பொதுவாகவே நாம் அனைவரும் பிரச்சனையற்ற வாழ்க்கை பாதையையும், ஒவ்வொரு நாளையும் வருத்தமின்றி கழிக்கவும் மற்றும் விரக்தியோ வேதனையோ இன்றி நாட்கள் செல்லவும் விரும்புகிறோம். ஆனால் ஒழுங்கற்ற இந்த உலகில் இது சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எகிப்தில் முதற்பேறான மரணத்தின் வாதைக்குப் பிறகு பார்வோன் இஸ்ரவேலைப் போக அனுமதித்தான். இருப்பினும், தேவன் அந்த ஜனங்களை சமீபமான வழியில் அழைத்துச் செல்லாமல், வேறு வழியில் அதாவது சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் போகப் பண்ணினார், இது 'கடல் மார்க்கம்' என்று அழைக்கப்பட்டது, இது எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல மிகவும் பொதுவான பாதையாகும். அந்த வழி வர்த்தகம் மற்றும் உணவு விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டது, மேலும் எளிதாக இருக்கும் (யாத்திராகமம் 13:17-18).
இறையாண்மை:
தேவன் இறையாண்மையுள்ளவர், அவர் காணக்கூடிய மற்றும் காணப்படாத அனைத்திற்கும் ஆண்டவர். அவர் தனது மக்களை எவ்வாறு வழிநடத்த வேண்டும் மற்றும் பூமியை ஆள வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்கிறார்.
ஆபத்து:
எகிப்திய காவற்படைகளும் முகாம்களும் வழியில் இருப்பதை இஸ்ரவேல் புத்திரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். யுத்தத்தைக் கண்டால், எவ்வித பயிற்சியும் பெறாத அடிமைகள் மனமடிந்து எகிப்திற்குத் திரும்பலாம்.
ஞானம்:
தேவன் ஞானமுள்ளவர்; அவர், எதிர்காலத்தையும் அறிந்தவர் மற்றும் அறிய முடியாத சூழல்களையும் அறிந்தவர். ஒருவேளை எகிப்திய முகாம்களைத் தவிர, வேறு ஆபத்துகளும் இருந்திருக்கலாம். படைவீரர்களாகவும் குடிமக்களாகவும் இருக்க அடிமைகளைப் பயிற்றுவித்து அவர்களைச் சித்தப்படுத்தக்கூடிய பாதுகாப்பான வழியை தேவன் தேர்ந்தெடுத்தார்.
திட்டமும் நோக்கமும்:
தேவனின் பயணத் திட்டம் ஒரு திட்டவட்டமான நோக்கத்தைக் கொண்டிருந்தது. வனாந்தர பயணத்தின் செயல்முறை அவர்களை தேவனின் மக்களாக பயிற்றுவிக்கும். மீட்கப்பட்ட ஜனங்களை மாற்றியமைக்கப்பட்ட மக்களாக மாற்றும் பெரும் பணி இருந்தது.
பயிற்சி:
யாத்திரை அல்லது பயணம் தேசத்திற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டது. இஸ்ரவேல் சந்ததியினருக்கு பயிற்சி அளித்ததில் பல அம்சங்கள் உள்ளன. முதலில், விசுவாசத்தில் பயிற்சி. எல்லா சூழ்நிலைகளிலும் அவர்கள் தேவனை விசுவாசிக்க முடியும் என்று தேவன் அவர்களுக்கு நம்பிக்கையைப் பற்றிக் கற்றுக் கொடுத்தார். அவர்களுக்கு முன்னால் இருக்கும் செங்கடலும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் எகிப்திய இராணுவமும் அவர்களைப் பயமுறுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தேவனை நம்பினார்கள்; அந்த விசுவாசத்துடன் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆம், (1 கொரிந்தியர் 10:2 )ல் "எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்" என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, கர்த்தர் அவர்களுக்கு வழிபாட்டு முறையைக் கற்பித்தார். கூடாரம் அமைக்கப்பட்டது மற்றும் பரிசுத்த தேவன் யார், அவருடைய எதிர்பார்ப்புகள் என்ன மற்றும் அவரின் பத்து கட்டளைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவதாக, அவர்கள் கர்த்தருக்குக் காத்திருக்கவும் கற்றுக்கொண்டார்கள். நான்காவதாக, அவர்கள் ஒன்றுக்குள் ஒன்றானார்கள். ஆம், தேவ பிள்ளைகளானார்கள்.
அவருடைய வழியைப் பின்பற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்