நோக்கத்திற்காக வாங்கப்பட்டது:
"நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்" (1 கொரிந்தியர் 7:23). அப்படி வாங்கிய எஜமானர், ஒரு மகிமையான நித்திய நோக்கத்துடன் செய்திருக்கிறார். எனவே, கிறிஸ்தவர்கள் மீண்டும் பாவம் அல்லது உலகத்தின் அல்லது சாத்தானின் அடிமைத்தனத்திற்குள் செல்லக்கூடாது.
கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டதன் மூலம் நான் என் மதிப்பை உணர்ந்துள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்