அழகின் ஆராதனை (மாயாபுரிச் சந்தையிலே )

தொடர் - 1

அழகிய காலை! ஆதவனின் கரங்களில் இன்னும் வெம்மைபடரவில்லை. கூடல் மாநகரிலே உயர்ந்துநின்ற கோபுரத்துடன் காட்சியளித்தது, சிலுவை நாதர் ஆலயம். கோபுர உச்சியிலே விண்முகட்டைத் தொடுவது போல் சிவப்பு வண்ண விளக்கால் சிலுவை சிறப்பாக நின்றிருந்தது. **நானே வழி'' என்னுடைய விலை மதிக்க முடியாத இரத்தத்தை சிலுவையிலே சிந்தி உங்களை பரத்துக்கு அனுப்பும் வழியானேன் எனச் சொல்லாமல் சொல்லியது செஞ்சிலுவை !

ஆராதனைக்காக ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும் ஆலய வளாகத்தினுள் வந்துகொண்டிருந்தனர். அதோ! சிவந்த நிறம், எடுப்பான நீல நிறச் சேலை, அதற்கேற்ற ஜாக்கெட்! அடர்ந்த கேசம்! அப்படியே வாரி ஒரு ரிப்பனை மட்டும்... பூ'” போல் . மடித்துக்கட்டியிருந்தாள். மல்லிகைச்சரம் அளவிற்கு அதிகமாகவே தலையில் சூடியிருந்தாள், இல்லை இல்லை தொங்கவிட்டிருந்தாள். அவளுடைய குறும்புச் சிரிப்பு பொங்கும் அந்த விழிகளில் மையிட்டு ... என்று கூறுவதை விட மையினால் வரைந்திருந்தாள் என்றால் பொருந்தும். அவள் தான் கவிதா! தோழி குளோரியுடன் ஆலயத்தினுள் நுழைந்தாள்! காளையரின் கண்கள் வட்டமிட்டன. அதை அவள் கவனிக்காமலும் இல்லை! கல்லூரியில் படிக்கும் அவளுக்கு அது பெருமையாகவும் இருந்தது. தான் மற்றவர்களைக் கவரும் வண்ணம் அழகாக இருக்க வேண்டுமென விரும்பினாள். தன்னுடன் பயிலும் மாணவிகள் இது பெரிய ஸ்டெயில் என்று கூறுவதும், மாணவர்களது அசட்டுச் சிரிப்புகளும், ஏக்கப்பார்வைகளும் இவளுக்குக் கிடைத்த பட்டங்களாகக் கருதினாள்.

ஆலய ஆராதனை முடிந்து வெளியே வந்தனர். ஒலி பெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பாயின.

- அழகும் மாயை நிலைத்திடாதே

- அதை நம்பாதே மயக்கிடுமே

- மரணம் ஒருநாள் சந்திக்குமே

- மறவாதே உன் ஆண்டவரை! 
கவிதாவிற்கு பிடிக்காதவை முதல் இரு வரிகள்! அவளால் சும்மாயிருக்க முடியவில்லை.

“இந்தப்பாடலை எழுதியவர் அழகற்றவராக இருக்க வேண்டும் அதுதான் தன் ஏக்கத்தைப் பூசி மெழுகிப் பாடியிருக்கிறார்.” ஆத்திரமாகச் சொன்னாள் கவிதா, குளோரிக்கு சிரிப்பு, சிரிப்பாக வந்தது. போடி பைத்தியக்காரி உன்னைப் போன்ற அழகுப் பைத்தியங்களுக்காகத்தான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அவர் உருவம் எப்படிப்பட்டதோ ஆனால் அவர் உள்ளம் நிச்சயம் பூரண அழகுடையதாக இருந்திருக்கும். இல்லாவிட்டால் எம்பெருமான் மீது பாடல் எழுத முடியாது !””

அழகு எப்படி மாயையாக முடியும்? எல்லோருமே அழகாயிருக்கத்தானே விரும்புகிறார்கள். அழகற்ற ஒரு பெண்ணை ஒருவன் விரும்பி மணக்கின்றானா?”

