தொடர் - 2
சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய சுசீலா தம்மிடம் பயிலும் மாணவிகள் மீது அன்புமழை பொழிந்தார்கள். வரலாற்று, நிகழ்ச்சிகளை அழகாக கதை வடிவில் கூறுவதில் கை தேர்ந்தவர்கள். எனவே பாடக் கருத்துக்கள் மாணவர் மனதில் தெளிவாகப் பதிந்தன.
புகைவண்டி புதிதாக நம் நாட்டிற்கு வந்த சமயம் நம் நாட்டு மக்கள் அதை வேடிக்கை பார்க்கக் கூடியதையும், அதில் பயணம். செய்தபோது மூட்டையைத் தலையில் சுமந்தபடி நின்றிருந்ததையும் நகைச்சுவையோடு எடுத்துக்கூறி மாணவிகளிடம் நம் நாட்டில் வாழ்ந்த கிராம மக்களின் அறியாமை உணர்வை எடுத்துக் கூறினார்கள்.
மாணவிகளைக் கடிந்துரைத்தது கிடையாது. ஆனால் அதேசமயம் மாணவிகள் நன்கு படிக்க வேண்டும் என்பதில் தீராத தாகம் உடையவர்கள். நிறைந்த மதிப்பெண் பெற்றவர்களை மனங்குளிர பாராட்டுவார்கள். மதிப்பெண் குறைந்தவர்களைத் திட்டாமல் சிரித்துக் கொண்டே அவர்கள் உணர்ந்து, கொள்ளும் வண்ணம் கூறுவார்கள்.
சிற்றாலய ஆராதனை எடுப்பதில் சிறப்பிடம் பெற்றவர்கள், சுசீலா ஆசிரியை., அழகிய கதைகள் அர்த்தம் மிக்கதாக அமைய ஆண்டவர் நாமம் மகிமைப்பட்டது. இளம் வாலிப உள்ளங்களை இறைவனுக்கு ஏற்புடையதாக்க தம்மால் இயன்றதைச் செய்ய முன் வந்தார்கள். இரண்டிரண்டு பேராக தம் சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பிய எம் பருமான் சுசீலாவிற்கு ஏற்ற தோழியை இணைக்க சித்தம் கொண்டார் யார் அவர்?
சாரோனின் ரோஜாவாம் எம்பெருமான் இயேசுவை தன் இதயப் பீடத்தில் ஏற்றிருந்ததால் வண்ண ரோஜாவாக மின்னிடும் வதனம் கொண்ட மற்றொரு சுசீலா, கணித ஆசிரியையாக சாராடக்கர் உயர்நிலைப் பள்ளியில் பணியேற்றார். பள்ளியின் அருகிலேயே இல்லம் இருப்பினும் கூட, கல்விச் சாலையின். சட்டப்படி விடுதியில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
கணித ஆசிரியை சுசீலாவும், வரலாற்று ஆசிரியை சுசீலாவும் சந்தித்துப் பேசிய ஆரம்பமே அற்புதமானதுதான். 'இளமையில் உன் சிருஷ்டிகரை நினை' என்ற திருமறை வாக்கிற்கிணங்க இளமைப் பருவத்திலேயே தாயினும் மேலான அன்புடைய தயாபரன் இயேசுகிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வினை சமர்ப்பித்திருந்த இருவரும் சந்தித்தால் உரையாடல் எப்படி இருக்கும்?
“சேப்பல் போகிறேன்; வருகிறீர்களா?” ரோஜா மலர் சுசீலா அழைக்க (கணித ஆசிரியை),
“ஓ வருகிறேனே!'' என லீலிமலர் சுசீலா சம்மதிக்க, சிற்றாலயம் சென்றனர். சர்வ வல்லவர் ஆசீர்பொழிய இவர்கள் நட்பு வளர்ந்தது. இருவருக்கும் ஒரே அறை அமைந்ததால், நட்பு ஆல் போல் தழைத்து ஓங்கியது.
