சீயோன் பாட்டி சீயோனுக்குப் போகுமா?

“வாங்க! தம்பி வாங்க!” வாயெல்லாம் பல்லாக வரவேற்றார் அந்தப்பாட்டி மனமெல்லாம் குளிர உள்ளே நுழைந்தார் ஜாண்.

“உங்களை ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சேன். தம்பி ஊழியமெல்லாம் செய்றீங்களாமே!” ஆவலோடு விசாரித்தார் பாட்டி.

“ஆமாங்க பாட்டி! ஏதோ என்னால முடிந்ததைச் செய்யறேன். நாம்தான் மிஷனெரியாகப் போகமுடியலை. போறவங்களையாவது தாங்கலாமில்லையா? அதுதான் மாதாமாதம் காணிக்கை வசூல் செய்து அனுப்புவேன்.”

“ரொம்ப நல்லகாரியம் தம்பி! இராக்லாந்து எப்படி வாழவேண்டியவர் ? செல்வச்சீமானா வாழ வேண்டிய அவர் அத்தனையும் விட்டுவிட்டு தொப்பியிலே கூழை வாங்கிக் குடிச்சிட்டு நமக்கு இயேசுவைப்பற்றி சொல்லலைண்ணா, நாம் எப்படி கிறிஸ்துவை அறிந்திருக்க முடியும்? எத்தனை மிஷனரிகள் நமக்காக உடல்பொருள் ஆவி அனைத்தையும் இழந்திருக்காங்க? பெற்றுக்கொண்ட நாம் பிறருக்குக் கொடுக்க வேண்டாமா?”

பாட்டியின் ஆர்வம் ஜாணைத் தடுமாற வைத்தது. ஐயோ முன்னாலேயே பாட்டியைச் சந்தித்திருந்தால் நிறைய கொடுத்திருப்பாங்களே என எண்ணி ஏங்கினார்.

“உண்மைதான் பாட்டி! உங்கமாதிரி ஆர்வம் உள்ளவங்க யார் இருக்காங்க பாட்டி? மிஷனரிப் பணியைப்பற்றி தெளிவாக தெரிஞ்சிக்காம யாரைப் பார்த்தாலும் அதாவது எந்த இயக்கமும் பணந்தா, பணந்தா என்றுதான் கேட்கிறாங்க , அப்படின்னு வெறுப்போடு, சொல்லி விரட்டுகிறார்கள். சிலர், வந்து கேட்டுட்டான் ஏதாவது கொடுப்போம்ன்னு நினைச்சு கொடுக்கிறாங்க. ஒருசிலர்தான் பாட்டி உண்மையா மிஷனரி பணியின் தேவையறிந்து கொடுக்கிறாங்க பாட்டி!” மனதிலிருந்ததை அப்படியே கொட்டிவிட்டார் ஜாண்.

“என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல் பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும் நான் என் முழுப்பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும் அது வேண்டியதாயிருக்கிறது” என்று சங்கீதத்தில் தாவீது கூறுகிறார். கவலைப்படாதீங்க தம்பி! கொஞ்சப் பேர் மனநிறைவோடு தர்றவங்ககிட்டே வாங்கினால் போதும். தேவன் மகத்துவமான பெரிய காரியங்களைச் செய்வார். மாதாமாதம் என்னிடம் வந்து வாங்கிக்கங்க... ஐய்யய்யோ! உங்களுக்கு ஒண்ணுமே தரலையே! காபி... சாப்பிடுறீங்களா தம்பி?”

“இல்லை பாட்டி வேண்டாம்! நீங்க என் மன பாரத்தைப் பகிர்ந்து கொண்டீர்களே, அதுவே போதும்!”

“இந்தாங்க தம்பி (10ரூபாய்.” 10ரூபாய் நோட்டு பாட்டியின் கையைவிட்டு ஜாணுக்குச் சென்றது.

தனது பையைத் திறந்து ரசீது புத்தகத்தை எடுத்தவர். “பாட்டி உங்க பேரு...?” என்றார்.