“எல்லோருமே... எல்லோருமே... என்று பேசாதே! ஒருசிலர் அப்படி இருக்கலாம் அதற்காக அழகுதான் முக்கியம் என்று பேசாதே!” செளந்தரியம் வஞ்சனையுள்ளது. அழகும் வீண் கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரியே புகழப்படுவாள் (நீதி 31;30)'' என்றுதான் வேதம் கூறுகிறது.”

அதெப்படி... செளந்தரியம் வஞ்சனையுள்ளது? அழகா இருப்பதால் யாரை வஞ்சிக்கிறோம், ஆபாசமாக உடை அணியக்கூடாது ஒத்துக்கொள்ளுகிறேன் அதற்காக அழகாக் கூடவா அணியக்கூடாது?

உரையாடல் சூடுபிடித்தது, கவிதா நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே நீ அழகாத்தானே இருக்கிறாய்? ஏன் வீண் அலங்கரிப்பு மற்றவர்களைக் கவரவேண்டும் என்ற எண்ணம் ! அந்த எண்ணம் உன்னைக் களங்கப்படுத்துகிறது. உன்னைத் தற்பெருமை கொள்ளவைக்கிறது. எத்தனை ஆண்கள் உன்னைப் பார்த்து தங்கள் எண்ணங்களைக் கறைப்படுத்திக் கொள்கிறார்களோ?! ஒருஸ்திரியை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று (மத் 5:28) '' என்றே பைபிள் கூறுகிறது.” குளோரிகுட்டிப் பிரசங்கமே செய்து முடித்தாள்.

“சாராள், ராகேல், எஸ்தர்... இவர்களைப் பற்றிக் கூறும்போது ரூபவதி... அழகானவள் என்றுதானே வேதத்தில்கூறியிருக்கிறது அப்படியானால் அழகு, வேண்டியது தானே!

அழகுகூடாது என்று சொல்லவில்லை. அலங்கரிப்பு தேவையில்லை! தயவுசெய்து மை போடுவதையாவது நிறுத்தி விடு, ”யேசபோல் பற்றிக் கூறும்போது தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை சிங்காரித்துக்கொண்டு (2 இராஜா 9:30) என்று கூறப்பட்டு உள்ளது. நல்ல குணசாலியான ஸ்திரிகள் மையிட்டதாக வேதத்தில் இல்லை. தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்கிற ஸ்திரிகளுக்கு ஏற்றப்படியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும்” (1தீமோ 2:10) என்று தான் வேதம் கூறுகிறது.

“போதுமடி உன் பிரசங்கம் மீதியை அடுத்த வாரம் வைத்து கொள்! சிரித்துக் கொண்டே பேச்சை முடித்தாள் கவிதா.

கவிதா தங்கியிருக்கும் ஹாஸ்டலை நெருங்கி விட்டனர்!

“கவிதா! ஈவினிங் எங்கும் போய் விடாதே!' காமராஜ் திடலில்” இன்றைக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது. ரெபேக்கா மிஸ் நம்மைக் கூட்டிக் கொண்டு போவாங்க! என்று கூறியபடி கவிதாவை உற்று நோக்கினாள்.

சரிடி'” கவிதா சுரத்தில்லாமல் பதில் சொன்னாள்.

மதியம் தன் படுக்கையில் படுத்தபடி ஒரு நடிகை சிரித்துக் கொண்டிருக்கும் வண்ண அட்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்!

“என்னடி கவிதா? படுத்துக் கொண்டிருக்கிறாய் மணி1 ஆகி விட்டது! போய் வார்டனிடம் பெர்மிஷன் வாங்க வேண்டாமா? மறந்துவிட்டாயா அவசரப்படுத்தினாள் தோழி மீனா.

“மறக்கலை! ஆனா... எப்படி பெர்மிஷன் வாங்கறது.
 
மீனாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது! என்னடி கடைசி நேரம் இப்படிச் சொல்றே? உன்னாலே முடியாது? உனக்கு இஷ்டமில்லை. அப்படித் தானே! இருந்துகொள். நான் என் அக்கா வீட்டிற்குப் போவதாக பெர்மிஷன் வாங்கிட்டேன் ஸ்ரீராணி நடிக்கிறாள் ! புது! படம்! அருமை படம்! நான் எங்க அக்கா வீட்டோட போறேன்'' கோபமாக வெளியேற முயன்றாள்.