வேதவாசிப்பு, ஜெபம், தியானம், இவர்கள் மூச்சாகியது. ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, உன்னதர் வழியில் ஒற்றுமையுடன் நடந்தனர்.
ஞாயிறு மதிய வேளைகளில் விடுதிப் பிள்ளைகளுக்கு ஜெபக் கூட்டம் நடத்தினார்கள். இரு சுசீலா சகோதரிகள் பாட்டுப்பாடி, பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தனர். கதை கூறுவதில் லீலிமலர் சுசீலா திறமை பெற்றவர்கள் அல்லவா? எனவே கதை கூறும் பொறுப்பு அவர்களைச் சார்ந்ததாக இருந்தது. ஜெபவேளை ஆரம்பித்தது. இவர்களின் இதய வேட்கையை அறிந்த இயேசு பெருமான் இன்னருள் பொழிய, பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். பிள்ளைகள் பாவப்பாரம் அடைந்தனர். கண்ணீர் விட்டுக் கதறி, தங்கள் பாவத்தை அறிக்கையிட்டனர். தேவனுடைய மந்தையில் அநேக ஆடுகள் அடைக்கலம் புகுந்தன. காடுமேடு ஓடிய ஆடுகள் கர்த்தர் இயேசுவின் தோளை அலங்கரித்தன. பிள்ளைகளிடையே ஜெபக்குழுக்களை ஆரம்பித்து வைத்தனர்.
ஞாயிறு ஜெபக்கூட்டத்திற்கு வரும் மாணவிகளின் தொகை நாளுக்கு நாள் கூடியது. டோனாவூர் ஐக்கியத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் விடுதியில் தங்கிப் படித்தனர். தாமரை மொட்டுகளின் நேசியாம் ஏமி கார்மைக்கேல். அம்மையார் உருவாக்கிய டோனாவூர் ஐக்கியத்தில் அன்பில் தழைத்து வளர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அன்பினை சுசீலா சகோதரிகள் மூலம் பெற்று மகிழ்ந்தனர். ஜெபத்திலும் வளர்ந்து, தேவனோடுள்ள தொடர்பில் பிணைக்கப்பட்டார்கள்.
'இரு ஆசிரியைகளின் “பிறந்த நாள்' பற்றி அறிந்து வைத்துக் கொண்டு, பிறந்த நாளன்று எப்படியாவது பள்ளிக்குப் போகும் முன் இவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் அருகே வந்து “ஹேப்பி பர்த்டே'” பாடி தங்கள் அன்பு ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வார்கள். ஆசிரியர் மாணவிகள் தொடர்பு ஆரோக்கியமான வகையில் அமைந்திருந்தது.
அதிகாலையில் எழுந்து, ஆண்டவர் பாதத்தில். காத்திருப்பது, வேத வாசிப்பு, தியானம், என அதிக நேரம் செலவிட்டபின், பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாவதால், சுசீலா சகோதரிகள் அநேக நாட்கள் காலை சிற்றுண்டி அருந்துவதே இல்லை. அவர்கள் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆத்தும ஆகாரமே அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது.
தேடி வந்த உறவு :
சுசீலா அவர்கள் சாரா டக்கர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, திசையன்விளையைச் சார்ந்த ஹெப்சிபா என்ற பெண்மணி அக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் (பி.எஸ்.ஸி) படித்துவிட்டு ஆய்வுக்கூட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார்கள். மதிப்பிற்குரிய டெய்சிபால் என்ற விரிவுரையாளர் (லெட்சரர்) மூலம் இரட்சிப்பின் அனுபவத்தைத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு, அவர்கள் நடத்திய ஜெபக்குழுவிலும் பங்கு பெற்று, தன் ஆவிக்குரிய வாழ்வினில் சீராக வளர்ந்து கொண்டு வந்தவர்கள் சுசீலா.
“மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகபிரகாசிக்கக்கடவது'” என்ற திருமறை வாக்கிற்கிணங்க சுசீலாவின் ஒளி விரிவுரையாளர் ஹெப்சிபாவைக் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. ஹெப்சிபா பி.டி. முடித்து திருமணமுமாகி விருதுநகரில் சுசீலாவின் அன்னையார் பணியாற்றி வந்த பள்ளியிலேயே பணியில் அமர்ந்தனர். வீடுகளும் அருகருகே அமைந்திருந்ததால் இரு குடும்பங்களுக்கிடையே நல்லதொரு நட்பு நிலவி வந்தது.
சாரா டக்கர் உயர்நிலைப் பள்ளியில் சுசீலா பணியாற்றி வந்தபோது, அவர்களோடு திரு. மாசிலாமணி - பரிமளம் தம்பதியினரின் இளையமகள் அன்பு பணியாற்றி வந்தார். தேவ அன்பினால். ஈர்க்கப்பட்டிருந்த அன்பு, தம் வீட்டில் இளையவராகப் பிறந்திருப்பினும், இல்லத்தின் காரியங்களைக் கவனிப்பதிலும் ஆலோசனை கூறுவதிலும் சற்று முதிர்ச்சி பெற்றவராகவே திகழ்ந்தார். எனவே மூத்த அண்ணன் பேட்ரிக் அவர்களுக்கு பெண் பார்ப்பதிலும் கவனம் கொண்டார்.
பரிசுத்த தெய்வமாகிய பரமன் இயேசுவின் புகழ்தனை பரப்பிடும் பரிசுத்தனாக தன் புதல்வன் திகழ வேண்டுமென தன் மகன் கருவில் இருக்கும் போதே வேண்டுதலிலும், தியானத்திலும், தன்னை ஒறுக்கும் செயல்களிலும் ஈடுபட்டவர்கள் திருமதி. பரிமளம் அம்மையார் அவர்கள். தன் மகனை கருவில் சுமந்த காலங்களில் எந்நிலையிலும், எள்ளளவும். கோபப்படாது, சாந்த சொரூபியாக தன்னைக் காத்துக் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் ஈன்றெடுத்த திருப்புதல்வன் பேட்ரிக், அன்னை எதிர்பார்த்தபடியே வளர்ந்தார்.
அழகும், அறிவும், ஆற்றலும், அமைதியும், ஞானமும், தியாகம், தூய்மையும், பரிசுத்தமும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும் வண்ணம் வாழ்ந்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் விரிவுப் பணி அதிகாரியாக அமர்ந்தார். உலகப் பணியோடு உன்னதர் பணியினையும் செய்ய நண்பர் சுவிசேஷ ஜெபக் குழுவில் இணைந்து இறை பணியாற்றி வந்தார். இத்தகைய தன் அருமை அண்ணனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையாக தன்னோடு பணியாற்றும் சுசீலா ஏற்றவரே என அன்பு கருதினார்.
அன்பு அவர்கள் முயற்சியாலும், ஹெப்சிபா அவர்களின் ஈடுபட்டாலும். திருமணப் பேச்சு நடைபெறுவதற்கான வழி தெரிந்தது.
பெண் பார்க்கும் படலம் :
பேட்ரிக் பற்றி அறிந்த சுசீலாவின் தந்தை, அவரை நேரிலும் கண்டார். கண்ணுக்கு அழகாக, கருத்துக்கு இருப்பிடமாக, அறிவிலும், ஆற்றலிலும், சிறந்து, நல்ல பதவியிலும் அமர்ந்திருந்த பேட்ரிக்கை தம் மருமகனாக்கிட உறுதிகொண்டார். சுசீலாவைக் கேட்டு வந்த அனைத்து வரன்களையும் உதறித் தள்ளினார். மாமனார் உள்ளத்தே மருமகன் வீற்றிருந்தார்.
விடுதியிலிருந்து பள்ளிக்கு வரும்போது சுசீலாவைப் பார்ப்பதற்கு. தலைமையாசிரியையின் அனுமதி பெற்று, வழியிலே காத்திருந்தார் பேட்ரிக் தம். பெற்றோருடன்! சுசீலா தன் தோழியோடு வர, அன்பு அவர்கள் தன் அண்ணனிடம் சுசீலாவைச் சுட்டிக்காட்ட, நிலைமையைப் புரிந்த சுசீலா நாணம் மேலிட வெகுவேகமாக பள்ளிக் கட்டிடத்திற்குள் நுழைந்து விட்டார். பெண்ணின் முகத்தை பேட்ரிக்கால் பார்க்க இயலவில்லை.