“எதுக்கு தம்பி?.ரசீதா அதெல்லாம் வேண்டாம். கடவுளுக்குக் கொடுப்பதற்குக் கணக்கு வேண்டுமா?”

“அப்படியில்லை பாட்டி! பிறர் குறைகாணவிடாதபடி எல்லாவற்றிலும் நாம் ஒழுக்கமாக உண்மையாக இருப்பது நல்லது!”

“சரி தம்பி! வலதுகை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற கொள்கையுடையவள் நான், சீயோன் பாட்டி என்று போட்டுக் கொள்ளுங்கள்.”

பாட்டிக்கு எவ்வளவு நல்ல தயாள மனது என எண்ணி வியந்தார். “ஜெபிப்போமா?” என்றார். இருவரும் முழங்கால்படியிட்டனர்.

கண்ணீர் முத்து முத்தாக சிதற , மிஷனரிகளுக்காவும் வியாதியஸ்தா்களுக்காகவும், சிறுவர் வாலிபர் முதியோர்களுக்காகவும் ஏன், உலகிலுள்ள ஒவ்வொருவருக்காவும் மன்றாடி பாட்டி உருக்கமாக ஜெபித்து முடிக்கவும், சுருக்கமாக ஜாண் ஜெபித்து விடைபெற்றார்.

வெளியே வந்தவரை பக்கத்து வீடுகளில் உள்ள தலைகள் எட்டிப் பார்த்தன.

சில நாட்கள் கழித்து மிஷனரிப் பணி பற்றிய எழுதிய புத்தகத்தை பாட்டியிடம் கொடுத்துவிட்டு வரலாம் என்று சென்றார் ஜான். வீட்டை நெருங்கும் முன்னே பாட்டியின் கர்ணகடூரக் குரல் வரவேற்றது.

“எத்தனை தடவை சொன்னாலும் அறிவிருக்காது. யார்வந்து இப்படி குப்பை போட்டது? அவ அவ பிள்ளையை அடக்கி வைக்க தெரியாதா?

பக்கத்து வீட்டில்: “ஏ! சனியனே! அங்க போகாதன்னா கேட்கிறையா? போவையா? இனி போவையா!” என்று கேட்டுக் கொண்டே மொந்மொந்தென்று 2 வயது குழந்தையை அடித்துக்கொண்டிருந்தாள் ஒரு மாது.

“அம்மா! அம்மா!” என கதறிக் கொண்டிருந்தது குழந்தை! பாட்டி பேசாமல் உள்ளே போய்விட்டாள்.

எதிர்வீட்டிலிருந்து திருநீறுபூசி குங்குமம் இட்டிருந்த முதியவள் ஓடி வந்து குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

“அந்த பிசாசு தான் விவஸ்தையில்லாம பேசினா நீயும் பச்சைக் குழந்தையைப் போட்டு அடிக்கிறையேடி! நான்: வாசலை பெருக்கி விட்டுடுறேன்னு சொல்லிட்டா விவகாரம் முடிஞ்சி போயிடும். போ..... போய் பெருக்கி விட்டுடு!” 
பாட்டி வீட்டு வாசலில் சிதறி இருந்த ஒருசில வேர்க் கடலைத் தோல்களை பெருக்கினாள். இத்தனையும் சாலையில் நின்ற படி பார்த்துக் கொண்டிருந்த ஜாண் மனதில் வேதனை எழும்பியது. பாட்டியின் வீட்டுக்குப் போகாமலேயே திரும்பி விட்டார்.

ஒரு வாரம் ஓடியது. பாட்டிக்குச் சுகமில்லை என கேள்விப்பட்டு பாக்கச் சென்றார். படுக்கையில் முக்கி முனங்கிக் கொண்டிருந்த பாட்டியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. படுக்கையில் பெரிய பைபிளும் சில கிறிஸ்தவப் பத்திரிக்கைகளும் இருந்தன. ஜாணைக் கண்ட பாட்டி முகம் மலர, “வாங்க தம்பி! இந்த மாதம் ஏன் ரொம்ப லேட்?” என்றார். பாட்டியின் கேள்விக்கு பதில் கூறாமலேயே,

“உங்களுக்கு சுகமில்லையா பாட்டி? எந்த டாக்டர்கிட்டே டிரீட்மெண்ட் எடுக்கிறீங்க” அக்கறையுடன் விசாரித்தார்.

