தாவீதுக்கும் கோலியாத்துக்கும் நடந்த யுத்தம் பற்றிய வேதாகம விவரம் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இது ஒரு பிரபலமான ஞாயிறு பள்ளி கதை, இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஊக்கமளிக்கிறது. முதல் ராஜாவான சவுல் இஸ்ரவேல் தேசத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்ல தவறிவிட்டான் என்பது பரிதாபமே. கோலியாத் இஸ்ரவேலை காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்து வந்து அதாவது 80 முறை மிரட்டினான் (1 சாமுவேல் 17:16).
1) நிபந்தனை விதிக்க எதிரியை அனுமதித்தான்:
சவுலாக முதற்படி எடுக்கவில்லை அல்லது முதலில் செயல்படவில்லை. கோலியாத் தனக்கு எதிராக சண்டையிட ஒருவனை வரும்படி அழைத்தான்; கிட்டத்தட்ட அது ஒரு கௌரவத்துக்கான போராட்டம். சவுல் அதை மறுத்து, இஸ்ரவேல் இராணுவத்தை பெலிஸ்திய இராணுவத்துடன் யுத்தமிட செய்திருக்கலாம். உண்மையில், கோலியாத் சவுலைதான் வம்பிழுத்து கொண்டிருந்தான். எல்லா இஸ்ரவேலர்களிலும் மிக உயரமானவனாக சவுல் இருந்ததால் அவனும் ஒரு விதத்தில் ராட்சதனாக தான் இருந்தான் (1 சாமுவேல் 9:2). கிறிஸ்தவ வாழ்க்கையில், சாத்தானுக்கு சோதனையிட இடமோ வாய்ப்போ அனுமதியோ கொடுக்கக்கூடாது. அப்பாவியான விசுவாசிகளை சாத்தான் எளிதில் ஏமாற்றிவிடுவான்.
2) பயம்:
கோலியாத் தன்னை ஒரு சிறந்த யுத்தவீரனாகக் காட்டிக்கொண்டான். இளமைப் பருவத்திலிருந்தே சிறந்த பயிற்சியுடன் கூடிய யுத்த வீரன் என அவனுக்கு நற்சான்றிதழ்கள் இருந்தன (1 சாமுவேல் 17:33). உண்மையில், பெலிஸ்தியர்களின் ஆயுதங்களும் இஸ்ரவேலின் ஆயுதங்களும் சமமாக தான் இருந்தன, ஆனாலும் சவுல் பயந்தான். அனேகமாக, கோலியாத்தின் திறமையும் அனுபவமும் சவுலுக்கும் இஸ்ரவேலின் சேனைக்கும் அச்சுறுத்தும் காரணியாக இருந்திருக்கலாம். பயம் எந்த மனிதனையும் முடக்குகிறது. சவுலின் பயமும் விரக்தியும் அவனை சரியான முடிவுகளை எடுக்கவிடவில்லை.
3) விசுவாசமின்மை:
சவுலுக்கு காணாமல் போன மற்றொரு அம்சம் விசுவாசம். தாவீதுக்கு அபரிமிதமான விசுவாசம் இருந்தது மற்றும் கர்த்தருடைய நாமத்தின் மீது மட்டுமே நம்பிக்கை இருந்தது (1 சாமுவேல் 17:45). தாவீது தனது ஆயுதமான கவணையும் கூழாங்கற்களையும் சார்ந்து இருக்கவில்லை. சவுலுக்கு தேவன் மீது விசுவாசம் இல்லை, அவருடைய வல்லமையின் மீதோ அல்லது இறையாண்மை ஆட்சியின் மீதோ நம்பிக்கை இல்லை. அவன் யுத்தத்தை மனித அல்லது இராணுவ கண்ணோட்டத்தில் அணுகினான்; தெய்வீக கண்ணோட்டத்தில் அல்ல. சவுல் தனது பாதுகாப்பிற்காகவும் அல்லது இஸ்ரவேலின் வெற்றிக்காகவும் தேவனை நம்ப முடியவில்லை.
4) கர்த்தருடைய ஆவி நீங்கிற்று:
தேவன் சவுலை அபிஷேகம் செய்தார் மற்றும் ஒரு வெற்றிகரமான இராணுவத் தலைவராக இருந்தான். இருப்பினும், கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கிய போது, இஸ்ரவேல் தேசத்தை ஆள்வதற்கான தைரியத்தையும் அதை நிலை நிறுத்துவதற்கான வேட்கையையும் இழந்தான் (1 சாமுவேல் 14:52; 16:14). கரத்தருடைய ஆவியின்றி அவன் தேவனின் சித்தத்தைப் பகுத்தறியும் அல்லது அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதற்கான திறனை இழந்தான்.
நான் சவுலைப் போல பயப்படுகிறேனா அல்லது தாவீதைப் போல தைரியம் கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்