பின் விடுதிக்கு விஜயம் செய்த பரிமளம் அம்மையார் சுசீலாவைப் பார்த்தார். அவர் மனது நிறைவு பெற்றது.
தன் மகள் அன்புவிடம் பரிமளம் அம்மையார், '“அன்பு! நீ தேர்ந்தெடுத்த பெண் சிறந்தவளே. அவளுடைய இரு கரங்களும் முழங்கைக்கு சற்று கீழ் காய்ப்பு காய்த்திருக்கிறது. கட்டிலின் மேல் கையை வைத்து முழங்காலில் நின்று அதிகநேரம் ஜெபிப்பதனால்தான் இந்தக்காய்ப்பு. ஜெபத்தில் அதிகநேரம் தரித்திருக்கும் இந்தப் பெண் நம் பேட்ரிக்கிற்கு ஏற்றவளே!'' வருங்கால மாமியார் தம் மருமகளைக் குறித்துத் தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் மகன்?
அவருக்கென்று சில: தெரிந்தெடுப்புகள் இருந்தன. பெண் இரட்சிக்கப்பட்டவளாக இருக்க வேண்டும். ஊழியத்தில் ஈடுபாடு உடையவளாக இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தமாகவும், அதேசமயம் நவீன நாகரீகங்களால் அசைக்கப்படாதவளாக இருக்க வேண்டும். தற்சமயம். வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், திருமணம் முடித்ததும், வேலையை விட்டு விட்டு, தனக்கு ஊழியத்தில் உதவியாக இருக்க வேண்டும். ஒருவேளை தேவன் தன்னை முழுநேர ஊழியத்திற்கு அழைப்பாரானால் தான் பார்த்த வேலையை இராஜினமா செய்ய சம்மதிக்கிறவராக இருக்க வேண்டும்.'' இத்தகைய தன்னுடைய தெரிந்தெடுப்புகளுக்கு சம்மதம் தெரிவிப்பவளே தனக்கு மனைவியாகத் தகுதியுடையவள் எனக் கருதி வந்த பேட்ரிக், பெண்ணின் கருத்துக்களை அறிய துணிந்து, சுசீலாவின் தந்த ஆர்.வி. சகாயம் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
தந்தை முன்னிலையில் தான் படிக்கும் போதே மதிப்பிற்குரிய டெய்சிபால் விரிவுரையாளர் நடத்திய ஜெபக்குழுவில் தான் இரட்சிக்கப்பட்ட விதத்தையும், படிக்கும்போதே பாளையங்கோட்டை சந்திப்பு (ஜங்ஷன்) அருகேயுள்ள மீனாட்சிபுரம் ஆரம்பப்பள்ளியில் ஞாயிறு ஓய்வுநாள் பள்ளி நடத்தியதையும், தன் தோழியுடன் தான் நடத்தி வரும் ஜெபக்குழு பற்றியும், தனக்குள்ள ஊழிய வாஞ்சை பற்றியும், அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி அனுப்பினாள் அந்த நங்கை நல்லாள். இவை பேட்ரிக்கிற்கு திருப்தியளித்தாலும் கூட, எதிர்கால மனைவியின் எழில் முகம் காணவும், முழு நேர ஊழியத்திற்கு அழைப்பு வந்தால் தனக்கு உறுதுணையாய் அமைவாளா? என்பதை நேரில் கேட்டறியவும் ஆவல் கொண்டார்.
விளைவு...?
மேற்கூறிய: புகைவண்டியில், பெற்றோர் அனுமதியுடன், அன்பு அன்னையின் முன்னிலையில் சந்திப்பு!
இதன் தொடர்ச்சி புயலிடைப் பொன்விளக்கு! என்ற தலைப்பில் உள்ளது.
இந்த கதை அணையா தீபம் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.