ஏய்! ஏய்! மீனா நில்லுடி! கத்தினாள் கவிதா, மீனாவிற்கு கவிதாவைப் நன்கு தெரியும், சிரித்தபடி நின்றாள். இருடி வரேன்' என்றவள், ஒரு ரிப்பனை எடுத்து நெற்றியை இறுகக் கட்டினாள். விக்ஸ் கொஞ்சம் தடவினாள். தலையை லேசாக கலைத்து விட்டாள். வார்டன் அறைக்குச் சென்றாள்.

“மிஸ்! மிஸ்!'”

என்ன கவிதா? அவளை ஏற இறங்கப் பார்த்தார் வார்டன் !

மிஸ்! எனக்கு ஒரே தலைவலி! விக்ஸ் போட்டும் கேட்கவில்லை மிஸ்! எங்க ஆண்டி இன்று தன் வீட்டிற்கு வரச் சொல்லி காலையில் சர்ச்சில் என்னிடம் சொன்னார்கள்”. நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்! அபார நடிப்பு ! 

அதனால் என்ன? அடுத்த வாரம் ஆண்டி வீட்டுக்குப் போய் கொள்.

இல்ல' மிஸ் நான் ஆண்டிவீட்டுக்குப்போய் அவர்களைக் கூப்பிட்டு கொண்டு அவங்க டாக்டரிடம் போய் காட்டிவிட்டு வருகிறேன் மாலை 6 மணிக்கெல்லாம் வந்து விடுவேன் மிஸ்'' கெஞ்சின... வார்த்தைகள்.
“அவள் நடிப்பு வென்றது. அது மட்டுமல்ல! அவள் அவ்வப்போது வார்டனுக்குக் கொடுக்கும் அன்பளிப்புகள் வார்டனை சம்மதிக்க வைத்தது.”

“சரிம்மா போய் கவனித்து விட்டுவா' மகிழ்ச்சியோடு தன் அறைக்கு வந்தாள் கவிதா. உற்சாகமாகக் கிளம்பினாள்.

இருவரும் வெளியே வரும் நேரம் கதவை திடீரென திறந்து கொண்டு குளோரி உள்ளே நுழைந்தாள்! எதிர் பாராத குளோரி வரவால் மீனாவிற்கு கோபமும் வெறுப்பும் கொப்பளித்து எழுந்தது திருடன் கையில்தேள் கொட்டியது போல் கவிதா திருதிருவென விழித்தாள்.

கவிதா ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு, அசட்டுச் சிரிப்பு சிரித்தாள். “குளோரி! எனக்கு அதிகத் தலைவலி. ஆண்டி வீட்டுக்குப் போய் டாக்டரிடம் காட்டலாம் என்று போகிறேன். ஆண்டி கட்டாயம் மீட்டிங்கு வருவாங்க. நான் அவங்க கூடவே மீட்டிங்கு வந்துவிடுவேன். நீ ரெபேக்கா மிஸ்ஸுடன் வா! நாம் அங்கு சந்தித்துக் கொள்வோம். என்ன வரட்டுமா?” மடமடவென்று பேசிவிட்டு வேகமாக காலெடுத்து வைத்தாள்.

குளோரி ஒன்றுமேபதில் தரவில்லை. தன்தோழி தடம் பிறழ்கிறாளே, இது எதில் முடியுமோ'? எனக் கலங்கினாள்.

வேகவேகமாக நடந்த கவிதா கல்தட்டி விழப் போனாள். “கவிதா பார்த்துப் போ! விழுந்து விடாதே!'” இரு பொருள் பட அழுத்திச் சொன்னாள் குளோரி.

திரும்பிப் பார்த்து தலையை ஆட்டியபடி சென்றுவிட்டாள் கவிதா. “இயேசுவே என் தோழியை மாற்றப்பா! தகாத நட்பிலிருந்து விடுபட கிருபை செய்யப்பா! மனமுருக வேண்டினாள் குளோரி.

இதன் தொடர்ச்சி  கதைப் பாவை! என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  மாயாபுரிச் சந்தையிலே என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Maayaapuri Santhaiyilee - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download