“தம்பி... பெரீ...ய டாக்டா் இருக்கிறாரே? அவர் தான். இயேசு! அவர்கிட்டதான் காட்டுறேன்!” சிரித்தார், “மருந்து மாத்திரை எதுவும் சாப்பிடமாட்டேன் தம்பி!” பெருமை அவர் முகத்தில் பொங்கி வழிந்தது.

“மருந்து சாப்பிடுவதில் தவறில்லை பாட்டி! நமது விசுவாசத்தை கடவுள் மீது வைக்கணும். மருந்து மாத்திரையில் மாத்திரம் நம்பிக்கை வைப்பதுதான் தவறு”
“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்லியிருக்கிறாரே! விசுவாசத்துடன் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று சொன்ன தேவன் சுகம் தரட்டும். எனக்கு விசுவாசம் இருக்கு தம்பி, அவர் சுகம் தருவார்” என்றவர் தன் தலையணைக்கடியில் இருந்த பர்ஸை எடுத்து பத்து ரூபாயை ஜாணிடம் கொடுத்தார்.

ஒரு வழியாக ஜெபித்து விடை பெற்றார் ஜாண்.

நாட்கள் நகர்ந்தன: பாட்டியைப் போய் பார்க்கச் சென்றவரை பூட்டியிருந்த வீடு தான் வரவேற்றது. அந்நேரம் அங்கு வந்த ஜாணிடம் நண்பன் குமார்,

“என்ன ஜாண், பாட்டியைப் பார்க்க வந்தையா? பாட்டிக்கு ரொம்ப சுகமில்லாமல் போனதால் அவர்களுடைய உறவினர் வீட்டுக்கு வேறு ஊருக்குப் போய்விட்டார்கள். எல்லா சாமான்களையும் லாரியில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். வீட்டைக் காலிபண்ணி விட்டார்கள்.”

“பாட்டிக்கு பிள்ளை குட்டி ஒண்ணுமில்லையே! ஒரு ஆளு லாரி 'அளவிற்காக சாமான் இருந்தது?” ஆச்சரியமாக கேட்டார் ஜாண்.

“பாட்டி சாமான் பாதி என்றால் மீதி ஏழை ஜனங்கள் கொடுத்த அடகு சாமான்கள். அண்டா குண்டா பானை, குடம், ஜாண்! ஏழு மணி நேரம் ஜெபம் பண்ணினா போதாதுப்பா! சாட்சி, வாழ்க்கையில் இருக்கணும். ஏழை ஜனம்.... எவ்வளவு வட்டி கொடுத்திருக்கும். அசலை மட்டும் கொடுத்து பாத்திரத்தை மீட்டுக் கொள்ளுங்கள் என்றால், கடனோ உடனோ வாங்கி அந்த மக்கள் பாத்திரத்தை திருப்பி இருப்பர். இல்லாவிட்டால் தான் போகும் முகவரியையாவது கொடுத்து, வந்து திருப்பிக் கொள்ளச் சொல்ல வேண்டும். இந்தப் பாட்டி மண்டையைப் போட்டுவிட்டால், அதுக்கு உயிர் போச்சு! அடகு வைத்த ஜனங்களுக்கு உடமை போச்சு! என்ன கிறிஸ்தவங்களோ?” பெருமூச்சுடன் நிறுத்தினார் குமார். வெட்கத்தால் தலை கவிழ்ந்தார் ஜாண்.

“சீயோன் பாட்டி” என்று பேரெழுதச் சொன்னதை நினைத்தார்.

“சீயோன் பாட்டி சீயோனுக்குப் போகுமா? என்ற வினா அவர் சிந்தனையில் பூதாகரமாக எழுந்தது.

இந்த கதை இதயம் தந்த பரிசு என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story இதயம் தந்த பரிசு - கதை

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download